வியாழன், 18 அக்டோபர், 2018

புதுச்சேரியில் வசதியாகத்தான் வாழ்ந்தார் பாரதி...


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு, இந்த ஆண்டு ஜுன் மாதத்தில் புதுச்சேரியில் நடந்தது. அப்போது மாநாட்டு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் அந்த மலரினைப் புரட்டிப் பார்த்தபோது, 'புதுச்சேரியில் பாரதியார் புதிய செய்திகள்'  எனும், வில்லியனூர்  பழனி அவர்களின் கட்டுரை என்னை ஈர்த்தது.

'நம்மிடையே பாரதி வரலாறு தொடர்பாக ஒப்புக்கொள்ளப்பட்டனவாக உள்ள இரண்டு தகவல்கள் கட்டுக்கதைகளே என அடையாளம் காட்ட முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கம்' எனத் தொடக்கத்திலேயே தெளிவாக அறிவித்து விடுகிறார் கட்டுரையாளர்.

பாரதியின் புதுச்சேரி வருகை மற்றும் புதுச்சேரி வாழ்க்கை குறித்த கீழ்க்காணும் தகவல்களைத் தருகின்றது இக்கட்டுரை:

கைது செய்யப்படுவோம் என்று அஞ்சி பாரதியார் அடைக்கலம் தேடி புதுச்சேரி வரவில்லை. இந்தியா பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தீட்டப்பட்ட ஒரு நீண்ட கால செயல் திட்டத்தின் ஒரு பகுதிதான் பாரதியின் புதுச்சேரி வருகை.

வியப்பும் பெருமிதமும் கொண்டு நாம் போற்றி எழுத வேண்டிய உன்னதமான வாழ்க்கையைத் தான் பாரதி புதுச்சேரியில் வாழ்ந்திருக்கிறார்.

புதுச்சேரியில் இருந்த செல்வச் சீமான்களைப் போலத்தான் அவரும் பெரியதொரு வீட்டில் வாழ்ந்திருக்கிறார்.

புதுச்சேரியில் அவர் எழுதி குவித்தவைகள் ஏராளம். தென் ஆப்ரிக்காவில் கூட 1917இல் அவரது நூல் ஒன்று வெளிவந்தது. டர்பனில் இருந்து ஆயிரம் ரூபாய் பணம் அவருக்கு வந்து சேர்ந்ததாகவும் தகவல் உண்டு.

ஏராளமான உதவிகள் பல திசைகளில் இருந்தும் அவருக்கு வரத்தான் செய்தன.

உலகம் அவரை ஏற்றுப் போற்றிக் கொண்டாடவே செய்தது. அதனால் தான் 'எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்று அவர் பாடி மகிழ்ந்தார்.

என்றெல்லாம் விவரிக்கும் இக்கட்டுரையில், 'பாரதி' திரைப்படக் குழுவினரின் ஒப்பாரி குறித்தும் இடித்துரைக்கப்பட்டுள்ளது.

இறுதியில், ‘பாரதியார் பட்ட துயரங்களை மட்டுமே முன்னிறுத்திப் பட்டியல் போடுவதை இனி அனைவரும் விட்டுவிட வேண்டும்' எனும் கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.



உண்மையில், மேற்காணும் கட்டுரை, பாரதியின் புதுச்சேரி வாழ்க்கைக் குறித்த பிம்பங்களைத் தகர்ப்பதாகத்தான் இருக்கிறது!