தேடல்... உங்கள் வாழ்க்கயை வளப்படுத்தட்டும்!
எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், விழுப்புரம்.
(02.03.25 – செண்டூர்: நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம். இரண்டாம் நாள் நிகழ்வில் ஆற்றிய உரை)
மயிலம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டத்தின் சிறப்பு முகாமின் இரண்டாவது நாள் நிகழ்வில் பங்கேற்று உங்களை எல்லாம் சந்திக்கவும், உங்களிடையே உரையாற்றவும் வாய்ப்பு கிடைத்தது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இத்தகைய வாய்ப்பினை வழங்கிய மதிப்பிற்குரிய கல்லூரி முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்!
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்லூரியில் பயிலும் வாய்ப்பு உங்களுக்கு எல்லாம் கிடைத்திருப்பதற்கு உள்ளபடியே நீங்கள் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைய வேண்டும்! 85 ஆண்டுகளைக் கடந்து தனது தமிழ்ச் சேவையை கல்விச்சேவையை நமது கல்லூரி தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எண்ணற்ற ஆன்றோர் சான்றோர் பெருமக்களை உருவாக்கிக் கொடுத்தப் பெருமை நம் கல்லூரிக்கு இருக்கிறது!
செண்டூர் கிராமத்தில் உங்கள் முகாமை நீங்கள் துவக்கி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இந்த ஊருக்கானப் பெயர்க் காரணம் ஏதேனும் தெரியுமா உங்களுக்கு?
மகாபாரதத்திலே ஒரு காட்சி. திரௌபதியை துச்சாதனன் அரசவைக்கு அழைத்து வருகிறான். “கைச் செண்டால் அவள் பைங்குழல் பற்றி“ அவளை அழைத்து வந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் செண்டு என்பது யாது? இதுபற்றி தமிழ்த் தாத்தா உவேசா அவர்கள் மிகவும் ஆய்வு செய்தார். செண்டு என்பது பொதுவாகப் பூச்செண்டினைக் குறிக்கும். துச்சாதனன் கையில் எப்படி பூச்செண்டு இருக்கும்? செண்டு என்பது பந்து என்றும் பொருள்படும் பந்திற்கு இங்கு என்ன வேலை?
இந்த விஷயங்கள் எல்லாம் உவேசாவின் மூளையைக் குடைந்து கொண்டிருந்தன. இந்த நிலையில்தான் மாயவரம் அருகிலுள்ள ஆறுபாதி எனும் ஊருக்குச் சென்றிருந்தார் உவேசா அவர்கள். அங்கிருந்தப் பெருமாளை தரிசித்தபோது, அவரதுக் கரத்தில் பிரம்பு போல் ஒன்று இருந்தது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. பெருமாள் கையில் ஏந்தி நிற்கும் இதன் பெயர் என்ன என்று உவேசா கேட்டார். அங்கிருந்த அர்ச்சகர் சொன்னார்: ‘இதன் பெயர் செண்டு’. இது ஒரு வகையான ஆயுதம். இதைத்தான் பெருமாள் ஏந்தி நிற்கிறார். இப்படியான செண்டினைத்தான் ஐயனார் உள்ளிட்ட சில தெய்வங்களும் ஏந்தி நிற்கின்றன.
கைச் செண்டால் அவள் பைங்குழல் பற்றி“ எனும் பாரதத்தின் வார்த்தைக்கு உவேசா அவர்களுக்கு இப்போது பொருள் கிடைத்தது! அப்படியான செண்டினைத் தாங்கிய தெய்வம் இந்த ஊரில் இருக்கலாம். செண்டு இடம்பெற்ற ஊர், செண்டூராகி இருக்கலாம். அன்பிற்கினிய மாணவர்கள். இதுபற்றிய மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளலாம்!
இந்த நேரத்தில் டாக்டர் உவேசா அவர்கள் குறித்தான ஒரு சில விவரங்களை உங்களிடையே பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன். அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்தெல்லாம் கண்டிப்பாக நீங்கள் படித்து இருப்பீர்கள். படித்துக் கொண்டும் இருப்பீர்கள் .குறிப்பாக, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு உள்ளிட்ட இலக்கியங்களை எல்லாம் ஓலைச் சுவடிகளில் இருந்தவற்றை எல்லாம் அச்சு நூலாக அவர் பதிப்பித்துக் கொண்டு வந்த வரலாறுகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள் என்றே கருதுகிறேன்.
இந்தச் சுவடிகளை எல்லாம் தேடித்தேடி அலைந்து திரிந்து அவர் மேற்கொண்ட பயணங்கள், ஆராய்ச்சிகள், கடுப்பு உழைப்பு... அப்பப்பா... அவரது வரலாற்றைப் படிக்கும் போது நமக்கு மலைப்பு ஏற்படுகிறது. எந்த நேரத்திலும் அவர் மனம் தளரவில்லை. சோர்வு அடையவில்லை. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இப்படியான தேடலில் முழுநேரத் தேடலில் அவர் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்.
அதனால் தான் அவரை இன்று தமிழ்த் தாத்தா என்று நாம் உச்சிமுகர்ந்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அவரதுத் தேடல், உழைப்பு மட்டும் இல்லாவிட்டால், நமக்கெல்லாம் புறநானூறு, ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி எல்லாம் எப்படி கிடைத்திருக்கும்?
அன்பிற்கு உரிய மாணவர்களே, இந்த நேரத்தில் உவேசா அவர்களின் தேடல் குறித்தான இரண்டு விஷயங்களை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சிலப்பதிகார ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவர், அதன் ஏடுகளைத் தேடி, கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் கோயிலுக்குச் சென்றார். அங்குச் சுவடிகள் இருப்பதாக அறிந்து. குறிப்பாக வரகுண பாண்டியன் என்பவரால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த சுவடிகள் அவை. ஆனால் இவர் சென்றபோது அந்தச் சுவடிகள் எதுவும் அங்கில்லை. விசாரித்தபோது, ஆகம சாஸ்திரங்களில் சொல்லியபடி செய்துவிட்டோம் என்று சொல்லி இருக்கின்றனர். ஆமாம். குப்பைக் கூலங்களாக இருந்தச் சுவடிகளை எல்லாம் குழிவெட்டி, அக்னி வளர்த்து நெய்யில் தோய்த்து அக்னி பகவானுக்கு இரையாக்கி விட்டார்கள். தீயில் போட்டு எரித்துவிட்டார்கள். இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா என்று மனம் நொந்தார் உவேசா அவர்கள்.
களக்காடு என்ற ஊருக்குச் சென்றபோது, ஒருவரது வீட்டில் வண்டிக் கணக்கில் சேகரித்து வைத்திருந்த சுவடிகளை எல்லாம், இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கிறது என்று சொல்லி, ஆடி பதினெட்டு அன்று ஆற்றில் தூக்கிப் போட்டு இருக்கிறார்கள். ஒரு இடத்தில் நெருப்புக்கு, இன்னொரு இடத்தில் நீருக்கு! சுவடிகளைத் தேடி அலைந்த உவேசாவின் உள்ளம் எப்படி எல்லாம் துடிதுடித்துப் போயிருக்கும்?
நண்பர்களே! இதனால் எல்லாம் அவர் சோர்ந்து விடவில்லை. மனம் தளர்வடையவில்லை. தனதுத் தேடலை, தேடல் யாத்திரைகளைத் தொடர்ந்தார். தனது வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தார்.
நான் முன்பே குறிபிட்டதுபோல் இந்த அயராத உழைப்பு தான், இந்த கடுமையான தேடல் தான் இந்த நேரத்திலும் அவர் குறித்து நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
இத்தனைக்கும் தமிழை மட்டுமே நன்கு அறிந்தவர் அவர். ஆனால் அவர் குறித்து உலகமே இன்று அறிந்து வைத்துள்ளது. பாரிஸ் நகரத்தில் வாழ்ந்த வின்சுலோ, உவேசாவின் தமிழ்ப்பணியைப் பாராட்டி இருக்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தமிழாசிரியர், திருக்குறளையும் புறநானூற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் ஆன ஜி.யு.போப் அவர்கள் உவேசா அவர்களை உச்சிமுகர்ந்து இருக்கிறார்.
சென்னையில் உள்ள உவேசாவின் இல்லத்திற்கு பெருங்கவி ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார். திலகர் வந்திருக்கிறார். ஏராளமான தலைவர்கள் அறிஞர்கள் வந்து சென்று இருக்கின்றனர். அவர் காந்தியைச் சந்தித்து இருக்கிறார். மகாகவி பாரதியுடன் உரையாடி இருக்கிறார். பாண்டித்துரைத் தேவர் போன்ற வள்ளல் பெருமக்கள் அவரைப் பொன்னேபோல் போற்றிப் புகழ்ந்துள்ளனர். புரவலர்களாக இருந்துள்ளனர்.
இத்தனைக்கும் உவேசா அவர்கள், தமிழாசிரியர், கல்லூரிக் கல்வித் தமிழாசிரியர். நான் முன்பே குறிப்பிட்டபடி தமிழில் மட்டும் பாண்டித்தியம் உள்ள பெரியவர். ஆங்கிலம் உள்ளிட்ட இன்னபிற மொழிகளையும் மற்றவர்கள் துணைக்கொண்டு அறிந்தவர். இன்று நாநிலமும் போற்றப்படுகிறார். காரணம், தமிழின் மீது, தமிழ் இலக்கியங்களின் மீது அவருக்கு இருந்த தணியாத ஆர்வம், ஈடுபாடு, இதுதொடர்பான அவரதுத் தேடல்கள், உழைப்பு, அவரது ஆய்வுகள் இவை எல்லாம் அவரை உயர்த்தி இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்!
தமிழின் மீதான அந்தத் தேடல், ஆர்வம், உழைப்பு உங்களிடமும் ஏற்பட வேண்டும். கண்டிப்பாக நீங்கள் வாழ்க்கையில் இந்தச் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்! அதற்கான விதை, இதோ இந்த செண்டூரில் ஊன்றப்படட்டும்! விருட்சமாக வளர எனது வாழ்த்துகள்! நன்றி! வணக்கம்!