சனி, 30 ஜூலை, 2022

நெய்வனை - சொர்ணகடேஸ்வரர் கோயில்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள ஊர் நெய்வனை. இங்கு வீற்றிருப்பவர்: பொற்குடம் கொடுத்த நாயனார். இப்போது, சொர்ணகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவார ஆசிரியர் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றத் தலம்.


கோயில் முழுக்கக் கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, மலைய மன்னன் வழிவந்த கிளியூர் மலையமான்கள் (சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்டு திருக்கோவலூர் உள்ளிட்டப் பகுதிகளின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள்) நெய்வனை கோயிலுக்கு நிவந்தங்கள் செய்துள்ளனர். 


மலைய மன்னர் இருவரது சிற்பங்கள், நெய்வனைக் கோயில் எதிரே இருப்பதாக “மலையமான்கள்” எனும் நூலில், பாகூர் புலவர் சு‌.குப்புசாமி தெரிவித்து இருக்கிறார்.


இன்று 30.07.22 சனிக்கிழமை காலை நண்பர் பாரதிதாசன் உடன் நெய்வனைக் கோயிலுக்குப் போயிருந்த போது இந்தச் சிற்பங்களைத் தேடினேன். கிடைக்கவில்லை.


அப்போது அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்: “இருபது ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு வெளியே அந்த சிற்பங்கள் நின்றிருந்தன. ஆனால் அவற்றை யாரோ தூக்கிப் போய்விட்டனர்”. 


எனக்குள் பெரும் ஏமாற்றம். அப்படியும் விடாமல் கோயில் வளாகத்தைச் சுற்றி சுற்றி வந்தேன். தலை மட்டும் இல்லாமல் சிறிய அளவிலான சிற்பம் ஒன்று சுற்றுச் சுவர் ஓரமாகக் கிடந்தது.


கைகளை கூப்பி, நின்ற நிலையில் இருக்கிறார். கழுத்து, கை, கால்களில் அணிகலன்கள். இடை முதல் தோள்பட்டை வரை வளைந்து நீண்டிருக்கும் பாம்பு. இவர் யாராக இருக்கும்?


யாராக இருந்தாலும் பரவாயில்லை. ஏற்கனவே முழுசாக இருந்த இரண்டு சிற்பங்களைத் தொலைத்து விட்டோம். சேதமடைந்து இருந்தாலும் பரவாயில்லை. இது, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


கோயில் அர்ச்சகர், இளைஞர் விக்னேஷ் வசம் கோரிக்கை வைத்தேன். இதை உடனடியாக ஏற்றுக் கொண்ட அந்த இளைஞர் அங்கிருந்தவர்களையும் துணைக்கு அழைத்து, அந்தச் சிற்பத்தை கோயில் வளாகத்திற்குள் கொண்டு சென்று வைத்தார்.


நிம்மதி: நமக்கு மட்டும் அல்ல; தலை இழந்தும் களையுடன் நின்றிருந்த அந்த அடியவருக்கும் தான்!