சனி, 28 டிசம்பர், 2024

1897இல் கட்டப்பட்ட பழைய கலெக்டர் அலுவலகம் - கடலூர்/ 127 YEAR'S OLD COLLECTOR OFFICE CUDDALORE

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு எதிர்ல நிற்கும் பிரம்மாண்டமான இந்தக் கட்டடம். பார்த்த உடனே நீங்க சொல்லிடலாம் பழைய கலெக்டர் ஆபிஸ் னு.

ஆங்கிலேயர் கால கட்டடக் கலைக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது இந்தக் கட்டடம்.

ஆயிரம் எழுநூறுகளின் இறுதியில் கடலூரில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிர்வாகம் தொடங்கிடுச்சு. ஆனாலும் 1801ல தான் கடலூரைத் தலைநகராகக் கொண்டு தென்னாற்காடு மாவட்டம் எனும் புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் முதல் ஆட்சியர் கேப்டன் கிரஹாம்.

தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்கள் தங்களுக்கான கார்டன் ஹவுஸ் ல நிர்வாகப் பொறுப்பை கவனிச்சுட்டு வந்தாங்க.

ஆனாலும் கலெக்டர்களுக்கு ன்னு தனியா ஒரு அலுவலகம் இல்லாம இருந்துச்சு. இந்த நிலை 95 ஆண்டுகள் நீடித்தன.

அதன் பிறகு தான் கலெக்டர் அலுவலகம் அப்படிங்கற விஷயத்தை கவனத்தில் எடுத்தது கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கிலேய நிர்வாகம்.

ஆமாம் ங்க. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு மாவட்டத்திற்கு, ஆட்சியர் அலுவலகம் என்பது அந்த ஆண்டின் இறுதியில் தான் அமைந்தது.

மஞ்சக்குப்பம் மைதானம் எதிரே கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தினை 1895 செப்டம்பரில் தேர்வு செய்தனர்.

கட்டுமானப் பணிகள் 1896 ஜனவரியில் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகள் அனைத்தும் சுமார் 23 மாதங்களிலேயே அதாவது 1897 நவம்பரில் முடிவடைந்தது. பிரம்மாண்டமான, அழகிய கட்டடம் எழுந்து நின்றது.

இதற்கு ஆன செலவுத் தொகை ஒரு லட்சத்து பதினாராயிரத்து முன்னூற்று தொன்னூறு ரூபாய்.

செங்கற்களைக் கொண்ட செந்நிற மாளிகையாக ரெட் போர்ட் என்று சொல்லக் கூடிய வகையில் சிறிய செங்கோட்டையாகக் காட்சியளிக்கிறது இந்தக் கட்டடம்.

கருங்கற்களால் ஆன இதன் படிக்கட்டுகளும் அதன் கைப்பிடிகளும் தனது கம்பீரத்தை இன்று வரை இழக்காமல் உள்ளன.

நாடு விடுதலைக்கு முன்பும் பின்பும் 92 கலெக்டர்களை சந்தித்துள்ளது இந்தப் பழம்பெரும் கட்டடம்.

2015ல் கடலூரில் புதிய ஆட்சியர் அலுவலகத்தின் வருகையால் தனது இருப்பை தற்காலிகமாக இழந்து நிற்கிறது இந்தப் பரம்பரிய கட்டடம்.

கருவூலம், வனம், ஆவணப் பாதுகாப்பு, அருங்காட்சியகம் என விரல்விட்டு எண்ணக் கூடிய அரசு அலுவலகங்கள் மட்டுமே இருக்கும் சிலவற்றில் தற்போது இயங்கி வருகின்றன.

மற்ற இடங்களை வவ்வால்கள் ஆக்கிரமித்து உள்ளன.

தொடர் பராமரிப்பு இல்லாததால் செடிகொடிகள் முளைத்து, மரங்களும் கூட வேர்விட்டு கட்டடத்தின் உறுதித் தன்மைக்கு உலை வைக்கின்றன.

கட்டப்பட்ட ஓரிரு ஆண்டுகளில் விரிசல் விடும் அரசுக் கட்டிடங்கள், ஆற்று நீரில் அடித்துச் செல்லும் அண்மைக்கால அணைகள், பாலங்களுக்கு மத்தியில்

இதோ 127 ஆண்டுகளுடன் இன்னும் கம்பீரம் குறையாமல் மிடுக்காக நிற்கிறது இந்த ஆங்கிலேயர் கால கட்டடம்.

பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டிய, போற்றிப் பாதுகாக்க வேண்டிய அத்தனைத் தகுதிகளும் இந்தக் கட்டடத்துக்கு இருக்கிறது.

26.12.24 வியாழன்று கடலூர் சென்று, இந்தப் பழமையான கட்டடத்தைப் பார்த்து வியந்தேன்!

இதுபற்றி appuram Villupuram YouTube channel ல்ல விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன்! இணைப்பு: கீழே 

https://youtu.be/XLNKhseZ5rA?si=SAbFpzkcgx0Hy_xA




விழுப்புரம் அருங்காட்சியகம்: அரசாணை வெளியீடு!

 விழுப்புரம் அருகே

பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம்

அரசாணை வெளியீடு!

 

விழுப்புரம் அருகே பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அருங்காட்சியகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் இந்த இடம் தங்களுக்குப் போதுமானதாக இல்லை என்றும் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேவை என்றும் அருங்காட்சியகங்கள் துறை கடந்த ஆண்டு ஜூலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தது.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் அருகே பனங்குப்பம் கிராமத்தில் புதுச்சேரி, கும்பகோணம் நெடுஞ்சாலைகளையொட்டியுள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி பரிந்துரை செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் ம.அரவிந்த் பனங்குப்பத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும் இந்த இடத்தை அருங்காட்சியகங்கள் துறைக்கு நிலமாற்றம் செய்யலாம் என நிலநிர்வாக ஆணையரும் அரசுக்குப் பரிந்துரை செய்தார்.

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 3ம் தேதி அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில், “விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் ஆகியோரின் பரிந்துரைகளை ஏற்று விழுப்புரம் வட்டம் பனங்குப்பம் கிராமத்தில் ‘முசாபரி பங்களா நெடுஞ்சாலை மற்றும் கிராமப் பொதுப்பணிகள்துறை‘ என்ற வகைப்பாடுடைய நிலத்தினை அருங்காட்சியகம் அமைத்திட சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறைக்கு நில மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விழுப்புரம் அருங்காட்சியகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது: 

“இந்த அரசாணையின் மூலம் பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரவேற்கிறோம். இதற்கானப் பணிகளை காலதாமதம் இல்லாமல் உடனடியாக தொடங்க வேண்டும். நிரந்தர அருங்காட்சியகப் பணிகள் தொடங்கி முடியும் வரை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தலின்படி விழுப்புரத்தில் தற்காலிக அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளிலும் அருங்காட்சியகங்கள் துறையும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் உடனடி கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.


(இதுதொடர்பாக பிரசுரமாகி இருக்கும் பத்திரிகை செய்திகள்)


தினகரன் 28.12.24


தினத்தந்தி 28.12.24


தினமலர் 28.12.24


இந்து தமிழ் திசை 29.12.24