வியாழன், 14 ஜூலை, 2016

விழுப்புரமும் காமராஜரும்...

தமிழக அரசியலிலும், அகில இந்திய அரசியலிலும் தனித்த அடையாளத்துடன் திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். இவரது அரசியல் ஆளுமை இன்றும் வியந்து வியந்துப் போற்றப்படுகிறது.
உண்மைதான். “கிங் மேக்கர்எனும் ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழின் இலக்கணமாகத் திகழ்ந்தவர் கர்ம வீரர் காமராஜர்.
இவருக்கும் விழுப்புரத்துக்கும் நிறையவே தொடர்பு உண்டு. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக, தமிழக முதல்வராக, நாடாளுமன்ற உறுப்பினராக பலமுறை விழுப்புரம் வந்திருக்கிறார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த திருவாளர்கள் பி.எஸ்.இலட்சுமணசாமி, பி.டி.துளசிங்கம் பிள்ளை, எஸ்.பி.இலட்சுமண நாராயண ரெட்டியார் உள்ளிட்டவர்கள் காமராஜரின் தீவிர விசுவாசிகளாக இருந்தனர். இவர்களைக் கொண்டு காமராஜர் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் விழுப்புரத்தில் நடந்தேறின.     
இதில், கோ.செங்குட்டுவனாகிய என்னுடைய குறிப்புகளிலிருந்து பெருந்தலைவர் தொடர்பான சில நிகழ்வுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
17.19.1936இல் பிரதமர் நேரு அவர்கள் விழுப்புரம் கமலா நகருக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜரும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
12.04.1947இல் விழுப்புரம் சந்தான கோபாலபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட இந்து உயர் துவக்கப்பள்ளியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.காமராஜ் நாடார் திறந்து வைத்தார்.
1957ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி விழுப்புரம் நகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடத்தினைத் திறந்து வைத்த முதல்வர் கே.காமராஜ், நகராட்சிப் பயணியர் விடுதி மற்றும் விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலை ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.



அடுத்த சில நாட்களில், 8ஆம் தேதி விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் கே.காமராஜ், அங்கு அமைக்கப்பட்டிருந்த செரட்டேரியல் பயிற்சிக் கட்டடத்தையும் திறந்து வைத்திருக்கிறார்.
1979 ஜனவரி 8ஆம் தேதி விழுப்புரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட காந்தி சிலையை கே.காமராஜ் எம்.பி. திறந்து வைத்தார்.
இதற்கிடையே 28.09.1962இல் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காமராஜர் படத்தினை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்திருக்கிறார்.
விழுப்புரத்தில் இலட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, கல்விக்கண் திறந்த காமராஜரின் பெயரைத் தாங்கி நின்று கொண்டிருப்பது சிறப்பாகும்.


இதேபோல் நகரில் நகைக் கடைகள் நிறைந்துள்ள கடைவீதி மற்றும் மகாத்மா காந்தி வீதியில் உள்ள காய்கனி அங்காடி ஆகியவற்றிற்கும் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளதுக் குறிப்பிடத்தக்கது.


விழுப்புரம் திரு.வி.க. வீதி - நீதிமன்றச் சாலை சந்திப்பில் பெருந்தலைவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை 24.08.1992இல் வாழப்பாடி கூ.இராம மூர்த்தி தலைமையில் நடந்த விழாவில், மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் திறந்து வைத்தார்.  

விழுப்புரத்தைக் கடந்துச் சென்றால், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 28.12.1959 இல் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட வீடூர் அணை, இன்றும் அவர் புகழ் நின்றுபாடும்.




 


2016 ஆகஸ்ட் வெளியீடு 


‘அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார்+ என்பார் சேக்கிழார்.
நம் முன்னோர் பழம் ஆவணத்தை, ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்து வைத்திருந்தமையை பெரியபுராணத்தின் தடுத்தாட்கொண்ட புராணம் நமக்கு விளக்கும். பின்னர் அறிவியல் வளர்ந்தது. கடுதாசிகள் எழுதப்பட்டன. இத்தகைய கடிதங்கள், வீடுகளின் எறவானம் எனப்படும் மேற்கூரையில் சொருகி வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்துத் தகவல்களைக் கொண்டுச் செல்லும் தூதுவனாக பத்திரிகைகள் அறிமுகமாயின. ஒருசிலர் முழுப் பத்திரிகையினையும் இன்னும் சிலர் இதன் நறுக்கு(கட்டிங்கு)களைப் பாதுகாப்பதில் ஆர்வங்காட்டினர். அடுத்து வந்தக் காலங்களில் இவையும் மறைந்துப் போயின. ஆவணங்களைப் பாதுகாக்கும் நம் மரபு காலப்போக்கில் மங்கியது.
பழைய பேப்பர் கடைகளுக்குப் எடைக்கு எடை போடுவதில் இருந்து தப்பிப் பிழைத்த பழைய பேப்பர்களும்  அதில் பதிவு செய்யப்பட்டச் சில செய்திகளும் இன்று ஆவணமாகியுள்ளன.


1991 முதல் நடந்த பல்வேறு சம்பவங்கள் இதில் சுவைபடத் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒரு வகையில் இந்நூலும் விழுப்புரம் வரலாறு குறித்துப் பேசும் ஒரு ஆவணம்தான்.