வெள்ளி, 31 மே, 2019

விழுப்புரம் ரயில் நிலைய டிஸ்பிளே...

விழுப்புரம் தென்னகத்தின் மிகப்பெரிய ரயில் சந்திப்பு தான்... பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...

ஆனால், இந்த ரயில் நிலையத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு..?

வருத்தப்பட்டுத்தான் ஆக வேண்டும்!

உதாரணத்திற்கு நடைமேடை இரண்டு மற்றும் மூன்றின் நிலையைப் பாருங்கள்.

ரயில் வருகைத் தொடர்பான டிஸ்பிளே வைக்கப்பட்டு ஆண்டுக் கணக்கில் ஆகிறது.

ஆனால் முறையானப் பராமரிப்பும் பாதுகாப்பும் கிடையாது.

ஆங்காங்கே உடைந்துத் தொங்குகிறது.

நம்ம வீட்டுப் பொருள் என்றால் நாம் இப்படி போட்டு வைச்சு இருப்போமா?


இதற்கெல்லாம் அலட்சியம் தான் காரணம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்..?

செவ்வாய், 28 மே, 2019

விழுப்புரம் ஐயனாருக்கும் ஒரு காலம் வரும்...



விழுப்புரம் ஐயனார் கோயில் குளத்தின்

கிழக்கு வாயிலில் ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார்.

மேற்கு வாயிலில் விசுவரூப ஆஞ்சநேயர் நின்றிருக்கிறார்.

தெற்கு வாயிலில் ஸ்ரீபாண்டுரங்கன் பீடம்.

வடக்கு வாயிலில் புதிய ஆஞ்சநேயர் உருவாகி வருவதாகத் தகவல்!

குளத்தின் மையப் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகத்தின் நீராழி மண்டம்.

குளத்தின் மீதும் அதன் வாயில்கள் மீதும் தீவிர கவனம் செலுத்தியவர்கள்...

குளத்தின் உரிமையாளரான ஐயனாரை அப்படியே விட்டுவிட்டனர்.

பாருங்களேன்:
கடந்த 12 ஆண்டுகளாக இடமிருந்தும், கடைகள் மூலமான வருமானம் இருந்தும் ஐயனாருக்குச் சிலை இல்லை எனும் நிலை..!


திரு.வி.க. வீதியில் இருக்கும் இந்த ஐயனார் கோயில் இந்துசமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிறார்கள்.


பார்க்கலாம், ஐயனாருக்கும் ஒரு காலம் வராமலா போகும்..?

ஞாயிறு, 26 மே, 2019

விழுப்புரம் கோயில் கல்வெட்டுகள்

விழுப்புரம் கோயில்களில் காலத்தால் முந்தியவை,
கைலாசநாதர் கோயில், வைகுந்தவாசப் பெருமாள் கோயில், பூந்தோட்டம் வாலீசுவரர் கோயில் மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் பசுபதீசுவரர் கோயில் ஆகியவைகளாம்.

இவற்றில் பசுபதீசுவரர் கோயில் தவிர்த்து மற்ற மூன்று கோயில்களிலும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களைச் சொல்லும் ஏராளமானக் கல்வெட்டுகள் இருக்கின்றன.


அப்படி என்னதான் சொல்கின்றன இக்கல்வெட்டுகள்..?

விழுப்புரம் கோயில் கல்வெட்டுகள் 1947-48ஆம் ஆண்டில், இந்திய அரசின் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன.

1980களில் ஆய்வில் ஈடுபட்ட, ஆய்வாளர் அச்சிறுப்பாக்கம் தாமரைக் கண்ணன் அவர்கள், “விழுப்புரம் நகர் கல்வெட்டுகள்” என்பதாகச் சில தகவல்களைத் தந்தார்.

வாலீசுவரர் கோயில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வாளர் அரியலூர் இல.தியாகராசன் அவர்கள் ஆவணம் இதழில் (2000ஆம் ஆண்டு) தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.

2009ஆம் ஆண்டு, கங்கைகொண்டசோழபுரம் காப்பாட்சியர் பரணன் தலைமையிலானக் குழுவினர், விழுப்புரம் கோயில் கல்வெட்டுகளை முழுமையாகப் படியெடுத்தனர்.

ஆனாலும்கூட, இத்தனை முயற்சிகளுக்கும் பின்னும்கூட, விழுப்புரம் நகர் கோயில்களின் கல்வெட்டுகளின் முழுமையானத் தகவல்கள் இன்னும் வெளிவந்த பாடில்லை!

தமிழக அரசின் தொல்லியல்துறைதான் இதற்கான முழு முயற்சிகளை,
முன் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

படியெடுக்கப்பட்டக் கல்வெட்டுகள் குறித்து, மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், அழகிய தமிழில், கையேடாக வெளியிட வேண்டும்.

விழுப்புரத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் குறித்த ஆவணங்களும் தமிழக அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அப்போதுதான், வரலாறு மக்களைச் சென்றடையும்.

இல்லாவிட்டால், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஒரு சிலரிடமே வரலாறு சிக்கிக் கொண்டிருக்கும்..! 

(இணைப்பில் இருப்பது:
விழுப்புரம் வாலீசுவரர் கோயிலின் அழகியக் கல்வெட்டு. காலம்: கி.பி.998)

செவ்வாய், 21 மே, 2019

விழுப்புரம் பாரதி கேட்டரிங் இன்ஸ்டிடியூட் விழா...

விழுப்புரத்தில் இயங்கி வரும் Bharathi institute of hotel management and paramedical நிறுவனத்தின் பரிசளிப்பு மற்றும் பணிநியமன ஆணை வழங்கும் விழா நேற்று 21.05.2019 மாலை விழுப்புரத்தில் நடந்தது.


இந்நிறுவனத்தில் பணியாற்றும் நண்பர் சுரேஷ் அவர்களின் அன்பு அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக நாம் பங்கேற்றோம்.


நிறுவனத்தின் தாளாளர் திரு.எம்.சிவக்குமார், முதல்வர் திருமதி.புவனேசுவரி ஆகியோர் தலைமைப் பொறுப்பை ஏற்று இருந்தனர்.

கல்வி நிறுவனத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தோம்.


மேலும், “ தமிழர்களின் பாரம்பரியம் என்பது உடையில் மட்டுமல்ல உணவிலும் இருக்கிறது. அந்தப் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டியது நம் வரலாற்றுக் கடமை” என்பதைச் சுட்டிக்காட்டி விளக்கியதுடன்,


“ பாரதி உணவக மேலாண்மை நிறுவனம், தமிழர்களின் பாராம்பரிய உணவு வகைகள் குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினோம்.


தொடர்ந்துப் பேசிய நிறுவனத்தின் தாளாளர் சிவகுமார், “ நிச்சயம் உங்கள் கோரிக்கை எங்கள் கல்வி நிறுவனத்தால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என உறுதி அளித்தார்.

நமக்கு மீண்டும் மகிழ்ச்சி. அவர்களுக்கு மீண்டும் நம் வாழ்த்துகள்…

புகைப்படங்கள்:
நன்றி: நண்பர் திரு.ரஃபி...