விழுப்புரம் அருகே வளவனூர் நகரில் அமைந்துள்ளது இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். இக்கோயிலின் கருவறை பின்பக்கச் சுவற்றில் மூன்று வரிகளில் அமைந்த துண்டு கல்வெட்டு ஒன்று தலைகீழாகப் பதிக்கப்பட்டுள்ளது.
இதனை வாசித்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.இராஜகோபால், “இதன் முதல் வரியில், புரவியொடும் பிடித்து தன்னடை ஜெயம்கொண்டு எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. இது திங்கீர் திருடன் தொங்கல் எனத் தொடங்கும் முதலாம் இராஜாதி ராஜனின் (கி.பி.1018-1054) மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதியாகும். இரண்டாவது வரியில் பிரம்மதேசத்து திரிபுவன மஹாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும், மூன்றாவது வரி, ஸ்ரீ மாகேஸ்வர ரக்ஷை என்றும் முடிகிறது. இது சிவனடியார்கள் பாதுகாப்பு எனும் பொருள் தரும். இக்கல்வெட்டு சிவன் கோயிலுக்கு உரியதாக இருக்கலாம்” என்று விளக்கமளித்துள்ளார்.
லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலின் கட்டுமானப் பணிகளின் போது இந்தத் துண்டுக் கல்வெட்டு சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள திரிபுவன மஹாதேவி சதுர்வேதி மங்கலம் குறித்த மேலதிக ஆய்வுகள் தேவை.
தினகரன் 19.01.25
நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேயமாக இப்பகுதி இருந்துள்ளதையும் 970 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.
தினத்தந்தி 19.01.25மேற்காணும் கல்வெட்டில் குறிப்பிடப்படும் இராஜாதிராஜன் சோழப் பேரரசர் இராஜராஜ சோழனின் பேரனும் இராஜேந்திர சோழனின் மகனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலைச் சாளுக்கியருடன் நடந்த கொப்பத்துப் போரில் இம்மன்னர் உயிர் துறந்தார்.
வளவனூரில் உள்ள ஜகந்நாத ஈஸ்வரர் கோயிலில் இராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழனின் முற்று பெறாத கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தற்போது பெருமாள் கோயிலில் இராஜாதிராஜன் கல்வெட்டு கண்டறியப்பட்டதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் பெரிய அளவில் சிவாலயம் சிதைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
வளவனூர் பகுதியில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் சோழர் கால தடயங்கள் மேலும் கிடைக்கலாம்.
தினமணி 19.01.25
இது தொடர்பான செய்தி இன்றைய (19.01.25) தினகரன், தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில்... பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி!
கல்வெட்டினை வாசித்து உதவிய மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ஐயா ராஜகோபால் சுப்பையா அவர்களுக்கு
மிக்க நன்றி!
அன்புடன்
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
19.01.25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக