சனி, 21 மே, 2022

முட்டத்தூர் பாறை ஓவியங்கள்

விழுப்புரம் செஞ்சி சாலையில் இருக்கும் கிராமம் முட்டத்தூர்.

இங்க இருந்து தான் போன வாரத்துல ஒரு நாள் நண்பர் சதீஷ் தொடர்பு கொண்டார். எங்க ஊரு மலைக்கு நீங்க வரணும் னு.

இதோ இன்னிக்கு 09.05.2022 திங்கட்கிழமை தம்பி விஷ்ணு கூட முட்டத்தூர் புறப்பட்டு வந்தாச்சு.

சாலையை விட்டு இறங்கி நடக்கிறோம்.. அழகான பசுமை நிறைந்த வயல் வெளி. பக்கத்தில் தெரியும் மலை. இது மேல்தான் ஏறணும்.


சூரியன் வரலாமா வேணாமா ன்னு மேகங்களுக்குப் பின்னாடி நின்னு யோசிச்சுட்டு இருக்காரு. அவரது நீண்ட யோசனை நமக்கு நல்லது.

வயல் ல நடந்துப் போகும் போதே கேட்டேன். தண்ணீர் எடுத்து வந்தீங்களா?

இருக்குங்க ஐயா சதீஷ் இடமிருந்து பலமான பதில் வந்துச்சு.

மலை அடிவாரம்.. செருப்புகளை அங்கேயே கழட்டி விட்டுட்டு ஏற ஆரம்பிச்சோம்.


சரியான பாதை கிடையாது. பாறைகள் மேல தான் பயணம். முடியுமா? எனக்குள் யோசனை.

ஆனாலும் முயற்சி தொடங்கியது. 


இதுக்கு பிறகு நான் பட்டபாடு எனக்காக முட்டத்தூர் நண்பர்கள் பட்டபாடு.. நீங்களே பாருங்க.



மூச்சு வாங்குது. முடியல. இந்த இடத்தில் கொஞ்சம் நேரம் நின்னாச்சு. சாகசம்  மீண்டும் தொடருது..

இதோ இங்க எல்லாரும் உக்காந்துட்டோம். குடிக்க தண்ணீர். எல்லாரும் கேட்டாங்க. அப்பதான் சதீஷ் பையப் பாக்கறாரு. எடுத்து வைச்சத வீட்டிலேயே மறந்து வைச்சு வந்துட்டாரு. 

நல்லவேளை சூரிய பகவான் இன்னும் முழுசா கண் திறக்கல. திறந்திருந்தா நம்ம நிலவரம் கலவரமா போயிருக்கும். சரியான திட்டமிடலின் அவசியத்தை இந்தப் பயணம் பாறைகள் நமக்கு உணர்த்துது. 

சரி. வாங்க போகலாம். மீண்டும் நடக்கத் தொடங்கினோம். மலை உச்சி இது.

இப்ப. குகைக்குள்ள போறோம். இந்த மாதிரியான குகைத் தளங்கள் ல தான் அந்த கால மனிதர்கள் வாழ்ந்து இருக்காங்க.

குகைய விட்டு வெளியே வர்றோம். ஏறக்குறைய இது மலையின் இன்னொரு பக்கம்.

ஏறக்குறைய 2 மணி நேரமாச்சு. நாம் மலைமேல் நடக்க ஆரம்பிச்சு. இதோ வர வேண்டியது இடத்தை அடஞ்சிட்டோம் னு நண்பர்கள் சொல்றாங்க.

வழுவழுப்பான குகைத் தளத்தின் மீது இருந்து இயற்கையின் அழகை ரசிக்கிறோம்.

நாம உக்காந்து இருக்கும் இந்த இடத்தில் தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாறை ஓவியங்கள் இருக்கு.



பாறை ஓவியங்கள்…

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை சூழல், வேட்டைக் காட்சிகள் மந்திரம் சடங்கு நம்பிக்கை தொடர்பான விவரங்களை நமக்குச் சொல்கின்றன.

இந்த மாதிரியான பாறை ஓவியங்கள் பிரான்ஸ் ஸ்பெயின் இத்தாலி ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா ன்னு உலகம் முழுக்க நிறைய இடங்களில் இருக்கின்றன.

இந்தியாவிலும் கூட பிம்பெட்கா மகாதேவ குன்றுகள் கைமூர் குன்றுகள் சோன் பள்ளத்தாக்கு ன்னு பல இடங்கள் ல சொல்லலாம்.

தமிழ்நாட்டுல மல்லபாடி மல்லசத்திரம் மயிலாடும்பாறை சிறுமலை ன்னு பாறை ஓவியங்கள் இருக்கும் இடங்களோட பட்டியல் நீளும்.

நம்ம விழுப்புரம் மாவட்டத்துல 15க்கும் மேற்பட்ட இடங்கள்ல தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள் இருக்கு. இதுல குறிப்பா  கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றது ன்னே சொல்லலாம். இங்க இருக்கும் பறவை முகங் கொண்ட மனிதர்கள்.. உலக ஓவியங்களோட ஒப்பிடத்தக்கவை.

அப்புறம் கீழ்வாலை ஓவியங்கள் ல இருக்கும் குறியீடுகள்.. சிந்துவெளி குறியீடுகளோட ஒப்பிடப்படுகின்றன.

அப்புறம் ஆலம்பாடியில இருக்கும் எக்ஸ்ரே வடிவ ஓவியங்கள் செத்தவரை ஓவியங்கள் னு விழுப்புரம் மாவட்ட பாறை ஓவியங்கள சொல்லிட்டே போகலாம்.


அந்த வரிசையில் இதோ இடம் பிடிச்சு இருக்கு முட்டத்தூர் பாறை ஓவியங்கள்.

தண்ணீர் தெளிச்சா இன்னும் தெளிவா தெரியலாம். எங்கோ சுனையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தாங்க.

இப்ப பாருங்க ஓவியங்கள் தெளிவா அழகா தெரியுது.






சிவப்பு வண்ண ஓவியங்களுக்கு எப்பவும் பழம் பெருமை இருக்கு. காலத்தால் முந்தியது இவை. இங்கேயும் கூட அடர் சிவப்பு வண்ணத்தில்.. ஓவியங்கள்..



ஆஹா சிறப்பு..

இது சம்பந்தமாக மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கீழ்வாலை பாறை ஓவியங்களைக் கண்டறிந்தவருமான ஐயா அனந்தபுரம் கோ.கிருஷ்ணமூர்த்தி கிட்ட பேசினோம்.

அற்புதமான ஓவியங்கள பாத்து இருக்கீங்க வாழ்த்துகள் னு சொன்ன அவரு, வேட்டைச் சமூகத்தினர் விலங்குகளை எதிர்த்துப் போரிடுவதற்கானப் பயிற்சியை இவர்கள் மேற்கொள்கின்றனர். இதைத்தான் இந்த ஓவியங்கள் காட்டுகின்றன. இதில் மனித உருவம் மற்றும் விலங்கு போன்றவையும் காட்டப்பட்டுள்ளது என விளக்கினார்.

எங்களோட இந்த மலைப் பயணம்… உயிரைப் பணயம் வைத்த ஆபத்தான பயணம் னு கூட சொல்லலாம்.


இந்த நேரத்தில் மலையேற்றத்தின் போது என் கால்களாகவும் கைகளாகவும் திகழ்ந்த நண்பர் புரூஸ்லீ மாறனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

மனித குல வரலாற்றுத் தடயங்கள் காணப்படும் இடங்களில் முட்டத்தூரும் இடம் பெற்று இருப்பது நமக்கு மட்டும் அல்ல இந்த கிராமத்தினர் அனைவருக்குமே மகிழ்ச்சி தான் இல்லீங்களா?


முட்டத்தூர் பாறை ஓவியங்கள் குறித்த பத்திரிகை செய்திகள்:


                    தினத்தந்தி 12.05.2022

தினகரன் 12.05.2022

                    தினமணி 12.05.2022

                        மாலைமுரசு 13.05.2022

               The new Indian express 14.05.2022

                    தினமலர் 16.05.2022


முட்டத்தூர் பாறை ஓவியங்கள் குறித்த அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனலின் பதிவு:

https://youtu.be/gmOODM7KeJs



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக