புதன், 28 மே, 2025

கம்பன் வழிபட்ட காளி

 கம்பன் வழிபட்ட காளி...


சின்னசெவலை. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரை யொட்டியுள்ள கிராமம். 


இங்கிருக்கும் ஏரிக் கரைக்கு அருகாமையில் வயல்வெளிகளுக்கு மத்தியில், மரங்கள் சூழ்ந்த அமைதியான சூழலில் அமைந்துள்ளது காளி கோயில்.


சற்றே உயரமான மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது நின்று கொண்டிருக்கிறாள் துர்க்கை காளி. ஆம்: இவர் தான் “கம்பன் வழிபட்ட காளி” என வணங்கப்படுபவர். மிகவும் பிரசித்திப் பெற்றவர்.


கோயிலுக்கு வானமே கூரை! 

மேடை மீது செல்வதற்கு மூன்று படிக்கட்டுகள். படிக்கட்டின் முன்னதாக முருகன் மற்றும் விநாயகருக்கு தனித்தனியே சிற்றாலயங்கள்.


செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இராகு காலத்தில் துர்க்கை காளிக்கு சிறப்பு வழிபாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்தான் பூசைப் பணிகளைச் செய்து வருகிறார்.


துர்க்கை காளியை அருகில் சென்று தரிசிக்க வேண்டுமே? படிகளைக் கடந்து மேலே செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை. குறிப்பாக, பெண்களுக்கு! 


இதனால் ரொம்பவும் யோசித்த பூசாரி, பிறகு, “சரி. சட்டை பனியனைக் கழட்டிவிட்டு மேலே செல்லுங்கள்” என்றார். காளிக்கு அருகில் போக வேண்டும் என்றால், ஆண்கள், மேல் சட்டை அணியக் கூடாது எனும் விதி இங்கு உறுதியாகப் பின்பற்றப்படுகிறது. நானும் ஏற்றுக் கொண்டேன்.


காளியின் மீதிருந்த துணியை எடுக்கவும் மிகவும் தயங்கினார் நம் பூசாரி. பிறகு ஒருவழியாக எடுத்தார்.


பல்லவர் கால அழகிய கொற்றவை! உருவங்கள் தெரியாதபடி அவ்வளவு எண்ணைய் பிசுக்கு. அகற்றினால் அம்மையின் அழகுத் தெளிவாகத் தெரியும்! 


சிற்பத்தின் வலது காலுக்கு அருகில் வழக்கமான அடியவரின் உருவம். இதனைச் சுட்டிக்காட்டிய நம் பூசாரி, ‘இவர்தான் கம்பர்’ என விளக்கம் அளித்தார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! 


கம்பர் வழிபட்ட காளி என்பது செவி வழிக் கதையாக, தகவலாக இருக்கலாம்! அதற்காக 7-8 ஆம் நூற்றாண்டு சிற்பத்தில் 12ஆம் நூற்றாண்டுக் கம்பர்..? 


அந்த இளைஞர் மேலும் அளித்த விளக்கங்கள், ஏற்கனவே தலைச் சுற்றலில் இருந்துவரும் எனக்கு மேலும் அதிகமானது! ஒருவழியாக அங்கிருந்துப் புறப்பட்டேன். 


அழைத்துச் சென்று அருகில் இருந்து உதவிய, காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு), நண்பர் திரு.அரிதாஸ் அவர்களுக்கு மிகவும் நன்றி!

(சென்று வந்தது 27.05.25 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு)