உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கக் கூடிய தருணம்தான். பிரசவ வேதனைக்குப்
பின் கண்விழிக்கும் தாய், தன் குழந்தையை உச்சி முகர்கின்றது போன்ற இனிய நிகழ்வு.
“பழைய பேப்பர்”நூல் வெளியீட்டு விழாவைத்தான் சொல்கிறேன். நேற்று காலை மிகவும் சிறப்பாகவே நடந்தேறியது, உங்களின் வாழ்த்துக்களுடன்.
காலை 10 மணிக்கு நிகழ்வுத் தொடக்கம். முன்னதாகவே வந்திருந்து இன்ப
அதிர்ச்சியளித்தனர் மேனாள் திட்டக்குழுத் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன்,
எழுத்தாளர் மாம்பலத்தார் ஆகியோர்.
சிறப்பு விருந்தினர்கள் வந்துவிட்டனர். பார்வையாளர்கள்? காலை 9.30
மணிவரை வெளியிட வேண்டிய நூலும்கூட சென்னையில் இருந்து வந்துச் சேரவில்லை. எனக்குக்
கொஞ்சம் வயிற்றைக்
கலக்கத்தான் செய்தது.
நேற்றைய தினம் என்பது பலரது இல்லங்களில்
விசேஷ நிகழ்வுகள் நடந்தேறிய நாள். கடும் உழைப்பை செலுத்தியிருக்கிறோம். கூட்டம்
வருமா? வாயிலின் மீதே என் பார்வையிருந்தது.
அதிகாலையில் இருந்தே லேசான நெஞ்சு வலி
வேறு அவ்வப்போது தலைக்காட்டிக் கொண்ழருந்தது.
விழுப்புரம் மண் எப்போதும் படைப்பாளிகளை
கைவிடாது எனும் நம்பிக்கை ஏற்பட்டது. என் உழைப்பு வீண் போகவில்லை. இலக்கிய இரசனை
மிக்க நல்லுங்கள் வந்து சேர்ந்தனர். அந்த இடம் நிறைவானது. 9.50மணிக்கு ஓரளவுப்
புத்தகங்களும் அரங்கிற்கு வந்துச் சேர்ந்தது.
என் மனசும் லேசானது.
குறித்த நேரத்தில் தொடங்கிய விழா, அறிஞர்
பெருமக்களின் வாழ்த்துக்களுடன் குறித்தக் காலத்தில் நிறைவுபெற்றது.
நூல் வெளியீட்டு விழாவுக்கு நான் நேரில்
சென்று அழைக்காவிட்டாலும் பெருந்தன்மையோடு பங்கேற்று, நூலினை வெளியிட்டுச்
சிறப்புச் செய்த, பெரிய மனசுக்குச் சொந்தக்காரர் மாநில திட்டக்குழுவின் முன்னாள்
துணைத்தலைவர் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் அவர்களுக்கும், இத்தகு நல்ல மனிதரை
அழைத்து வருவதற்கு மிகவும் மூலகாரணமாக இருந்த எழுத்தாளர் மாம்பலத்தார் அவர்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
விழாவினைத் தலைமையேற்று நடத்திக்
கொடுத்த பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ, முன்னிலை வகித்த விழுப்புரம் நகரமன்றத்தின்
முன்னாள் தலைவர் இரா.ஜனகராஜ், நூலினை அறிமுகம் செய்த தலைமையாசிரியர் தோழர் த.பாலு,
வரவேற்புரையாற்றிய நண்பர் அ.ரபேல்
மற்றும் வாழ்த்திப் பேசிய, தங்களின்
பொன்னான நேரத்தினை ஒதுக்கி இந்நிகழ்வில் பங்கேற்ற, வெளியூர்களில் இருந்தும்
வந்திருந்து வாழ்த்திய, எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக நின்ற நல்லுள்ளங்களுக்கும்,
முகநூல் மூலமாக வாழ்த்துக்களைத்
தெரிவித்த உங்களுக்கும் என் நன்றிகள் உரித்தாவதாக!
இன்றுகூட தினமணி நாளிதழில் விழா
குறித்தச் செய்தி புகைப்படத்துடன் வந்துள்ளது. செய்தியாளருக்கும்
நிர்வாகத்துக்கும் நன்றிகள்.