திங்கள், 25 ஜனவரி, 2021

ஆலகால ஈஸ்வரன் கோயில் - பேரணி

பேரணி... 

விக்கிரவாண்டி அடுத்துள்ள கிராமம்.

இந்த ஊரைக் கடந்து தான் பலமுறை செ.கொத்தமங்கலம் சென்று வந்து இருக்கிறோம்.

நேற்று முன்தினம் 24.01.2021 மாலை, இருட்டத் தொடங்கி இருந்தது. 

அபிராம ஈஸ்வரி உடனுறை ஆலகால ஈஸ்வரன் கோயிலைக் கடந்தோம். "ஐயா, உள்ளே போய்ட்டு வரலாம் ங்களா?", நண்பர் திருவாமாத்தூர் கண சரவணகுமார்  கேட்டதும் "சரி" என்றேன்.

அரசுப் பள்ளியையொட்டி, பாறைமீது அமைந்துள்ளக் கோயில்.

உள்ளே அடியெடுத்து வைத்ததும், கோயில் வளாகத்தில் வெளிப்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தச் சிற்பங்கள் நம் கண்களில் பட்டன.

பெரிய பாறை ஒன்றில் விநாயகர், அளவில் மிகச்சிறிய மூத்ததேவி, ஏழு கன்னியரில் மூவர், அப்புறம் சிறியதும் பெரியதுமாக இரு ஐயனார் சிற்பங்கள்.

பல்லவர் மற்றும் சோழர் காலத்தவை.

திருச்சுற்றில் புன்முறுவல் பூத்த கொற்றவை.

கோயிலுக்கு அடியில், தரையைத் தொட்டு நிற்கும் கல்வெட்டுகள். "ராஜராஜ தேவர்கு" உள்ளிட்ட வாசகங்கள்.

இன்னொரு பக்கம், செந்நிறப் பாறை. அதிலும் கல்லெழுத்துகள். வாசிக்க இயலவில்லை. கிரந்தமாக இருக்கலாமா?

கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக இரண்டு நந்தீசுவரர்கள்.

மிகவும் சிதலமடைந்திருந்தக் கோயில். 2008ல் தான் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பூசாரி சபாபதி, கோயில் பூசையில் ஈடுபட்டு வருகிறார்.

பேரணி, ஆலகால ஈஸ்வரன் கோயில் சிற்பங்களும் கல்வெட்டுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

இவை, ஆவணப்படுத்தப்பட்டவையா?தெரியவில்லை.

புகைப்படங்கள்: நன்றி:

திருவாமாத்தூர் கண.சரவணகுமார்.

செவ்வாய், 12 ஜனவரி, 2021

நாட்குறிப்பு நாயகர் ஆனந்த ரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் தினப்படி சேதிக்குறிப்புகளை வாசித்த போது நான் நின்று நிதானித்தது,

வள்ளுவரின் குறள்களைப் பல இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார். குறள் முதன்முதலில் அச்சேறியது, 1812ல். ஆனால் அதற்கு முன்பே குறள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதற்கு இந்நாட்குறிப்பு சிறந்த உதாரணம்.

ஆனந்தரங்கர், பிரெஞ்சு அரசின் விசுவாசி. ஆனால், இந்த அரசின் கீழ் சென்னப்பட்டணமும் புதுச்சேரியும் பட்டபாட்டினை நேர்மையுடன் எழுதுகிறார்.

வேதபுரீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்ட அன்றே, அப்பகுதியில் உள்ள மசூதியையும் இடிக்க உத்தரவு. ஆனால், கடும் எதிர்ப்புக் கிளம்பவே அந்த முயற்சி கைவிடப்படுகிறது.

ஆனந்தரங்கர், மனசாட்சிக்கு விரோதமில்லாதவர். கடைசி வரை மதம் மாறவில்லை. இதுதொடர்பாக சம்பா கோயில் பாதிரியாரிடம் அவர் நடத்திய உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்தது.

“இந்த அரசுக்கு தமிழர் ஒத்தாசையில்லை” எனச் சொன்ன ஆளுநரிடம் “எந்த வெள்ளைக்காரன் ஒத்தாசை செய்தான்?” என முகத்தில் அறைந்தாற் போல் அவரால் கேட்க முடிந்தது.

இந்த நாட்குறிப்பு, நேர்மையான யோக்கியமான ஒன்றாக பாரதியால் பாராட்டப்பட்டது. 

இவை, 12 தொகுதிகளாகப் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டுத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 



இது குறித்தெல்லாம் விரிவாக எழுதும் திட்டம் இருக்கிறது. எழுதுவோம். 

நாட்குறிப்பு நாயகர் ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் நினைவுதினம் இன்று…