விழுப்புரம் பிரமுகர்கள் – 11
ஜி.ஆதிநாராயண ஐயர்
1918இல் நடந்த பஞ்சாப் படுகொலைச் சம்பவம் விழுப்புரத்தைச் சேர்ந்த
இளைஞர் ஆதிநாராயணனுக்குள் சுதந்திர உணர்வை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கூட்டங்களில் பங்கெடுக்கத் தொடங்கினார்.
அப்போது 18 வயதே நிரம்பியிருந்த ஆதிநாராயணன், படிப்பைப் பாதியில் உதறிவிட்டுச்
சுதந்திர வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1920 முதல் அனைத்துக் காங்கிரஸ் மாநாடுகளிலும் பங்கேற்ற இவர்,
காந்தியின் விருப்பத்தின் பேரில் கிராம புனருத்தாரண மாநாட்டை சொர்ணாவூரில்
லஷ்மிநாராயண ரெட்டியார் தலைமையில் நடத்தினார்.
1921ஆம் ஆண்டு நடந்த ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கேற்ற இவர், 6
மாதகால சிறைத்தண்டணை பெற்றார்.
1931இல் அனந்தாச்சாரி, ஜமத்கனி நாயகர், சீனிவாசராகவன், கல்யாணராம
ஐயர் ஆகியோருடன் வடஆற்காடு ஜில்லாவில் பிரச்சாரம் செய்துவிட்டு விழுப்புரம் வந்த
ஆதிநாராயண ஐயரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 20 மாத
சிறைத்தண்டணைப் பெற்ற அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மதுரை,
திருச்சி சிறைகளுக்கும் மாற்றப்பட்டார்.
1933இல் அன்னியத் துணைகளைப் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி
சொர்ணாவூர், சிறுவந்தாடு பகுதிகளைச் சேர்ந்த முத்துமல்லா ரெட்டியார், குப்புசாமி,
வரதராஜன், சீனுவாசன், ராமமூர்த்தி, சேதுராமன், குட்டியாப்பிள்ளை உள்ளிட்டோருடன்
விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட ஆதிநாராயண ஐயருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டது. முதல் மூன்று மாதங்கள் அலிபுரம் சிறையிலும், மேலும் 9 மாதங்களை
ராஜமுந்திரி சிறையிலும் கழித்தார்.
1936இல் நடந்த அவசர சட்ட எதிர்ப்பில் பங்கேற்ற ஆதிநாராயண ஐயர் கைது
செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரத்தில் சோஷலிஸ்ட் பார்ட்டி மற்றும் பகத்சிங்கின் நவஜவான்
பாரத் சபா ஆகியவற்றை ஆதிநாராயண ஐயர் ஏற்படுத்தினார்.
1936 அக்டோபரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவை
விழுப்புரம் அழைத்துவந்து, இந்திரா நகருக்கு அடிக்கல் நாட்டச் செய்தவர் ஆதிநாராயண
ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.
03.03.1903இல் பிறந்த இவர் 17.11.1993இல் விழுப்புரத்தில் மறைந்தார்.