வியாழன், 8 டிசம்பர், 2016

சங்கு ஊதுமா?





இன்றைக்குச் சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தச் சம்பவம்.
இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
அப்போது, கண்ணப்பநாயனார் தெருவில் குடியிருந்தோம். இதனால் பெரும்பாலும் நண்பர்களுடன், அருகிலுள்ள நகராட்சிப் பூங்காவில்தான் வாசம்.
ஒருநாள் இரவு 8மணி. திடீரென எங்கள் கூட்டத்துக்கு ஒரு யோசனை. பூங்கா வாட்ச்மேன் வெளியில் இருந்தார்.
அங்கிருந்த அறைக்குள் நுழைந்த நாங்கள், சின்னதாக இருந்த அந்தக் கடிகாரத்தை எடுத்தோம். மணி 9ஆக திருத்தப்பட்டது.
பின்னர் வாட்ச்மேனிடம் சென்று, ‘மணி 9ஆகுது என்ன சங்குப் புடிக்கலியா?கேட்டோம்.
பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடிவந்த அவர், மணி என்ன என்று பார்த்தார். கடிகாரம் 9ஐ காட்டியது. உடனே சங்கை ஒலிக்கச் செய்துவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் பார்க்க வேண்டுமே! ஏகப்பட்டபேர் பூங்காவுக்கு வந்துவிட்டனர்.
‘மணி 8தான் ஆவுது. அதுக்குள்ளே சங்கு போட்டுட்டுயே என்று வாட்ச்மேனிடம் சண்டைப்போடுகின்றனர்.
ஏதோ நடந்திருக்கிறது என்று உணர்ந்த அந்த மனிதர், ‘கடிகாரம் பாஸ்டா ஓடியிருக்கு என்று சொல்லி சமாளித்தார்.
உண்மையில் நாங்கள் அப்படி செய்திருக்கக் கூடாதுதான். விளையாட்டுப் புத்தி எங்களை செய்ய வைத்துவிட்டது. பிறகு, வருத்தப்பட்டோம்.
ஆமாம். இப்படித்தான். காலை 9 மணி, பிற்பகல் 12மணி, இரவு 9மணி மற்றும் முக்கிய நிகழ்வுகளின்போதும் நகராட்சிப் பூங்காவில் ஒலித்துக் கொண்டிருந்த அந்தச் சங்கை விழுப்புரம்வாசிகள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
பல சமயங்களில் நம்முடைய நேரத்தை நமக்கு நினைவூட்டி வந்தது இந்தச் சங்கு.
ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இது, திடீரென தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. நிறுத்திக் கொண்டது என்றுகூட சொல்ல முடியாது. நிறுத்திவிட்டார்கள். அதுதான் உண்மை.
ஒலி மாசடைகிறது என்று காரணம் சொன்னார்கள்.
இப்போதைய வாகனங்களின் ஓயாத இரைச்சலை ஒப்பிடும்போது, பூங்காவில் ஒலித்த சங்கின் ஒலி அப்படி ஒன்றும் பெரிதல்ல.
இந்த சத்தங்களையெல்லாம் அனுமதித்திருக்கும் அரசாங்கம்,

நகராட்சிப் பூங்காவில் இருக்கும் சங்கை மீண்டும் ஒலிக்கச் செய்யலாம்..!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக