நெம்புகோல் மற்றும் விழுப்புரம் தமிழியக்கம் அமைப்புகளின் சார்பில், பாவேந்தர் நூற்றாண்டு விழா, 20.05.1990 அன்று விழுப்புரம் ஜோதி திடலில் நடந்தது.
ப.அருளியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் இதில் பங்கேற்றனர். உரையரங்கில் என் பெயரும் இடம்பெற்று இருந்தது.
தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பேசி வந்திருக்கிறேன். ஆனால் மேடையேறுவது, மேடைப்பேச்சு என்பது இதுதான் முதல்முறை...
எந்தத் தயக்கமும் இல்லை: சரளமான உரை. தமிழினப் பகைவர்களைத், துரோகிகளை, அப்போதிருந்த தலைவர்களைக் கடுமையாகச் சாடினேன். இந்தச் சிறுவனின் ஆவேசப் பேச்சை அனைவரும் அமைதியாகக் கேட்டனர்.
பேச்சை முடிக்க வேண்டும். முடிப்பதற்கு முன்பாக, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழங்கினேன். அவ்வளவு தான் அரங்கம் அதிர்ந்தது. சிரிப்பொலியால்!
அவ்வளவு நேரம், தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றெல்லாம் முழங்கியவன், திடீரென “ஜிந்தாபாத்” வேற்று மொழி முழக்கத்தை முழங்கியது தான் ( வேண்டுமானால் “புரட்சி நீடூழி வாழ்க” என்று சொல்லி இருக்கலாம்) அனைவரது நகைப்பிற்கும் இடம்கொடுத்தது.
மேடையில் இருந்த அருளியார் சிரித்துக் கொண்டே என்னைத் தட்டிக் கொடுத்தார். எனக்கோ, பயங்கர வெட்கமாய்ப் போய்விட்டது. ச்சே, முதல் மேடை அரங்கேற்றத்திலேயே இப்படி ஆகிவிட்டதே என்று!
அப்போதிலிருந்து கொஞ்சம் நாள், தோழர்கள் என்னை “ஜிந்தாபாத் செங்குட்டுவன்" என்றே வேடிக்கையுடன் அழைத்து வந்தனர்..!