ஞாயிறு, 9 ஜனவரி, 2022

விழுப்புரம் கன்னியாகுளம் சாலை

விழுப்புரம் நேரு வீதியில் இருந்து தெற்கில் பிரிகிறது கன்னியாகுளம் சாலை. 


இந்த சாலை எப்பவும் பரபரப்பாகவே இருக்கும். காரணம், இந்தப் பகுதிகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்கள். 


அப்புறம், விழுப்புரத்தின் தெற்குப் பகுதியில் இருக்கும் கிராமங்களை நகரத்தோட இணைக்கும் ஒரு இணைப்புப் பாலமாகவும் இருக்கு கன்னியாகுளம் சாலை. 


நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னாடி, இருபுறமும் வயல்வெளிகள் சூழ்ந்த ஒரு பசுமை சாலை தான் இந்த சாலை. 


குறிப்பாக, பண்ருட்டிக்குப் போகக்கூடிய பிரதான சாலை இதுதான். அதனாலேயே இந்த சாலைக்கு ஓபி ரோடு அதாவது ஓல்டு பண்ருட்டி ரோடு பழைய பண்ருட்டி சாலை என்னும் பெயரும் இருக்கு. 


அப்போது விஜயா, பாபு என்று அழைக்கப்பட்ட இப்போது முருகா என்று அழைக்கப்படும் சினிமா தியேட்டர். இதைத் தாண்டுனா எல்லாம் வயல்வெளிகள் தான். 


பிரம்மாண்டமாக கிளைபரப்பி நிற்கும் காட்டுவா மரங்கள் சில நேரங்களில் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த இடத்தின் பழமையின் மிச்ச சொச்சங்கள் இவை. 


இந்தச் சாலையின் ஊடாக மேற்கு கிழக்காக ஓடும் கோலியனூரான் கால்வாய். மிகவும் பிரம்மாண்டமாக இருக்குமாம். என் தந்தையார் காலம் சென்ற கோதண்டம் அவர்கள் பலமுறை சொல்லக் கேட்டு இருக்கிறேன். 


சரி. வார்த்தைக்கு வார்த்தை கன்னியாகுளம் ரோடு ன்னு சொல்றோம் ல. 


அதுக்கு என்ன காரணம்? 


இந்த சாலையின் இறுதியில் அமைந்திருக்கிறது கன்னியாத்தா என்று அழைக்கப்படும் இந்தக் கன்னியம்மன் கோயில். 


கோயிலுக்கு அருகிலுள்ளது குளம். முதல்ல பரந்து விரிந்து இருந்துச்சு. இப்போ சுருங்கிடுச்சு. 


கன்னியம்மன் கோயில் குளம். அதுதான் கன்னியாகுளம் ஆகி.. இந்தச் சாலைக்கான பெயர்க் காரணம் ஆயிடுச்சு. 


...மேலதிக தகவல்களுக்கு...


https://youtu.be/bPUIPdQknHQ

வெள்ளி, 7 ஜனவரி, 2022

விழுப்புரத்தில் அருங்காட்சியகம் - இடம் ஆய்வு

அருங்காட்சியகங்கள் துறை அதிகாரியின் வரவும்... ஆய்வும்... 

விழுப்புரத்தில் அருங்காட்சியகம் வந்து விடும்... நம்பிக்கைத் துளிர்த்துள்ளது... 

மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் அவர்களுக்கு நம் நன்றிகள்... 

தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை உதவி இயக்குனர் துளசி பிருந்தா அவர்கள் இன்று 07.01.2022 விழுப்புரம் வருகை... 

பெருந்திட்ட வளாகத்திற்குள் அருங்காட்சியகம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தினை ஆய்வு செய்தார்! 

கடலூர் அருங்காட்சியகக் காப்பாட்சியர் உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனர். 

அதாவது, அருங்காட்சியகம் அமைப்பதற்கானப் பூர்வாங்கப் பணிகள் தொடங்கி விட்டன. 

அவரே சொன்னார்: இது உங்கள் மாவட்டத்தின் கால் நூற்றாண்டுக் கனவு இல்லீங்களா?"

உண்மைதான். அந்தக் கனவு நனவாகும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

உதவி இயக்குனர் அவர்களின் வருகை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நமக்கு! 

ஐயா ஒரிசா பாலு Uraiyur Sivagnanam Balasubramani அவர்களுக்கு இத்தருணத்தில் நமது நன்றிகள்..! 

உடனிருந்த நண்பர்கள்:

திருவாமாத்தூர் கண சரவணகுமார் 

Raffi NoorBasha

செவ்வாய், 4 ஜனவரி, 2022

திருக்குறளார் வீ.முனுசாமி

"சிரித்து மறக்கப்படாது. சிந்திக்க வேண்டும்".

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தனது பேச்சின் ஊடாக திருக்குறளார் வீ.முனிசாமி அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது.

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் அமைந்துள்ளது தோகைப்பாடி கிராமம்.

இங்கு 1913 ஆம் செப்டம்பர் 26 ஆம் தேதி வீராசாமி வீரம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தார் வீ.முனிசாமி.

 


விழுப்புரம் கிழக்கு அக்ரகாரம் தெருவில் உள்ள வீட்டில் அவரது வாழ்க்கை தொடர்ந்தது.

திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே இவருக்குக் குறளின் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது.

1935 ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தொடங்கிய குறளாரின் குறள் பரப்பும் பணி அரை நூற்றாண்டையும் கடந்தது. 

அக்காலத்தில் புராண இதிகாசங்களை சோறு குழம்பு போலவும் திருக்குறளை ஊறுகாய் போலவும் வைத்திருந்தனர்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டார் திருக்குறளார். இதில் அவர் வெற்றியும் பெற்றார்.

பல்பொடி கண்ணாடி கடிகாரம் போல திருக்குறளும் சாமானியர்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு வந்தது.

நகைச்சுவை ததும்பும் குறளாரின் பேச்சு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியது.

குறளாரின் குறள் பரப்பும் பணி தமிழகத்தின் மூலை முடுக்குகளில் மட்டும் அல்ல: நாடெங்கிலும் கடல் கடந்து வெளிநாடுகளிலும் தொடர்ந்தது.

குறளாரின் பணியை, குறட் பயன் கொள்ள நம் திருக் குறள் முனி சாமி சொல் கொள்வது போதுமே என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டது இங்குக் குறிப்பிடத்தக்கது.

1951 ஜனவரி 23 ஆம் தேதி உடையார் பாளையம் குறுநில மன்னர் கச்சியுவரங்க காளாக்க தோழ உடையாரால் திருக்குறளார் எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை இவர் பெற்றிருந்தாலும் முதல் முதலில் வழங்கப்பட்ட திருக்குறளார் பட்டம் தான் இவர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

திருக்குறளார் அவர்கள் வள்ளுவனார் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, இன்பத் தோட்டம், முருகன் முறையீடு, வடலூரும் ஈரோடும் திருக்குறள் அதிகார விளக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார்.


பெரியவர் ராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட திருக்குறளார், 1952 இல் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் எக்ஸ்பிரஸ் நாளிதழின் அதிபர் ராம்நாத் கோயங்கா ஆவார்.

இறுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோயங்காவை வென்றார் திருக்குறளார்.

இதன் மூலம் இந்திய பாராளுமன்றத்தில் திருக்குறள் ஒலித்தது.

திருக்குறளார் அவர்களின் குறள் பற்றினை மிகவும் உணர்ந்தவர் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள். 1981இல் மதுரையில் நடந்த  உலகத் தமிழ் மாநாட்டில் திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கி, அந்த அரங்கிற்கு குறளாரையே தலைமை ஏற்கச் செய்தார்.

தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறிபரப்பு மையத்திற்கு திருக்குறளார் வீ. முனிசாமி அவர்கள் தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அரண்மனைகளில் மட்டுமே மன்னர்கள் முன்னிலையில் தவழ்ந்து கொண்டிருந்த திருக்குறளை ஆலமரத்து அடிக்குக் கொண்டு வந்து பாமர மக்களின் முன்னிலையில் நடமாடச் செய்தவர் திருக்குறளார் என்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பாராட்டி இருந்ததுக் குறிப்பிடத்தக்கது.

குரலாகவே வாழ்ந்த குறலுக்காகவே வாழந்த ஐயா திருக்குறளார் அவர்கள் 1994 ஜனவரி 4 ம் தேதி ஆமாம் இதே நாளில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

சென்னையில் அவரது உடலுக்கு முதல்வர் செல்வி ஜெயலலிதா இறுதிஅஞ்சலி செலுத்தினார். 

விழுப்புரம் கொண்டு வரப்பட்ட ஐயாவின் பூத உடல் விழுப்புரம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


அன்னாரின் நினைவு தினமான நேற்று 04.01.2022 விழுப்புரம் இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், குறளாரின் மகன்கள் வழக்கறிஞர் மு.கோபிநாதன், மு.ஞானசூரியன், சிவாஜி மன்றத் தலைவர் ஆறுமுகம், எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 


குறளார் குறித்து மேலும் விவரங்களுக்கு: 

https://youtu.be/q7felGJd3Bo