சனி, 21 மே, 2022

முட்டத்தூர் பாறை ஓவியங்கள்

விழுப்புரம் செஞ்சி சாலையில் இருக்கும் கிராமம் முட்டத்தூர்.

இங்க இருந்து தான் போன வாரத்துல ஒரு நாள் நண்பர் சதீஷ் தொடர்பு கொண்டார். எங்க ஊரு மலைக்கு நீங்க வரணும் னு.

இதோ இன்னிக்கு 09.05.2022 திங்கட்கிழமை தம்பி விஷ்ணு கூட முட்டத்தூர் புறப்பட்டு வந்தாச்சு.

சாலையை விட்டு இறங்கி நடக்கிறோம்.. அழகான பசுமை நிறைந்த வயல் வெளி. பக்கத்தில் தெரியும் மலை. இது மேல்தான் ஏறணும்.


சூரியன் வரலாமா வேணாமா ன்னு மேகங்களுக்குப் பின்னாடி நின்னு யோசிச்சுட்டு இருக்காரு. அவரது நீண்ட யோசனை நமக்கு நல்லது.

வயல் ல நடந்துப் போகும் போதே கேட்டேன். தண்ணீர் எடுத்து வந்தீங்களா?

இருக்குங்க ஐயா சதீஷ் இடமிருந்து பலமான பதில் வந்துச்சு.

மலை அடிவாரம்.. செருப்புகளை அங்கேயே கழட்டி விட்டுட்டு ஏற ஆரம்பிச்சோம்.


சரியான பாதை கிடையாது. பாறைகள் மேல தான் பயணம். முடியுமா? எனக்குள் யோசனை.

ஆனாலும் முயற்சி தொடங்கியது. 


இதுக்கு பிறகு நான் பட்டபாடு எனக்காக முட்டத்தூர் நண்பர்கள் பட்டபாடு.. நீங்களே பாருங்க.



மூச்சு வாங்குது. முடியல. இந்த இடத்தில் கொஞ்சம் நேரம் நின்னாச்சு. சாகசம்  மீண்டும் தொடருது..

இதோ இங்க எல்லாரும் உக்காந்துட்டோம். குடிக்க தண்ணீர். எல்லாரும் கேட்டாங்க. அப்பதான் சதீஷ் பையப் பாக்கறாரு. எடுத்து வைச்சத வீட்டிலேயே மறந்து வைச்சு வந்துட்டாரு. 

நல்லவேளை சூரிய பகவான் இன்னும் முழுசா கண் திறக்கல. திறந்திருந்தா நம்ம நிலவரம் கலவரமா போயிருக்கும். சரியான திட்டமிடலின் அவசியத்தை இந்தப் பயணம் பாறைகள் நமக்கு உணர்த்துது. 

சரி. வாங்க போகலாம். மீண்டும் நடக்கத் தொடங்கினோம். மலை உச்சி இது.

இப்ப. குகைக்குள்ள போறோம். இந்த மாதிரியான குகைத் தளங்கள் ல தான் அந்த கால மனிதர்கள் வாழ்ந்து இருக்காங்க.

குகைய விட்டு வெளியே வர்றோம். ஏறக்குறைய இது மலையின் இன்னொரு பக்கம்.

ஏறக்குறைய 2 மணி நேரமாச்சு. நாம் மலைமேல் நடக்க ஆரம்பிச்சு. இதோ வர வேண்டியது இடத்தை அடஞ்சிட்டோம் னு நண்பர்கள் சொல்றாங்க.

வழுவழுப்பான குகைத் தளத்தின் மீது இருந்து இயற்கையின் அழகை ரசிக்கிறோம்.

நாம உக்காந்து இருக்கும் இந்த இடத்தில் தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாறை ஓவியங்கள் இருக்கு.



பாறை ஓவியங்கள்…

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை சூழல், வேட்டைக் காட்சிகள் மந்திரம் சடங்கு நம்பிக்கை தொடர்பான விவரங்களை நமக்குச் சொல்கின்றன.

இந்த மாதிரியான பாறை ஓவியங்கள் பிரான்ஸ் ஸ்பெயின் இத்தாலி ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா ன்னு உலகம் முழுக்க நிறைய இடங்களில் இருக்கின்றன.

இந்தியாவிலும் கூட பிம்பெட்கா மகாதேவ குன்றுகள் கைமூர் குன்றுகள் சோன் பள்ளத்தாக்கு ன்னு பல இடங்கள் ல சொல்லலாம்.

தமிழ்நாட்டுல மல்லபாடி மல்லசத்திரம் மயிலாடும்பாறை சிறுமலை ன்னு பாறை ஓவியங்கள் இருக்கும் இடங்களோட பட்டியல் நீளும்.

நம்ம விழுப்புரம் மாவட்டத்துல 15க்கும் மேற்பட்ட இடங்கள்ல தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள் இருக்கு. இதுல குறிப்பா  கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றது ன்னே சொல்லலாம். இங்க இருக்கும் பறவை முகங் கொண்ட மனிதர்கள்.. உலக ஓவியங்களோட ஒப்பிடத்தக்கவை.

அப்புறம் கீழ்வாலை ஓவியங்கள் ல இருக்கும் குறியீடுகள்.. சிந்துவெளி குறியீடுகளோட ஒப்பிடப்படுகின்றன.

அப்புறம் ஆலம்பாடியில இருக்கும் எக்ஸ்ரே வடிவ ஓவியங்கள் செத்தவரை ஓவியங்கள் னு விழுப்புரம் மாவட்ட பாறை ஓவியங்கள சொல்லிட்டே போகலாம்.


அந்த வரிசையில் இதோ இடம் பிடிச்சு இருக்கு முட்டத்தூர் பாறை ஓவியங்கள்.

தண்ணீர் தெளிச்சா இன்னும் தெளிவா தெரியலாம். எங்கோ சுனையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தாங்க.

இப்ப பாருங்க ஓவியங்கள் தெளிவா அழகா தெரியுது.






சிவப்பு வண்ண ஓவியங்களுக்கு எப்பவும் பழம் பெருமை இருக்கு. காலத்தால் முந்தியது இவை. இங்கேயும் கூட அடர் சிவப்பு வண்ணத்தில்.. ஓவியங்கள்..



ஆஹா சிறப்பு..

இது சம்பந்தமாக மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கீழ்வாலை பாறை ஓவியங்களைக் கண்டறிந்தவருமான ஐயா அனந்தபுரம் கோ.கிருஷ்ணமூர்த்தி கிட்ட பேசினோம்.

அற்புதமான ஓவியங்கள பாத்து இருக்கீங்க வாழ்த்துகள் னு சொன்ன அவரு, வேட்டைச் சமூகத்தினர் விலங்குகளை எதிர்த்துப் போரிடுவதற்கானப் பயிற்சியை இவர்கள் மேற்கொள்கின்றனர். இதைத்தான் இந்த ஓவியங்கள் காட்டுகின்றன. இதில் மனித உருவம் மற்றும் விலங்கு போன்றவையும் காட்டப்பட்டுள்ளது என விளக்கினார்.

எங்களோட இந்த மலைப் பயணம்… உயிரைப் பணயம் வைத்த ஆபத்தான பயணம் னு கூட சொல்லலாம்.


இந்த நேரத்தில் மலையேற்றத்தின் போது என் கால்களாகவும் கைகளாகவும் திகழ்ந்த நண்பர் புரூஸ்லீ மாறனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

மனித குல வரலாற்றுத் தடயங்கள் காணப்படும் இடங்களில் முட்டத்தூரும் இடம் பெற்று இருப்பது நமக்கு மட்டும் அல்ல இந்த கிராமத்தினர் அனைவருக்குமே மகிழ்ச்சி தான் இல்லீங்களா?


முட்டத்தூர் பாறை ஓவியங்கள் குறித்த பத்திரிகை செய்திகள்:


                    தினத்தந்தி 12.05.2022

தினகரன் 12.05.2022

                    தினமணி 12.05.2022

                        மாலைமுரசு 13.05.2022

               The new Indian express 14.05.2022

                    தினமலர் 16.05.2022


முட்டத்தூர் பாறை ஓவியங்கள் குறித்த அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனலின் பதிவு:

https://youtu.be/gmOODM7KeJs



சனி, 7 மே, 2022

எசாலம் செப்பேடு

 சோழர்களின் கோயில் கட்டடக் கலைக்குச் சான்று, கல்வெட்டுகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடு, சிற்பங்கள் அப்புறம் கங்கைகொண்ட சோழபுரம் கோயில ராஜேந்திர சோழன் தான் கட்டினார் அப்படிங்கறதுக்கான ஆதாரம் இவை எல்லாவற்றையும் ஒரு சேர பாக்கணும் னா நாம எசாலத்துக்கு தான் போகணும்.


விழுப்புரத்தில் இருந்து 27 வது கிலோமீட்டர் ல அமைஞ்சி இருக்கும் ஊர் தான் எசாலம்.


இங்கதான் இருக்கு அருள்மிகு ராமநாத ஈஸ்வரர் கோயில்.



மேலே இருந்து சில படிக்கட்டுகள் கீழ இறங்கி தான் கோயிலுக்கு உள்ள போகணும்.


அழகான கருங்கல் கட்டுமானம். 

பலி பீடம் நந்தி.

ராமநாத ஈஸ்வரர தரிசிக்க இந்த படிக்கட்டுகளை கடந்து போகணும்.


அதுக்கு முன்னாடி நாம கோயிலை சுத்தி வந்துடலாம்.


கோயிலின் திருச்சுற்றில் முதலில் நமக்கு காட்சி தர்றது விநாயகர். அவருக்குப் பக்கத்துல தட்சிணாமூர்த்தி. பழைய சிற்பம் பின்னம் பட்டதால புதிய சிற்பத்த முன்னாடி வைச்சு இருக்காங்க. அப்புறம் விஷ்ணு, 


பிரம்மா இவருக்குப் பக்கத்தில் இருக்கும் துர்க்கை சிற்பம் ரொம்பவும் அழகா இருக்கு. அதுவும் ஒரு காலை முன்னும் இன்னொரு கால பின்னும் வைச்சு நின்னுட்டு இருக்கிறது இன்னமும் சிறப்பு.


இவங்கள எல்லாம் பாத்துட்டு கோயிலுக்குள்ள போறோம். நமக்கு முதல்ல தரிசனம் தர்றது அழகே வடிவான அம்மை திரிபுர சுந்தரி.


திருக்கோயிலின் மகா மண்டபம். உருளை வடிவ தூண்கள் தாங்கி நின்னுட்டு இருக்கு.


பிரம்மாண்ட வாயிற் காப்போர்.


இவர்களைக் கடந்ததும் அர்த்த மண்டபம்.. இங்கும் உருளை வடிவத் தூண்கள். ஆனால் முந்தையதை விட மிகவும் அழகான வடிவத்தில்.


கருவறையில் அருளின் வடிவமான லிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார் ராமநாத ஈஸ்வரர்.


கோயிலின் விமானம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். வட்ட வடிவில் முழுவதும் கருங்கற்களால் இது அமைந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வீணாதார தட்சிணாமூர்த்தி சிற்பம் மிகவும் அழகானது.


கோயில் முழுவதும் கல்வெட்டுகள். ராஜேந்திர சோழன் காலம் தொடங்கி கோப்பெருஞ்சிங்கன் காலம் வரையிலானவை இவை.


கோயில் கொண்டுள்ள இறைவன் திருவிராமீஸ்வரமுடைய மகாதேவர் என்றும் ராஜேந்திர சோழனின் குருவான சர்வசிவ பண்டிதரால் இக்கோயில் எடுக்கப்பெற்றது என்றும் தெரிவிக்கின்றன.


ஊருக்குப் பெயர் எய்தார். இது எப்போதில் இருந்து எசாலம் ஆச்சுன்னு தெரியல.


அப்புறம், 1987ல கோயில் திருப்பணிகள் நடந்துச்சு. அப்போ மண்ணுக்குள் புதைஞ்சு இருந்த செப்பேடு கிடைச்சது.


அதுதான் சோழர் வரலாற்றைச் சொல்லும் முக்கியத்துவம் வாய்ந்த எசாலம் செப்பேடு.



15 இதழ்களைக் கொண்டதாக இருக்கிறது இந்தச் செப்பேடு.


முகப்பில் புலி முத்திரை, இரண்டு மீன்கள் வில் உள்ளிட்டவை காட்டப்பட்டுள்ளன.


மேலும் வடமொழியில் அரசர்களின் திருமுடி வரிசைகளின் ரத்னங்களில் திகழ்வதான இது பரகேசரி வர்மனான ராஜேந்திர சோழனின் சாசனம் எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.


செப்பேட்டின் பதினைந்து ஏடுகளில் முதல் 4 ஏடுகள் வடமொழியிலும் மற்ற ஏடுகள் அனைத்தும் தமிழிலும் எழுதப்பட்டு இருக்கின்றன.


குறிப்பாக வடமொழி ஏடுகளில், ராஜராஜ சோழன் குறித்து சொல்லும் போது, கங்க நாட்டார் வங்க நாட்டார் கலிங்க நாட்டார் மகத நாட்டார்  மாளவர் சிங்களர் ரட்டர் ஒட்டர் கடாரர் கேரளர் கௌடர் பாண்டியர் முதலிய எல்லா அரசர்களையும் ராஜராஜன் வென்றான். தான் வெற்றி பெற்ற நாடுகளில் இருந்து கொண்டு வந்த செல்வத்தைக் கொண்டு தஞ்சாவூரில் சிவபெருமானுக்கு  தன் பெயரில் ராஜராஜேசுவரம் எனும் பிரம்மாண்டமான கோயிலைக் கட்டினான் என்று புகழ்கிறது.

மேலும் ராஜேந்திர சோழன் குறித்து சொல்லும் போது ராஜராஜனின் மகனான இவன் சௌந்தர்யத்தின் திருமாளிகை, வீரத்தின் விசால விளையாட்டுத் திடல். துணிவு பேரறிவு காதல் கருணை போன்றவற்றின் பிறப்பிடம். உலக உயிர்களை மகிழ்விக்கும் சக்ரவர்த்தி, கல்வியாகிய நதிக்கு கடல் போன்றவன்.  உதயத்தின் இருப்பிடம் இவன் என்றெல்லாம் புகழ்கிறது.


மேலும், நற்குணங்களின் தொகுதியான ராஜேந்திர சோழன் தன்னால் நிர்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் அதே பெயரில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டினான். சிவபெருமானின் திருவடியாகிய பாரிஜாதத்தில் வண்டாகத் திகழ்ந்தான் என்றும் சொல்கிறது.


கங்கைகொண்ட சோழபுரத்தில் அந்த மாபெரும் கோயிலை ராஜேந்திர சோழன் எடுப்பித்தான் எனும் தகவல் எசாலம் செப்பேட்டில் தான் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் சோழர் வரலாற்றில் குறிப்பாக ராஜேந்திர சோழன் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.


எசாலம் செப்பேடு கண்டறியப்பட்ட போதே பல்வேறு செப்புத் திருமேனிகளும் மண்ணுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டன. அவை இப்போதும் கோயிலுக்குள் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.


ராமநாத ஈஸ்வரர் கோயிலுக்கு வெளியே கம்பீரமாக அமர்ந்து இருக்கும் பல்லவர் கால ஐயனார் எசாலம் கிராமத்தின் பழமைக்கு மற்றுமொரு சாட்சி..

விரிவான விவரங்களுக்கு..


https://youtu.be/2Otc4R75810

திங்கள், 2 மே, 2022

அர்த்தநாரீச வர்மா சமாதி

சேலத்துக் கவிச்சிங்கம் ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா...


சேலம் சுகவனபுரியில் 1874 ஜுலை 27ம் தேதி பிறந்தவர்.


விடுதலைப் போராட்ட வீரர்.


பாரதியின் சம காலத்தவர்.


பாரதியின் மறைவுக்கு சுதேச மித்திரனில் இரங்கற்பா எழுதிய ஒரே கவிஞர்.


இவர் நடத்திய "வீரபாரதி" இதழை தடை செய்தது ஆங்கிலேய அரசாங்கம்.


காந்தி, திருவண்ணாமலை வந்த போது, வரவேற்புப் பத்திரம் வாசித்தவர்.


ராஜாஜியால் "ராஜரிஷி" எனப் புகழப் பெற்றவர்.


"மதுவிலக்குச் சிந்து" பாடியவர்.


மக்களைத் திரட்டி மதுவிலக்கு மாநாடு நடத்தியவர்.


ராஜாஜியின் மதுவிலக்கு அமலாக்கத்திற்குத் தூண்டுகோலாக இருந்தவர்.


க்ஷத்திரியன் இதழை நடத்தியவர்.


இறுதிக் காலத்தை திருவண்ணாமலையில் கழித்த இவர், தனது 99வது வயதில் 7.12.1964இல் காலமானார்.


திருவண்ணாமலை இடுகாடுகளுக்கு மத்தியில் தியாகி அர்த்தநாரீச வர்மாவின் சமாதி இதோ...