அரிட்டாபட்டி.. மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் இருக்கும் இயற்கை எழிலார்ந்த அழகான கிராமம்.
மலைகள் சூழ்ந்த இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்கள் வாழ்கின்றன.
அரசாங்கத்தால பல்லுயிர் சூழல் மண்டலமா அறிவிக்கப்பட்டு இருக்கு அரிட்டாபட்டி.
இந்த ஊருல தான் இதோ இந்தப் பாறையில் தான் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு தமிழிக் கல்வெட்டுகள் இருக்கின்றன.
பாறைக்கு அடியில் சமண முனிவர்கள் தங்குவதற்கான குகைக் தளங்களை அமைத்துக் கொடுத்ததைச் சொல்லும் கல்வெட்டுகள் இவை.
தமிழ் எழுத்து வரலாற்றில் அரிட்டாபட்டி கல்வெட்டுகள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.
அதே பாறையில் சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் கீழுள்ள 10 ஆம் நூற்றாண்டையக் கல்வெட்டு இந்த மலையை பிணையன் மலை என்று குறிப்பிடுகிறது. ஆனால் இப்போது இது கழிஞ்ச மலை என்று வழங்கப்படுகிறது.
இதோ அழகான வழவழப்பானப் பாறைகளைக் கொண்ட கழிஞ்ச மலை. இதன் மீது ஏறி அந்தப் பக்கம் இறங்கணும்.
பாறையில் குடையப்பட்ட குடைவரைக் கோயில். சிவாலயம்.
இது ஏழு எட்டாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர்களால் ஏற்படுத்தப்பட்டக் குடைவரை ஆகும். ஆனாலும் கல்வெட்டுகள் எதுவும் இங்க இல்லை.
கருவறையின் இரண்டு பக்கங்களிலும் அழகான வாயிற் காப்போர்.
உள்ளே தாய்ப்பாறையில் அமைந்திருக்கும் லிங்கத் திருமேனி.
முன்மண்டபத்தின் இடதுபுறம் பிரம்மாண்டமான வலம்புரி விநாயகர் புடைப்புச் சிற்பம்.
வலது புறம் பிரம்மாண்டமான லகுலீசரோட புடைப்புச் சிற்பம். தலையில் கரண்ட மகுடம் மார்பில் பட்டையான யக்ஞோப வீதத்துடனும் கையில் தடியேந்தி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் லகுலீசர்.
பாண்டியர் கால குடைவரைகளில் இந்த இடத்தில் தான் லகுலீசர் சிற்பம் இடம் பெற்று இருக்கு அப்படிங்கறது குறிப்பிடத்தக்கது.
பறவைகளின் பல்லுயிர் சூழல் மண்டலமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிக் கல்வெட்டுகளும் சமணர் படுக்கைகளும் சிற்பமும் இடம்பெற்ற ஊராக பாண்டியர் கால குடைவரை அதிலும் அரியதொரு லகுலீசர் சிற்பம் இடம் பெற்று இருக்கும் குடைவரை என இத்தனை சிறப்புகளோட அதிசய கிராமமா இருக்கு அரிட்டாபட்டி.
நீங்க மதுரைப் பக்கம் போனீங்க ன்னா அப்டியே ஒரு எட்டு அரிட்டாப்பட்டிக்கும் போய்ட்டு வாங்க.
அரிட்டாபட்டி குறித்த அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனல் பதிவைப் பார்க்க..
https://youtu.be/Ee7UE111uRU