நம்
நினைவில் வாழக்கூடிய முன்னோர்களை நினைவுகூர்வது என்பது நல்ல விசயம். நடுகல்
வழிபாட்டில் இருந்தே இவ்வழக்கம் நம்மிடையே இருந்துவரும் ஒன்றுதான்.
‘அமாவாசை
எனும் நாள் மட்டும் இல்லாவிட்டால், நம் முன்னோரை நாம் நினைத்துப் பார்க்க மாட்டோம்”-விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் திமுக கரை வேட்டி கட்டிய
எழுத்தாளர் ஆதங்கப்பட்டுச் சொன்னது.
இதற்காக
நமக்கு ஒருநாள் தேவைப்படுகிறது. அது, மாதத்துக்கு ஒருமுறை வரும் அமாவாசையாக
இருக்கலாம். ஏன்? ஆண்டுதோறும் நடக்கும்
மயானக் கொள்ளைத் திருவிழாக்களின் போதும், முன்னோர்களின்
நினைவிடங்கள் அலங்கரிக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறதே!
சரி, இருக்கட்டும். நான் இங்குச் சொல்ல வந்ததே கிறிஸ்துவர்களின்
கல்லறை திருநாள் பற்றி..!
உயிர்நீத்தவர்களைப் புதைக்கும் இடத்தை ‘கல்லறைத் தோட்டம்’
என்று இவர்கள் அழைக்கிறார்கள். இதில் ஒரு அழகியல் இருக்கிறது!
இந்தக் கல்லறைத் தோட்டங்களில் ஆண்டுதோறும் ‘கல்லறை திருநாள்’ அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
‘உயிர்த் தெழுதலும் வாழ்வும் நானே:
என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பிலும் வாழ்வர்’
என்கிறது ஏசு
பெருமானின் அருட்திருவாசகம்.
நம் முன்னோர் இறப்பிலும் வாழ்கிறார்கள். இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான்,
இந்தக் கல்லறை திருநாள்.
விழுப்புரத்தில் கிழக்குப் பாண்டி ரோடில் அமைந்துள்ள இந்தக் கல்லறைத்
தோட்டத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் கடந்திருப்பேன். உள்ளே சென்றதில்லை.
இன்றுதான் (02.11.16) அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. நண்பர் ஆ.சத்யாவுடன்
சென்றேன்.
இங்குத் துயில் கொள்பவர்களின் நினைவிடங்கள், சுத்தம் செய்யப்பட்டு
வர்ணம் பூசப்பட்டிருந்தன. அவரவர் வசதிக்கேற்ப, சாமந்தி, ரோஜா என பலவண்ண மலர்களால்,
மலர்க் கொத்துக்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந் தன.
ஊதுபத்திகள் மணம் கமழ்ந்தன. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, தங்கள்
உறவுகளின் ஆன்மா இளைப்பாறுதல் வேண்டி மனமுருக ஜெபித்தனர். மரித்த ஒவ்வொருவரின்
பெயரையும் சொல்லி பாதிரி மார்கள் சிறப்புத் திருப்பலியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், கிழக்குப் பாண்டி ரோடில் உள்ள இந்தக் கல்லறைத்
தோட்டத்திற்கு ஒரு விசேஷம் உண்டு. அது, இங்கு உறங்குபவர்கள் பலரும் ஆங்கிலோ
இந்தியர்கள் என்பதுதான். இந்தியன் ரயில்வேயிலும் மற்ற துறைகளிலும் பணியாற்றிய
இவர்தம் குடும்பத்தினர் இன்றும் விழுப்புரத்தில் வசித்து வருகின்றனர்.
தமிழர்களுடன், ஆங்கிலோ இந்தியர்களும் இதில் பங்கேற்று தங்கள் முன்னோரை
வழிபட்டனர்.
இடையில் சிலநிமிடங்கள் திடீர் தூறல். ஆனாலும் இவர்களது வழிபாடு
தொடரத்தான் செய்தது. நேரம் ஆகஆக கல்லறைத் தோட்டத்திற்கு வருபவர்களின்
எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. இது, மாலைவரை தொடர்ந்தது.
கல்லறைத் தோட்டம், கல்லறைத் திருநாள் பற்றியெல்லாம் எழுதும்போது. கவிக்கோ
அப்துல் ரகுமானின் ‘இன்றிரவு பகலில்’ கவிதைத் தொகுப்பும் அதில் இடம்பெற்ற ‘கல்லறை
வாசகங்க’ளும் நினைவுக்கு வந்தன.
அவற்றில் ஒன்றிரண்டு, உங்கள் பார்வைக்கு:
இது மரணம் அல்ல:
உலகத்தோடு நான் கொண்ட
ஊடல்!
(ஏட்ஸ்)
இங்கே கிடக்கிறாள்
என் மனைவி
இங்கேயே கிடக்கட்டும்!
இப்போது
அவள் அமைதியாக இருக்கிறாள்:
நானும்தான்.
(ட்ரைடன்)
எதையும்
மண்ணுடன் கலந்து பழகியவன்
தன்னையும் கலந்துவிட்டான்.
(மதிமன்னன்)
‘கல்லறைக் கவிதைகள் மரணத்தையும் அழகாக்கிவிடுகின்றன. கண்ணீரையும்
மதுவாக்கிவிடுகின்றன. இலக்கிய உலகில் மரணத்திற்கே வாழ்க்கை தந்த கவிதைகள் தாம்
எத்தனை’ என வியப்பது கவிக்கோ மட்டுமல்ல
நாமும்தான்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக