ஞாயிறு, 8 ஜூன், 2025

சிங்கவரம் கொற்றவை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் கிராமமும் அங்கிருக்கும் பல்லவர் கால குடைவரைக் கோயிலான அரங்கநாதர் கோயிலும் நாம் யாவரும் அறிந்ததே!


அரங்கநாதருக்கு அருகாமையில்  தனி சன்னதியில் அரங்கநாயகி தாயார் அமர்ந்து இருக்கிறார்.


இவர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஓர் அறை இருக்கிறது. அது, சட்டென நம் கண்களுக்குப் புலப்படாது.


தாயாருக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர், ஆரத்தித் தட்டினை சிறிது அந்தப் பக்கம் காண்பிப்பார். 


சிறிய சாளரத்தின் வழியே, தீப வெளிச்சத்தில் அங்கு வீற்றிருக்கும் அழகிய கொற்றவை அப்போதுதான் நம் கண்களுக்குக் காட்சித் தருவாள்! 



வழக்கமான 8 கரங்கள், ஆயுதங்கள் இங்கு இல்லை. நான்கு கரங்கள் மட்டுமே! 


பின்னிரு கரங்கள் முறையே சக்கரம், சங்கினை ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்கள் இடுப்பின் மீதும் தொடையின் மீதும் வைத்த நிலையில், சற்று சாய்ந்து ஒய்யாரமாக நிற்கிறாள் அம்மை!


வழக்கமாகக், கொற்றவையின் இரண்டு கால்களும் எருமைத் தலைமீது வைத்த நிலையில் காணப்படும். ஆனால், சிங்கவரத்தில் வலது காலை மட்டும் மகிஷனின் தலைமீதும் இடது காலை தரையிலும் ஊன்றி நிற்பது சிறப்பு.


இரண்டு பக்கமும் இரண்டு அடியவர்கள். வலப்பக்கத்தில் அமர்ந்து இருப்பவர் நீண்ட தலைமுடி, மீசையுடன் வீரனுக்கே உரித்தான பாணியில் இருக்கிறார். 


தனது வலது கையில் உள்ள கத்தியால் இடது கால் தொடையின் சதையை அரிந்துகொள்ளும் காட்சி இங்கு அரங்கேறுகிறது. 


இடது பக்கத்தில் இருப்பவர் தரையில் முழங்கால் மண்டியிட்டு பூசை செய்யும் நிலையில் அமர்ந்து இருக்கிறார். தலை மழித்து காணப்படுகிறது. மீசையும் இல்லை.


சிங்கவரத்துக் கொற்றவைக்காக, ஆய்வறிஞர் சீனி.வேங்கடசாமி தனது ‘மகேந்திரவர்மன்’ நூலில் ஒன்றரை பக்கங்கள் ஒதுக்கி இருக்கிறார்.


“பல்லவச் சிற்பங்களிலேயே மிகப் பழமையானது” எனப் புகழ்ந்தும் இருக்கிறார்!