விழுப்புரம் அருகே
பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம்
அரசாணை வெளியீடு!
விழுப்புரம் அருகே பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அருங்காட்சியகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் இந்த இடம் தங்களுக்குப் போதுமானதாக இல்லை என்றும் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேவை என்றும் அருங்காட்சியகங்கள் துறை கடந்த ஆண்டு ஜூலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தது.
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் அருகே பனங்குப்பம் கிராமத்தில் புதுச்சேரி, கும்பகோணம் நெடுஞ்சாலைகளையொட்டியுள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி பரிந்துரை செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் ம.அரவிந்த் பனங்குப்பத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும் இந்த இடத்தை அருங்காட்சியகங்கள் துறைக்கு நிலமாற்றம் செய்யலாம் என நிலநிர்வாக ஆணையரும் அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 3ம் தேதி அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில், “விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் ஆகியோரின் பரிந்துரைகளை ஏற்று விழுப்புரம் வட்டம் பனங்குப்பம் கிராமத்தில் ‘முசாபரி பங்களா நெடுஞ்சாலை மற்றும் கிராமப் பொதுப்பணிகள்துறை‘ என்ற வகைப்பாடுடைய நிலத்தினை அருங்காட்சியகம் அமைத்திட சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறைக்கு நில மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விழுப்புரம் அருங்காட்சியகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:
“இந்த அரசாணையின் மூலம் பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரவேற்கிறோம். இதற்கானப் பணிகளை காலதாமதம் இல்லாமல் உடனடியாக தொடங்க வேண்டும். நிரந்தர அருங்காட்சியகப் பணிகள் தொடங்கி முடியும் வரை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தலின்படி விழுப்புரத்தில் தற்காலிக அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளிலும் அருங்காட்சியகங்கள் துறையும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் உடனடி கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
(இதுதொடர்பாக பிரசுரமாகி இருக்கும் பத்திரிகை செய்திகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக