ஞாயிறு, 20 அக்டோபர், 2019

பிடாகம் - குச்சிப்பாளைம் ஆஞ்சநேயர்

“ மூன்று வருடங்களுக்கு முன்பு ஆற்றில் அடித்து வரப்பட்டவர். இப்போது இங்கே எடுத்து வைத்து இருக்கிறோம்” என்கிறார் தமிழ்.

ஆஞ்சநேயர். பலகைக் கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டு இருக்கிறார்.

இடது பக்கம் திரும்பிய முகம்: சிறப்புக்கு உரியது என்கிறார்கள்.

வலது கை அபய முத்திரை. இடது கையில் தாமரை.


இவரதுக் காலம், கி.பி.16ஆம் நூற்றாண்டு!

இந்த ஆஞ்சநேயர் எங்கிருந்து வந்திருப்பார்?

இந்த ஆராய்ச்சி எல்லாம் நமக்குத் தேவையில்லாதது!

அவர், அவருக்கான இடத்தைத் தேடிக் கொண்டார். அவ்வளவே!

தென்பெண்ணை கரையோரம், (பிடாகம்) குச்சிப்பாளையம் கிராமப் பொதுமக்கள் இவருக்குக் கோயில் எழுப்பி, குடமுழுக்கு நடத்தத் தயாராகி வருகின்றனர்.

ஆஞ்சநேயருக்கு நம் வாழ்த்துகள்!

தகவல் அளித்து உதவிய பேராசிரியர் ஜி.சங்கரநாராயணன் அவர்களுக்கும்

பிடாகம் குச்சிப்பாளையம் நண்பர் திரு. தமிழ் அவர்களுக்கும் நம் நன்றிகள்! 

தென்பெண்ணை நதியினில்

உம். மாதக்கணக்கில் அல்ல… ஆண்டுக் கணக்கில் இருக்கும்!

தென்பெண்ணை ஆற்றில் இப்படி நடைபோட்டு..!


தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து ரயில்வே பாலம் வரை… ஒரு நடை…


“இதோ பாருங்க ஐயா” – நண்பர் தமிழ் சுட்டிக்காட்டிய இடத்தில், முதுமக்கள் தாழி, புதைந்து காணப்பட்டது.


இன்னும் ஏராளமானத் தாழிகள்  மண்மூடிக் கிடக்கின்றன.


நடையின் போது, மெல்லிய, தடித்த, வாய் அகன்ற, வேலைப்பாடுகளுடன் கூடிய பானை ஓடுகள் – கால்களுக்கு இடையில் தென்பட்டன.


சேகரித்துக் கொண்டோம்.

வெயில் சுட்டெரித்தது. நான் வறண்ட ஆரம்பித்து விட்டது.

தென்பெண்ணை, ஒரு வரலாற்றுப் புதையல்!

மீண்டும், மீண்டும் இதன் மீது நடை நாம் போடலாம்..

இந்தச் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, ஆர்வத்துடன் நம்மை வழிநடத்திய, (பிடாகம்) குச்சிப்பாளையம் நண்பர், தமிழ் அவர்களுக்கும்,


வழக்கம் வரலாற்றுத் தேடலில் தன்னை இணைத்துக் கொண்டு, இன்றளவும் என்னுடன் பயணித்து வரும் தம்பி விஷ்ணு ஆகியோருக்கு நம் நன்றிகள்..! 

சனி, 19 அக்டோபர், 2019

வேட்டப்பூர்

வேட்டப்பூர்…

விழுப்புரத்தின் தெற்கே, விழுப்புரத்தையொட்டி உள்ள கிராமங்களில் ஒன்று.

அருகில் உள்ள ஆனாங்கூர் கிராமத்தை நாம் பார்க்கும் போதே, நண்பர் முத்துவேல் அவர்களிடம் இருந்து அன்பு அழைப்பு: "வேட்டப்பூருக்கும் வாங்க!"

இன்று (18.10.2019 சனிக்கிழமை) தான் நேரம் கிடைத்தது. தம்பி விஷ்ணுவுடன் வேட்டப்பூர் பயணம்.

அந்த ஊர் இளைஞர்கள் ஆர்வத்துடன் நம்மை வழி நடத்தினர்.




“நத்தமேடு”. பகுதி முழுக்கப் பானை ஓடுகளின் சிதறல்கள்!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் நத்தமேட்டினை நினைவுக்குக் கொண்டு வந்தது.

இந்தப் பகுதியில் இருந்து தான், விளைநிலங்களில் இருந்து, சிவலிங்கம், குழவிக் கல் போன்றவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்ததாம்!


இவற்றை பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.



பிரம்மாண்ட சிவலிங்கம், மாரியம்மன் கோயிலில் வைத்து இருக்கிறார்கள்.

வெளிப்பட்டு இருப்பவை சில தான்.

இன்னும் ஏராளமான வரலாறு, வரலாற்றுத் தடயங்கள் வேட்டப்பூர் மண்ணில் புதைந்து இருக்கலாம்!


வியாழன், 3 அக்டோபர், 2019

ஆனாங்கூர் ஐயனார்

ஆனாங்கூர் ஐயனார்...

விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் கிராம ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்டவர்.

தனியாருக்குச் சொந்தமான கோயில் வளாகத்தில் தற்போது அமர்ந்து இருக்கிறார்.

அழகாக, கம்பீரமாக, மஹாராஜ லீலாசனத்தில் காட்சி தருகிறார்.


இவரதுக் காலம் கி.பி.8 ஆம் நூற்றாண்டு.

ஆனாங்கூர் கிராமத்தில் ஏற்கனவே பல்லவர் கால முருகன் உள்ளிட்ட சிற்பங்களும் கல்வெட்டும் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

ஆனாலும், ஐயனார் இப்போதுதான் நமக்குக் காட்சி தந்திருக்கிறார் என நம்புகிறோம்.

இதுவரை ஆவணப்படுத்தப்படாதவர்.

இவரின் காலத்தைக் கணிக்க உதவிய மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு. Sankara Narayanan G அவர்களுக்கும்

நம் பார்வைக்குக் கொண்டு வந்த தம்பி விஷ்ணு Vishnu Stark விற்கும் நம் நன்றிகள்..!