செட்டிப்பட்டு.
புதுவை மாநிலம், திருக்கனூர் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமம்.
செஞ்சியாற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.
இங்கு வயல்வெளியில் வீற்றிருக்கும் ஐயனார் சிற்பம் குறித்து ஆய்வு
செய்ய வேண்டுமென்று, நண்பரும் புதுவை மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளருமான
ஏ.வி.வீரராகவன் எப்போதோ என்னைக் கேட்டுக் கொண்டார்.
நேற்று (11.09.16) தான் அதற்கு நேரம் வந்தது. விழுப்புரத்தில்
இருந்து ஆய்வாள பெருமக்கள் சி.வீரராகவன், மங்கையர்க்கரசி ஆகியோருடன்,
செட்டிப்பட்டு கிராமத்துக்குப் புறப்பட்டேன்.
காங்கிரஸ் பிரமுகர் வீரராகவன் மற்றும் கிராமத்து இளைஞர்கள் புடைசூழ
செட்டிப்பட்டிற்குள் நுழைந்தோம். ஆற்றின் கரையோரமாகவே இருசக்கர வாகனத்தில் பயணம்.
அக்கரையில் பார்த்தால் திருவக்கரைக் கோயில். குவாரிக்கு இரையாகிப்போன
மலை. பின்னர் பாதையைவிட்டு விலகி வயல்வெளியில் நடக்கத் தொடங்கினோம்.
அதோ பிரம்மாண்டமான குதிரைச் (சுடுமண்) சிற்பம். பார்த்தவுடன்
வீரராகவன் சொல்லிவிட்டார், “இருநூறு வருடங்களுக்குள் இருக்கும்”.
அருகிலேயே இருக்க வேண்டிய ஐயனார் சற்றுத் தள்ளி, பூரணி பொற்கலையுடன்
தரையில் அமர்ந்திருக்கிறார். எழுத்துப் பொறிப்புகள் ஏதும் இல்லை.
“விஜய நகரர் காலத்தியது” வீரராகவன், மங்கையர்க்கரசி இருவரும்
அறிவித்தனர்.
மேலும், தமிழ்நாட்டில் ஐயனார் வழிபாடு மற்றும் காலத்தால் முந்திய
ஐயனார் சிற்பங்கள் குறித்து கிராமத்து இளைஞர்களிடம் அங்கேயே வகுப்பெடுத்தார், ஆய்வாளர்
வீரராகவன்.
அதனை வந்திருந்தவர்கள் எந்தளவு உள்வாங்கியிருப்பார்கள் என்று
தெரியவில்லை? ஆனாலும் அவர்களுக்குள் ஒரு
திருப்தி ஏற்பட்டிருக்க வேண்டும். நம்ம ஊர் ஐயனாரின் காலம் தெரிந்ததே!
மீண்டும் உழுத வயல்வெளியின் ஊடாக நடக்கத் தொடங்கினோம். அப்போது
வயல்வெளியில் கிடந்த சில பானை ஓடுகளை ஆய்வாளர்களிடம் இளைஞர்கள் காட்டினர். ‘ஆம்.
இவை சங்க காலப் பானை ஓடுகள்தாம்” மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பலகோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் மரங்கள், பல நூறு ஆண்டுகளுக்கு
முற்பட்டக் கோயில் ஆகியவற்றைக் கொண்டுள்ள திருவக்கரை அருகிலேயே இருக்கிறது.
வராக நதி என்றழைக்கப்படும் இந்த செஞ்சியாற்றின் மருங்கில் இன்னும்
விரிவாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மண்ணில் புதையுண்டிருக்கும் பழமையான வரலாறுகள் வெளிப்படக்கூடும். செட்டிப்பட்டு உணர்த்தும் செய்தி இதுதான்!
இன்றைய (12.09.16) தினமலரில் இது செய்தியாகவும் வந்துள்ளது
நன்றி தினமலர்!