ஞாயிறு, 24 ஜூன், 2018

யுவதியா நூலகத் திறப்பு விழா

நெகிழ்வானத் தருணம் இது.

சாலை விபத்தில் அகால மரணமடைந்த விழுப்புரம் செவிலியர் கல்லூரி மாணவி யுவப்பிரியாவுக்கு நினைவஞ்சலி!

உடன் பயின்ற சக மாணவர்களின் நிரந்தர நினைவஞ்சலி!

' யுவ தியா' நினைவு நூலகத்தின் திறப்பு விழா, இன்று (24.06.2018) காலை உணர்ச்சி மிகுந்த நிகழ்வாக நடந்தேறியது.

நூலகத்தினை பேராசிரியர் பிரபா.கல்விமணி திறந்து வைக்க, டாக்டர் பெருமாள், ஆசிரியர் சபரிமாலா ஆகியோருடன் வாழ்த்திப் பேசும் வாய்ப்பு எனக்கும் வழங்கப்பட்டது.

' உங்கள் மகள் மரணிக்கவில்லை தாயே, இங்கிருக்கும் ஒவ்வொரு மாணவர் உள்ளத்திலும், இந்த நினைவு நூலகக் கட்டடத்திலும், நூலகத்தில் உள்ள ஒவ்வொரு நூல்களிலும் உங்கள் மகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்' என யுவப்பிரியாவின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்த நான்,

' நூலக வடிவில் இப்படியான நினைவஞ்சலிக்கு முன்னின்று ஏற்பாடு செய்த செவிலியர் மாணவர்கள், உடன் நிற்கும் ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்கு நன்றிகளையும்' தெரிவித்துக் கொண்டேன்.

நிகழ்வில் பங்கேற்ற டாக்டர் பெருமாள், நன்கொடையாக ரூபாய்.5000 வழங்கியதோடு, கட்டடத்துக்கான மாதாந்திர வாடகைக் செலவினை ஏற்பதாக தெரிவித்தது அனைவராலும் கைத்தட்டலுடன் வரவேற்கப்பட்டது.

முடிவில் பாரி.கோபிநாத் நன்றி கூறினார்.

ஆசிரியர் இரா.மோகன சுந்தரம் உள்ளிட்ட பலரும் ஏராளமான நூல்களை வழங்கினர்.



தொடக்கமும் நன்று… தொடர்ச்சியும் சிறப்பாகவே இருக்கும்.

 'யுவதியா' வுக்கு வாழ்த்துகள்…

புகைப்படங்கள்: நண்பர் ரஃபீக்.

ஞாயிறு, 17 ஜூன், 2018

மக்கள் கவிஞர் பழமலய் 75

நூல்: மக்கள் கவிஞர் த.பழமலய் 75
பதிப்பாசிரியர் : எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்
பக்கங்கள் : 608
அட்டை: கெட்டி அட்டை
நன்கொடை : ரூ.500
வெளியீடு : பெருமிதம். ( பேராசிரியர் த.பழமலய் நூல்கள் வெளியீட்டு அறக்கட்டளை.
அலைப்பேசி எண்: 99 42 64 69 42)


கடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய நூல். தாமதமானாலும் தரமாக வந்திருக்கிறது. பேராசிரியர் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார்.

மகிழ்ச்சி.

90 பேர்களது கட்டுரைகள்  இதில் இடம் பெற்றுள்ளன.

கவிஞரின் ஆசான்கள், உடன் பயின்றவர்கள், மாணவர்கள், அன்பர்கள், உறவினர் என் பல்வேறு பூக்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

கடிதம் மட்டுமே எழுதி பழக்கப்பட்ட பலரையும் இந்நூல் மூலமாக, பேராசிரியர் அவர்கள் கட்டுரை எழுத வைத்திருக்கிறார் என்பதை நான் அறிவேன்.

கட்டுரையாளர் ஒவ்வொருவரும் புகைப்படம், அவர்தம் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

மீண்டும் சொல்லலாம், எல்லாம் பேராசிரியர் அவர்களின் உழைப்பு தான்.

இத்தொகுப்பில் முத்தாய்ப்பாக இருப்பது
‘சரியா? சரிவா?’ எனும் தலைப்பில் ஆன நேர்காணல்: பழமலய் பழமலையைக் காண்பது. இது, கவிஞர் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலான சுவாரசியமிக்கப் பகுதி.

அதேபோல், கவிஞரின் துணைவியார் திருமதி.உமா டீச்சர் அவர்களின், 'எனக்கு இவரிடம் பிடித்ததும் பிடிக்காததும்' எனும் தலைப்பில் ஆன கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.


தமிழ் இலக்கியச் சூழலில் இப்பதிவுகள் நிச்சயம் சலசலப்புகளை ஏற்படுத்தும் என நம்பலாம்.

பதிப்பாசிரியர் உரையில் குறிப்பிட்டு இருக்கிறேன்: ' பழமலய் நேற்றும் பேசப்பட்டார். இன்றும் பேசப்படுகிறார். நாளையும் பேசப்பட வேண்டியவர்'.


வரும் காலங்களில் இந்நூல் குறித்தும்  நாம் நிறைய பேச இருக்கிறோம். பேசுவோம்!

நேற்று (17.06.2018) மாலை நூல் கைக்கு வந்தவுடன் பேராசிரியர் அவர்களைத் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தேன்.

'தனிப்பட்ட முறையில் உனக்கு நன்றி செங்குட்டுவன். இதற்கு விதையாகவும். தூண்டுகோலாகவும் இருந்தாய். அதனால் தான் இது சாத்தியப்பட்டுள்ளது' என்றார்.

மிக்க நன்றிங்க ஐயா!

நூல் வெளியீட்டு விழா குறித்து பேராசிரியர்  அவர்கள் அறிவிப்பார்..!


