புதன், 20 ஏப்ரல், 2022

கூவாகம்: அரவான் களப்பலி

உலகப் புகழ்ப் பெற்ற கூத்தாண்டவர் திருக்கோயிலின் திருத் தோரோட்டம் நேற்று 20.04.22 காலை விமரிசையாக நடந்தது. 

இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.


பிற்பகலில் தேர், கூவாகம் நத்தம் பந்தலடிக்கு வந்து சேர்ந்தது.

இங்குதான் பக்தர்களின் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்பட்டன.


அதன் பிறகு என்ன நடந்தது?


பார்ப்பதற்காக நண்பர் கிருஷ்ணாவுடன் நேற்று மாலை கூவாகம் போயிருந்தேன்.


பந்தலடி அப்போதும் களைகட்டிதான் இருந்துச்சு.பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


இதோ திருத்தேரில் கூத்தாண்டவர் அமைதியாக அமர்ந்து இருக்கிறார்.

அவருக்குக் காணிக்கையாக செலுத்தப்பட்ட காய்கனிகள் மாலைகள் போன்றவற்றை வாங்குவதற்கு மக்களிடையே கடும் தள்ளுமுள்ளு. 


போலீசார் தடியடி. பெண்மணி ஒருவருக்குக் கால் முறிந்தக் காட்சிகளைப் பார்த்தோம்.


மாலை ஆறு மணியைக் கடந்து விட்டது. தேர் முன்னும் பின்னும் அசைகிறது.


இதோ காளி இருக்கும் திசையின் ஊடாக அரவான் புறப்பட்டு விட்டார்.


வயல்வெளிகளைக் கடந்து தேர் வேகம் எடுக்கிறது.பொதுமக்களும் பின் தொடருகிறார்கள்.

ஏரிக்கரையின் அருகே வந்தவுடன் தேர் நிற்கிறது.


அரவானின் அங்கங்கள் ஒவ்வொன்றாக அகற்றப்படுகிறது. ஆமாம் அரவான் களப்பலி ஆரம்பம்.


இதோ அரவானின் சிரசு கீழே இறக்கப்படுகிறது. அப்போது அரவான் முகம் வெள்ளைத் துணியால் மூடப்படுகிறது.


பக்தர்களிடையே பெரும் சோகம். கவலை தோய்ந்த முகத்துடன் அங்கிருந்து கலைந்து செல்கின்றனர்.


அரவான் சிரசு இரவு நீண்ட நேரம் இங்கிருக்கும். பிறகு காளியின் அருளால் கண் திறக்கப்படும். பாரதம் படிக்கப்படும்.


மீண்டும் உயிர்த்தெழுந்த அரவான் ஊருக்குள் செல்வார்.


முழு வீடியோ பார்க்க:


https://youtu.be/kimnI8zStLY


வீடியோ: ப.ரே.ம. கிருஷ்ணமூர்த்தி

சனி, 9 ஏப்ரல், 2022

கூவாகம்: கொற்றவை மூத்ததேவி சிற்பங்கள்

 கூவாகம்… கடந்த 6ம் தேதி தான் தம்பி விஷ்ணுவுடன் போய் வந்தேன்.


ஆனாலும் இருப்புக் கொள்ளவில்லை இன்று 09.04.22 சனிக்கிழமை அதிகாலை மீண்டும் பயணம். இந்த முறை நண்பர் சரவணகுமார் உடன்.


கூவாகம் ஏரிக்கரையில் காளி கோயில். அரவான் களப்பலியும் அரவான் மீண்டும் கண் திறத்தலும் இங்கு தான்!


கோயில் எல்லாம் இல்லை. வெட்டவெளி தான். இதோ பிரம்மாண்டமாக நிற்கிறாள் பல்லவர் கால கொற்றவை.


கொற்றவையின் வலது கரத்தின் கீழே அரிகண்ட சிற்பம்!


கூவாகத்தில் நடக்கும் அரவான் களப்பலி நம் கண் முன்னே வந்து நிற்கிறது. 


ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தன்னை பலியிடுதல் எனும் வழிபாடு இன்று கூத்தாண்டவர் திருவிழாவாக கூவாகத்தில் நிலைபெற்றுள்ளது. 

அருகிலேயே அழகான  மூத்ததேவியின் சிற்பம். கீழே கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தொடர்பாகவோ அல்லது இக்கோயில் திருவிழா தொடர்பானப் பதிவுகளிலோ மேற்காணும் கொற்றவை மற்றும் மூத்ததேவி சிற்பங்கள் இதுவரை பேசப்பட்டாகத் தெரியவில்லை. 


இதுதொடர்பான அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனலின் பதிவினைக் கீழ்க்கண்ட இணைப்பில் பார்க்கலாம்…


https://youtu.be/R7lmhdvqVc4


பயணத்தில் உதவிய நண்பர்கள்


Veera Vishnu 

திருவாமாத்தூர் கண சரவணகுமார் 


ஆகியோருக்கு நன்றிகள்..!

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

விழுப்புரத்தில் அருங்காட்சியகம்: அன்று முதல் அறிவிப்பு வரை

விழுப்புரத்தில் அருங்காட்சியகம்… இது ஒரு நீண்ட பயணம்…


இந்தப் பயணத்தை 1992இல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தவர் அன்றைய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நினைவில் வாழும் தமிழறிஞர் கொடுமுடி சண்முகன் அவர்கள்!


2005இல் இந்தப் பயணம் முக்கிய கட்டத்திற்குச் சென்றது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் கா.பாலச்சந்திரன் ஐஏஎஸ் அருங்காட்சியகம் அமைப்பதற்கான முன்னெடுப்பில் ஈடுபட்டார். ஆனால் முற்றுபெறவில்லை!


2018- அருங்காட்சியகம் பயணம் தனது மைல் கல்லைத் தொட்டது! கையெழுத்து இயக்கம் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் வரையிலாகவும்…


2021 ஆகஸ்டில் மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களது சந்திப்பு வரை இது தொடர்ந்தது.


நமது நீண்ட பயணம் இதோ அருங்காட்சியகம் எனும் முக்கிய சந்திப்பினை வந்தடைந்து இருக்கிறது!


மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் இருக்கிறோம்.


இத்தருணத்தில் இப்பயணம் வெற்றிபெற உறுதியாக இருந்த மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் அவர்களுக்கும்,


அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் நம் நன்றிகள் உரித்தாவதாக!

குறிப்பாக இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய 02.04.22 சனிக்கிழமை இந்து தமிழ் திசையில் ஆவணப்படுத்தி இருக்கும் பத்திரிகையாளர் நண்பர் எஸ்.நீலவண்ணன் அவர்களுக்கும் நம் நன்றிகள்..!