“மனுசங்கடா” பாடலுடன் நின்றுவிடலாமா..?
செங்கதிரைப் பாய்ச்சும் சூரியனைச் சுமந்த
அந்த உடல் இப்போது
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்குள் சென்றுவிட்டது!
அவரது எழுத்துக்களைப் போலவே
அவரது உடலும்கூட இந்தச் சமுதாயத்துக்குப் பயன்படும்.
எந்தத் தருணத்திலும் கலங்காத
எங்கள் பழமலய்
இன்குலாப் உடலைப் பார்த்துக்
குலுங்கிக் குலுங்கி அழுதாராம்,
தோழர் இரவி நேற்றிரவுச் சொன்னார்.
அவரதுப் பேனாவைப் போலவே
மரணமும்கூட எல்லோரையும் அசைத்துவிட்டது.
அந்த மகத்தான மக்கள் கவிஞனுக்கு
எழுந்து நின்று வணக்கம் சொல்லுவோம்.
இந்த நேரத்தில் எனக்கு ஒன்று கேட்கத் தோணுது,
பலரும் ஏன் “மனுசங்கடா” பாடலுடன் நின்று விடுகின்றனர்?
அந்தப் பாடல் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய கீதம்
என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு காலத்தில் நானும் கிடைக்கும் இடங்களில் எல்லாம்
அதைப் பாடித் திரிந்தவன்தான்.
ஆனாலும் அதையும் தாண்டி...
மதத்தைக் கடந்து அவர் நடந்து வந்தப் பாதை
மார்க்சீய லெனினிய புரட்சிகர அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டது
இதனால் அவர் எதிர்கொண்ட இன்னல்கள்
ஆனாலும் அந்தக் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தது
தோழர் அப்புவின் நினைவாக எழுதிய “ஏதோ ஒருநாள்”
உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது “தோண்டிகளுக்கு” அவர் விடுத்த
வேண்டுகோள்
இராசராசனின் பிம்பத்தை அடித்து நொறுக்கிய “கண்மணி ராஜம்”
திமுக
அரசு வழங்கிய விருதைத் திருப்பி அளித்தது
அவரது
நாடக ஆக்கங்கள்...
இன்னும்
எவ்வளவோ விசயங்களை விரிவாகப் பேச வேண்டும்.
இப்போதுப்
பேசாவிட்டால் நாம் எப்போது பேசப் போகிறோம்?
அடுத்த
டிசம்பர் 1இல் மீண்டும் ஒப்பாரி வைக்கும் போதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக