ஞாயிறு, 31 மார்ச், 2019

விழுப்புரம் லோக்கோ ஷெட்

தமிழ்நாட்டில் இருந்த ரயில் பணிமனைகளில் குறிப்பிடத் தக்கது விழுப்புரம் லோக்கோ ஷெட்.

1990களின் தொடக்கம் வரை,
நீராவி என்ஜின்கள் பயன்பாட்டில் இருந்த வரை,

விழுப்புரம் லோக்கோ ஷெட்டும் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்றாக இருந்தது.

அப்புறம் தான் அது தன் களையை இழக்க ஆரம்பித்தது.

ஆனாலும் தன் கம்பீரத்தை இழக்கவில்லை.

இதோ, உள்ளே இருக்கும் இந்த இயந்திரம்: ரயில் என்ஜினை முன்னுக்கும் பின்னுக்குமாக மாற்றும் இயந்திரம்.


முழுக்க முழுக்க மனித சக்திதான் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரம்மாண்டம் இப்போதும் நம்மை வியக்க வைக்கிறது!

இதற்காகவே கூட விழுப்புரத்தில்
ரயில் அருங்காட்சியகத்தை உருவாக்கலாம், ரயில்வே நிர்வாகம்..!

விழுப்புரத்தின் பழைய நீதிமன்றக் கட்டிடம்

மறக்க முடியுமா..?

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் இயங்கி வந்த இந்தக் கட்டிடத்தை..!


எத்தனை வழக்கறிஞர்கள்... எத்தனை வழக்காளிகள்... எத்தனை வழக்குகள்... எத்தனை யெத்தனைத் தீர்ப்புகள்...

எப்போதும் பரபரப்புடன் தானே இந்த வளாகம் காட்சியளிக்கும்!

பத்திரிகையாளனாய் ஆயிரம் தடவைகளுக்கு மேல் இந்த வளாகத்திற்குள் வலம் வந்திருப்பேன்.

சில முக்கிய வழக்குகளுக்காக விடிய விடிய காத்திருந்த நிகழ்வுகளும் உண்டு.

ஒரே நேரத்தில் 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை.

சாக்குப் பைக்குள் துண்டிக்கப்பட்ட இளம் பெண்ணின் தலை..

அத்தியூர் விஜயாவை முதன் முதலில் சந்தித்தது...

எஸ்.பி. - வழக்கறிஞர் மோதல்...

சொல்லிக் கொண்டே போகலாம்!

உங்கள் நினைவுகளிலும் ஏராளமான நிகழ்வுகள் வந்துப் போகலாம்.

உம். இத்தனையும் சுமந்து கொண்டிருந்த கட்டிடங்கள் இன்று இல்லை.

அரசு மகளிர் மேனிலைப் பள்ளியாக உருமாறி நிற்கிறது..!

(இணைப்பில் இருப்பது: கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன்பு எதற்கும் இருக்கட்டுமே என்று எடுத்து வைத்தப் புகைப்படம்)

ஞாயிறு, 10 மார்ச், 2019

விழுப்புரம் தாகூர் பள்ளி ஆண்டு விழா

தந்தையின் மறைவு.
கண்களின் ஈரம் இன்னும் காயவில்லை.

தங்களின் "விழுப்புரம் தாகூர் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்க வேண்டும்" என்று திரு.இல.ரவீந்திரன் அவர்களின் அன்பு அழைப்பு...

தவிர்க்க முடியாது. அவசியம் பங்கேற்க வேண்டும். பங்கேற்றேன்.
மேடையில், நிகழ்வினை ஒருங்கிணைக்கும் பொறுப்பினையும் சார் என்னிடம் ஒப்படைத்து விட்டார்.


விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் சி.மா.பாலதண்டாயுதம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று இருந்தனர்.

மாணவர்களின் கலக்கல் கலை நிகழ்ச்சிகள். அப்பள்ளியின் மாணவனான என் மகன் சித்தார்த்தனும் கலைநிகழ்ச்சியில் வந்து சென்றான்.
மாணவர்களிடையே ஒரு சில வார்த்தைகள் பேசவும் பரிசுகள் வழங்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

மனசுக்கு ஆறுதலாக இருந்தது.

மிக்க நன்றிங்க இரவீந்திரன் சார்...