செவ்வாய், 12 ஜூன், 2018

ரகுபதி ஐ.ஏ.எஸ். அவர்களின் பாராட்டு



திரு.என்.கே..ரகுபதி ஐ.ஏ.எஸ். அவர்கள்.
தூத்துக்குடி துறைமுகத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்.

குறிப்பாக, தான் பிறந்த மண்ணையும் மக்களையும் மறக்காதப் பண்பாளர்.

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் தான் இவரது சொந்த ஊர்.

ஓய்வு பெற்ற இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, எப்படியும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தமது சொந்த ஊருக்கு வந்து விடுகிறார்.

உறவினர் நண்பர்கள் மட்டுமல்ல தான் பயின்ற பள்ளிக்கூடம் ஆகியவற்றையும் சந்தித்து விடுகிறார்.

வறுமை வாட்டியபோது, பசிக்கும் போதெல்லாம் படித்துப் படித்து தன்னை செதுக்கிக் கொண்டு சமூகத்தில் முன்னேறிய இவர், தம் மண்ணின் மைந்தர்களும் கல்வியில் சாதித்து முன்னேற்றம் காண வேண்டும் எனும் வேட்கை உடையவர்.

இதற்காக, ஆண்டுதோறும் வளவனூர் அரசுப் பள்ளிகளில் பயின்று இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி வருகிறார்.

வளவனூர் எனும் அளவில் மட்டுமல்லாமல் விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் முதலிரண்டு இடங்கள் பெறும் மாணவர்களையும் அழைத்து ஊக்குவித்து வருகிறார். இதற்காக இவருடன் பயின்ற சக மாணவர்கள், நண்பர்கள் என ஒரு குழுவே அர்ப்பணிப்பு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நேற்று காலை வளவனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாகவே நடந்தது.

அரசுப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவியும் இந்தாண்டு பாராட்டப் பெற்றார்.

மாவட்ட அளவில் முதலிடம் எனும் போது என் மகள் புனிதவதி பெயர் இருப்பதால் ரொக்கப் பணம் மற்றும் சான்றிதழ், சால்வை அணிவித்து புனிதவதி பாராட்டப் பெற்றார்.

மாணவி மென்மேலும் கல்வியில் முன்னேற்றம் காணத் தேவையான அறிவுரையினையும், மதிப்பிற்குரிய இரகுபதி ஐ.ஏ.எஸ். அவர்கள் வழங்கினார்.

அருகில் நின்றிருந்த நானும் என் மனைவியும் பெரிதும் உவந்தோம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக