சனி, 26 நவம்பர், 2016

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோயில்



வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகியப் பூந்தோட்டம். நடுவே அந்தணர்களுக்கான அக்ரகாரம். கிழக்கிலும் மேற்கிலும் மேல் மற்றும் கீழ் வன்னியர் தெருக்கள். வடக்கே பூந்தோட்டம் பாட்டை. மற்றும் பூந்தோட்டம் பெயரிலான மேட்டுத் தெரு, நெடுந்தெருக்களும் இருக்கின்றன.




விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் அமைந்திருக்கும் பூந்தோட்டம் பகுதியைத்தான் சொல்கிறேன். நகரத்தின் ஒருபகுதியாக இருந்தாலும் இன்றும் இந்தப் பகுதி ஒரு கிராமம்தான். வருவாய்த்துறை ஆவணங்களும் அப்படித்தான் குறிப்பிடுகின்றன.  


ஊர் என்றிருந்தால் குளம் இருக்க வேண்டுமே. இருக்கிறதே..! மழைக்காலங்களில் தென்பெண்ணையாற்று நீர் இந்தக் குளத்தை வந்தடைய வழிவகைச் செய்துள்ளனர்.
இந்தக் குளக்கரையில்தான் ஆதிவாலீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.


கோயிலில், முதலாம் இராசராசன் காலக்க ல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் இந்த ஊரை வடகரை பிரம்மதேயம் என்றும், நிருபதுங்க செயந்தாங்கி சதுர்வேதி மங்கலம் என்றும், ஸ்ரீஜனநாத சதுர்வேதி மங்கலம் என்றும்   குறிப்பிடுகின்றன.

கோயில் கொண்டுள்ள இறைவன், திருவாலீஸ்வரத்துப் பரமசுவாமி என்று குறிப்பிடப் பட்டுள்ளார்.

இப்போது, ஆதிவாலீஸ்வரர்க் கோயில் என்றழைக்கப்படுகின்றது.

சோழர்கால கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோயிலின் திருச்சுற்றில் அழகியச் சிற்பங்களும் காணப்படுகின்றன.


80களின் இறுதியின் வாலீஸ்வரர்க் கோயில் கல்வெட்டுக்களைப் படியெடுப்பதற்கு ஆய்வாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். காரணம், அப்பகுதி குடியிருப்புகள் கோயிலை நெருக்கிக் கொண்டிருந்ததுதான்.

பின்னர் அந்த ஆக்கிரமிப்புகள் ஒருவாறாக அகற்றப்பட்டன. இப்போது கோயில் விசாலமாகக் காட்சியளிக்கிறது. சிற்பங்களை இரசிக்கலாம். கல்லெழுத்துக்களையும் வாசிக்கலாம்.

மேலும், கோயில் திருச்சுற்றில் அம்மன் ஆலயம், நாயன்மார்கள் உருவங்கள், பைரவர், நவக்கிரகங்கள் என  ஆலயம் முழுமைப் பெற்றிருப்பதும் நல்ல முறையில் வளர்ச்சிப் பெற்றிருப்பதும் நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

எல்லாம் பூந்தோட்டம் மக்களின் உழைப்புதான்.

இன்று (26.11.16) மாலைகூட, சனிப் பிரதோஷம் என்பதால் நல்ல கூட்டம். நகரத்தின் பல்வேறு பகுதியினரும் நூற்றுக்கணக்கில் வந்துக் குவிந்திருந்தனர்.

புகைப்படங்களும் அப்போது எடுக்கப்பட்டதுதான்..!    

சனி, 19 நவம்பர், 2016

சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவில் இன்று (19.11.16) என்னை அதிர வைத்த காட்சிகள்தான்



மாநிலத்தின் தலைநகராம், சென்னை மாநகரம் பல்வேறு வகையிலும் முன்னேற்றம் அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், மாநகரின் பாதாளச் சாக்கடைகள் இன்னமும் மனிதர்களைக் கொண்டுதான் சுத்தம் செய்யப்படுகிறது. சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவில் இன்று (19.11.16) காலை என்னை அதிர வைத்த காட்சிகள்தான், உங்கள் பார்வைக்குப் புகைப்படங்களாக...    



வெள்ளி, 4 நவம்பர், 2016

கிளியூர் மலையமான்கள்

திருமுடிக்காரி. திருக்கோலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிநடத்திய மலைய மன்னன்.