வியாழன், 14 ஜூன், 2018

இன்றைய தினமணியில் செய்தி...

நன்றி…

மாணவி செ.புனிதவதியைப் பாராட்டிச் சிறப்பு செய்த

விழுப்புரம் கலைஞர் கருணாநிதி நகர்,
சக்தி விநாயகர் ஆலய வார வழிபாட்டு மன்றத் தலைவர் திரு.பொ.ஞானப்பிரகாசம்
 மற்றும் நிர்வாகிகள்…

இந்நிகழ்வினை சிறப்பான முறையில் இன்றைய (15.06.2018) தினமணி நாளிதழில்,
எழுத்தாளர் செங்குட்டுவன் மகள் புனிதவதி எனும் அடையாளத்துடன்
 பதிவு செய்துள்ள

விழுப்புரம்
தினமணி செய்தியாளர் திரு.இல.அன்பரசன்,
புகைப்படக் கலைஞர் திரு.ந.இராமமூர்த்தி

ஆகியோருக்கு நன்றி… நன்றி…

செவ்வாய், 12 ஜூன், 2018

ரகுபதி ஐ.ஏ.எஸ். அவர்களின் பாராட்டு



திரு.என்.கே..ரகுபதி ஐ.ஏ.எஸ். அவர்கள்.
தூத்துக்குடி துறைமுகத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்.

குறிப்பாக, தான் பிறந்த மண்ணையும் மக்களையும் மறக்காதப் பண்பாளர்.

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் தான் இவரது சொந்த ஊர்.

ஓய்வு பெற்ற இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, எப்படியும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தமது சொந்த ஊருக்கு வந்து விடுகிறார்.

உறவினர் நண்பர்கள் மட்டுமல்ல தான் பயின்ற பள்ளிக்கூடம் ஆகியவற்றையும் சந்தித்து விடுகிறார்.

வறுமை வாட்டியபோது, பசிக்கும் போதெல்லாம் படித்துப் படித்து தன்னை செதுக்கிக் கொண்டு சமூகத்தில் முன்னேறிய இவர், தம் மண்ணின் மைந்தர்களும் கல்வியில் சாதித்து முன்னேற்றம் காண வேண்டும் எனும் வேட்கை உடையவர்.

இதற்காக, ஆண்டுதோறும் வளவனூர் அரசுப் பள்ளிகளில் பயின்று இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி வருகிறார்.

வளவனூர் எனும் அளவில் மட்டுமல்லாமல் விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் முதலிரண்டு இடங்கள் பெறும் மாணவர்களையும் அழைத்து ஊக்குவித்து வருகிறார். இதற்காக இவருடன் பயின்ற சக மாணவர்கள், நண்பர்கள் என ஒரு குழுவே அர்ப்பணிப்பு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நேற்று காலை வளவனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாகவே நடந்தது.

அரசுப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவியும் இந்தாண்டு பாராட்டப் பெற்றார்.

மாவட்ட அளவில் முதலிடம் எனும் போது என் மகள் புனிதவதி பெயர் இருப்பதால் ரொக்கப் பணம் மற்றும் சான்றிதழ், சால்வை அணிவித்து புனிதவதி பாராட்டப் பெற்றார்.

மாணவி மென்மேலும் கல்வியில் முன்னேற்றம் காணத் தேவையான அறிவுரையினையும், மதிப்பிற்குரிய இரகுபதி ஐ.ஏ.எஸ். அவர்கள் வழங்கினார்.

அருகில் நின்றிருந்த நானும் என் மனைவியும் பெரிதும் உவந்தோம்…

முன்னாள் நகரமன்றத் தலைவரின் திடீர் உதவி

இளம் எழுத்தாளர் சாருமதியின் நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (10.06.2018) இரவு நடந்தது.

அப்போது எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே!

விழா தொடங்கி நடந்து கொண்டிருந்தது. முதல் நூலினைப் பெற்று கொண்ட, விழுப்புரம் நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.இரா.ஜனகராஜ் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.

பேச்சின் ஊடாக எதிரில் அமர்ந்து இருந்த என்னைச் சுட்டிக் காட்டிய அவர், ' நண்பர் செங்குட்டுவன் மகள் புனிதவதி இன்று +2 தேர்வில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

செங்குட்டுவன் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பது நமக்குத் தெரியும். இப்போது தனது மகளை எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். அவரது மகள் உயர் கல்வியிலும் நிச்சயம் சாதிக்க வேண்டும்.
அதற்கு உதவியாக ரூபாய்.10 ஆயிரத்தை செங்குட்டுவன் மகளுக்கு வழங்குகிறேன்’ என்று அறிவித்தார்.

இது எனக்கு இன்ப அதிர்ச்சியை திகைப்பை ஏற்படுத்தியது.

இந்த முன்னாள் பத்திரிகையாளன் - எழுத்தாளனின் எடை என்ன?
நெருங்கிய நண்பர்கள் சிலருக்குத்தான் தெரியும். அவர்களில் ஒருவர் தான் நமது சேர்மன் அவர்கள்.

என் மகள் தேர்ச்சி தகவல் வெளியான நிமிடம் தொடங்கி, அவரது உயர்கல்விக்கான செலவினை பகிர்ந்து கொள்வதில், தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நண்பர்கள் பலரும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகள்!

என்னையும் என் சூழலையும் நன்கு அறிந்த சேர்மன் அவர்கள், தாமாக முன்வந்து உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்.

அறிவித்தக் கையோடு, எழுத்தாளர் இரவிக்குமார் முன்னிலையில், பேராசிரியர் தா.பழமலய் கையால் உரிய தொகையையும் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்.

தக்க நேரத்தில் தக்க உதவி. நன்றிங்க தலைவரே..!