முள்ளூரில் இவனை எதிர்த்த ஆரிய மன்னர் பலர், இவனது ஒரே வேல் படைக்கு அஞ்சி ஓடினார்கள் என்பதை நற்றிணைப் பாடல் (170) ஒன்று கீழ்க்காணும் வகையில் புகழ்ந்துப் பேசுகிறது:

ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழிந்த ஒள்வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு   

காரியின் வழித்தோன்றல்கள், திருக்கோலூரையும் சுற்றுவட்டப் பகுதிகளையும் வழிநடத்தினர். இம்மலையமான்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் கிளியூர் மலைய மான்களாவர்.

இவர்கள் குறித்து ஆய்வறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் (நூல்: பிற்கால சோழர் சரித்திரம்) தரும் தகவல்கள் பின்வருமாறு:

கிளியூர் மலையமான்கள் முதற்குலோத்துங்கச் சோழன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள். இவர்கள் தென்னார்க்காடு ஜில்லாவில் அதன் வடமேற்குப் பகுதியாய் அமைந்திருந்த சேதி நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள். மலையமான் மரபினர். இவர்கள் வழிவழி ஆண்டு வந்தமை பற்றி அந்நாடு மலையமான் நாடு எனவும் மலாடு எனவும் வழங்கப்பட்டு வந்தது உணரற்பாலது.

இவர்கள் சேதிராயர் எனும் பட்டமுடையவர்கள். கிளியூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர்கள். குலோத்துங்கச் சோழனது ஆட்சி காலத்தில் சேதி நாட்டிலிருந்து அரசாண்ட சிற்றரசர்கள்.

கிளியூர் மலையமான் பெரிய உடையானான இராசராச சேதிராயன், சந்திரன் மலையனான இராசேந்திர சோழ மலையமான், சூரியன் சாவன சகாயனான மலையகுல ராசன், சூரியன் மரவனான இராசேந்திர சோழ மலையகுல ராசன், சூரியன் பிரமன் சகாயனான மலையகுல ராசன்.

இவர்களில் இறுதியில் குறிப்பிடப்பெற்ற மூவரும் உடன்பிறந்தாராகவும் இராசேந்திர சோழ மலையமானுக்கு நெருங்கிய தொடர்புடையவராகவும் இருத்தல் வேண்டும்.

இவர்கள் எல்லோரும் குலோத்துங்கச் சோழனது ஆட்சியின் முற்பகுதியில் இருந்தவராவர். இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியிலிருந்த சேதி நாட்டுச் சிற்றரசன், கிளியூர் மலையமான் நானூற்றுவன் அத்திமல்லனான இராசேந்திர சோழச் சேதிராயன் என்போன். இவன் திருக்கோவலூரிலுள்ள திருமால் கோயிலுக் கும் சித்தலிங்கமடத்தில் உள்ள சிவன் கோயிலுக்கும் நிவந்தங்கள் அளித்துள்ளான்.

மேலும், இறையூரன் இராசராச சேதிராயன் என்பவனைப் பற்றிச் சொல்லும்போது, ‘குலோத்துங்கனுக்குப் படைத்தலைவனாயிருந்தமையோடு அவன்பால் பேரன்புடையவனாகவும் இருந்தவன் என்கிறார் சதாசிவத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவலூர், சித்தலிங்கமடம் மட்டுமின்றி ஜம்பை, அரகண்ட நல்லூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களிலும் கிளியூர் மலையமான்களின் கொடை குறித்தக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்த மலையமான்கள் வன்னிய வகுப்பினர் என்பதற்கானக் கல்வெட்டுச் சான்று இருப்பதாகத் தெரிவிக்கிறது தமிழ் வளர்ச்சி இயக்ககம் வெளியிட்ட ‘தமிழ்நாட்டு வரலாறு வரலாறு சோழ பெருவேந்தர் காலம் எனும் நூல்.

நாட்டின் தலைநகராக இருந்ததோடு, ஆட்சி நடத்தும் தலைவர்களையும் கொடுத்த ஊர் கிளியூர்.


இப்போது, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில், பெரியசெவலை அருகில் சின்னஞ்சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது..! 

வியாழன், 3 நவம்பர், 2016

விழுப்புரத்தின் கோட்டை...

என்னுடைய ‘விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் நூலின் தலைப்புகளில் ஒன்று  மேற்கண்டவாறு அமைந்திருந்தது. இதைப் பார்த்தப் பலருக்கும் ஆச்சரியம். விழுப்புரத்தில் கோட்டை இருந்ததா?
உண்மைதான். ஆச்சரியம் இருக்காதா பின்னே?
‘தென்னிந்தியப் போர்க்களங்கள் எனும் நூலில் 18ஆம் நூற்றாண்டில், ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான் ஆட்சியின்போது இருந்ததாக 84 கோட்டைகளைப் பட்டியலிட்டுள் ளார் ஆய்வறிஞர் கா.அப்பாத்துரையார். இந்தப் பட்டியலில் ‘விழுப்புரம் கோட்டை இல்லை.
அப்புறம், எப்படி?
விழுப்புரம் கோட்டைக் குறித்தானக் குறிப்புகளைத் தெரிந்து கொள்ளவேண்டு மென்றால் நாம், புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் ‘டைரியைத்தான் புரட்ட வேண்டும்.
ஆற்காடு நவாபின் ஆளுகைக்கு உட்பட்டு 400க்கும் மேற்பட்ட கில்லேதார்கள் ஆட்சி செய்துவந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான், அப்துல் ஜலீல். விழுப்புரம் கில்லேதார். 300 சேவகர்கள் மற்றும் குதிரை, ஒட்டகங்களுடன் விழுப்புரத்தில் கோட்டைக் கொத்தளங்களுடன் 1746வாக்கில் இவரது ஆட்சி நடந்திருக்கிறது.
ஆற்காடு நவாப் அன்வருதீன் மற்றும் அவரது மூத்த மகன் மாபூஸ்கான் ஆகியோருக்கு மிகவும் நெருங்கியவராக இவர் இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் பெரும்பாலான பாளையக்காரர்கள் மற்றும் கில்லேதார்கள் பிரெஞ்சு அரசுக்கு விசுவாசிகளாக மாறத்தொடங்கினர். ஆனால் விழுப்புரம் கில்லேதார், பிரிட்டி ஷாரின் ஆதரவாளராகவே தொடர்ந்தார்.
இது, அருகிலுள்ள புதுவையை ஆட்சி செய்து கொண்டிருந்த டூப்ளே தலைமையி லான பிரெஞ்சு அரசுக்குப் பெரும் தலைவலியாகவே இருந்து வந்தது. இதனால் விழுப்புரம் கில்லேதாரை வீழ்த்த அவர்கள் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதற்கான நேரமும் வந்தது. 1750 மார்ச் 21ஆம் தேதி விழுப்புரம் கோட்டையின் மீது பிரெஞ்சுப் படை தாக்குதல் தொடுத்தது. அப்போது கோட்டையில் இருந்த அப்துல் ஜலீலும், சில ஆங்கிலேய வீரர்களும் அவர்களை எதிர்கொண்டனர்.
கடுமையான மோதல். துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. கில்லேதார் தரப்பில் 12 பேர் பலியானார்கள். இறுதியில் பிரெஞ்சுப் படையிடம் வீழ்ந்தது விழுப்புரம் கோட்டை. இந்தச் சண்டையின்போது கில்லேதார் அப்துல் ஜலீல் தப்பி ஓடிவிட்டார். அவரைப் பற்றிய தகவல் ஏதுமில்லை.
இதற்கிடையே 1752இல் விழுப்புரம் கோட்டையின் மீது தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ் படை, இக்கோட்டையை தனது வசமாக்கியது.
இப்படியாக வரலாற்றுச் சம்பவங்கள் பலவற்றின் அடித்தளமாக விளங்கிய விழுப்புரம் கோட்டை 1803இல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டின் மத்தியில், கைலாசநாதர் கோயில் எதிரில் அரவை ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது பூமியில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட 2 பீரங்கிகள் கண்டெடுக்கப்பட்டன.
இவை ஒவ்வொன்றும் 18 பவுண்ட் எடையுள்ளதாகும்.
இதில் ஒரு பீரங்கி சென்னை அரசு அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொன்று, விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் மேடை அமைக்கப்பட்டு அதன்மீது நிறுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் சரி. கோட்டை- விழுப்புரத்தில் எந்த இடத்தில் இருந்தது?
இதற்கான விடை இன்னும் கிடைத்தபாடில்லை.
விழுப்புரம் பெருமாள் கோயில் தெருவில் ‘கோட்டை விநாயகர் வீற்றிருக்கிறார்.

ஒருவேளை, சித்தேரிக்கரை அல்லது மந்தக்கரைப் பகுதிகளையொட்டி கோட்டை அமைந்திருக்கலாம்....!        

கல்லறை திருநாள்...









நம் நினைவில் வாழக்கூடிய முன்னோர்களை நினைவுகூர்வது என்பது நல்ல விசயம். நடுகல் வழிபாட்டில் இருந்தே இவ்வழக்கம் நம்மிடையே இருந்துவரும் ஒன்றுதான்.
‘அமாவாசை எனும் நாள் மட்டும் இல்லாவிட்டால், நம் முன்னோரை நாம் நினைத்துப் பார்க்க மாட்டோம்-விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் திமுக கரை வேட்டி கட்டிய எழுத்தாளர் ஆதங்கப்பட்டுச் சொன்னது.
இதற்காக நமக்கு ஒருநாள் தேவைப்படுகிறது. அது, மாதத்துக்கு ஒருமுறை வரும் அமாவாசையாக இருக்கலாம். ஏன? ஆண்டுதோறும் நடக்கும் மயானக் கொள்ளைத் திருவிழாக்களின் போதும், முன்னோர்களின் நினைவிடங்கள் அலங்கரிக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறதே!
சரி, இருக்கட்டும். நான் இங்குச் சொல்ல வந்ததே கிறிஸ்துவர்களின் கல்லறை திருநாள் பற்றி..!
உயிர்நீத்தவர்களைப் புதைக்கும் இடத்தை ‘கல்லறைத் தோட்டம்  என்று இவர்கள் அழைக்கிறார்கள். இதில் ஒரு அழகியல் இருக்கிறது!  
இந்தக் கல்லறைத் தோட்டங்களில் ஆண்டுதோறும் ‘கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
‘உயிர்த் தெழுதலும் வாழ்வும் நானே: என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பிலும் வாழ்வர்என்கிறது ஏசு பெருமானின் அருட்திருவாசகம்.
நம் முன்னோர் இறப்பிலும் வாழ்கிறார்கள். இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான், இந்தக் கல்லறை திருநாள்.
விழுப்புரத்தில் கிழக்குப் பாண்டி ரோடில் அமைந்துள்ள இந்தக் கல்லறைத் தோட்டத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் கடந்திருப்பேன். உள்ளே சென்றதில்லை. இன்றுதான் (02.11.16) அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. நண்பர் ஆ.சத்யாவுடன் சென்றேன்.
இங்குத் துயில் கொள்பவர்களின் நினைவிடங்கள், சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டிருந்தன. அவரவர் வசதிக்கேற்ப, சாமந்தி, ரோஜா என பலவண்ண மலர்களால், மலர்க் கொத்துக்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந் தன.
ஊதுபத்திகள் மணம் கமழ்ந்தன. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, தங்கள் உறவுகளின் ஆன்மா இளைப்பாறுதல் வேண்டி மனமுருக ஜெபித்தனர். மரித்த ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி பாதிரி மார்கள் சிறப்புத் திருப்பலியில் ஈடுபட்டனர்.   
விழுப்புரம், கிழக்குப் பாண்டி ரோடில் உள்ள இந்தக் கல்லறைத் தோட்டத்திற்கு ஒரு விசேஷம் உண்டு. அது, இங்கு உறங்குபவர்கள் பலரும் ஆங்கிலோ இந்தியர்கள் என்பதுதான். இந்தியன் ரயில்வேயிலும் மற்ற துறைகளிலும் பணியாற்றிய இவர்தம் குடும்பத்தினர் இன்றும் விழுப்புரத்தில் வசித்து வருகின்றனர்.
தமிழர்களுடன், ஆங்கிலோ இந்தியர்களும் இதில் பங்கேற்று தங்கள் முன்னோரை வழிபட்டனர்.  
இடையில் சிலநிமிடங்கள் திடீர் தூறல். ஆனாலும் இவர்களது வழிபாடு தொடரத்தான் செய்தது. நேரம் ஆகஆக கல்லறைத் தோட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. இது, மாலைவரை தொடர்ந்தது.
கல்லறைத் தோட்டம், கல்லறைத் திருநாள் பற்றியெல்லாம் எழுதும்போது. கவிக்கோ அப்துல் ரகுமானின் ‘இன்றிரவு பகலில் கவிதைத் தொகுப்பும் அதில் இடம்பெற்ற ‘கல்லறை வாசகங்களும் நினைவுக்கு வந்தன.
அவற்றில் ஒன்றிரண்டு, உங்கள் பார்வைக்கு:

இது மரணம் அல்ல:
உலகத்தோடு நான் கொண்ட
ஊடல்!                         (ஏட்ஸ்)  

இங்கே கிடக்கிறாள்
என் மனைவி
இங்கேயே கிடக்கட்டும்!
இப்போது
அவள் அமைதியாக இருக்கிறாள்:
நானும்தான்.                      (ட்ரைடன்)

எதையும்
மண்ணுடன் கலந்து பழகியவன்
தன்னையும் கலந்துவிட்டான்.        (மதிமன்னன்)


‘கல்லறைக் கவிதைகள் மரணத்தையும் அழகாக்கிவிடுகின்றன. கண்ணீரையும் மதுவாக்கிவிடுகின்றன. இலக்கிய உலகில் மரணத்திற்கே வாழ்க்கை தந்த கவிதைகள் தாம் எத்தனைஎன வியப்பது கவிக்கோ மட்டுமல்ல நாமும்தான்..!