புதன், 28 ஜூன், 2023

என் வாழ்க்கையின் திசை மாற்றத்தின் தொடக்கம் - எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்

8- ம் வகுப்பு வரை மூன்று பள்ளிகளைப் பார்த்துவிட்டு, 9ம் வகுப்புக்கு விழுப்புரம் திரு.காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடியெடுத்து வைத்தேன்.

 

தொடக்கப்பள்ளி ஆசிரியரான என் தந்தையார் திமுக அனுதாபி. பெரியார் பற்றாளர். அவர் மூலமாக எனக்குள் கடவுள் மறுப்புக் கொள்கை கொஞ்சமாக ஊடுருவியிருந்த நேரம்.

 

என் வகுப்புக்கு ஆங்கில ஆசிரியராக வந்த த.பாலு முற்போக்குக் கொள்கை உடையவர். என்னைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார். மார்க்சிய நூல்களை வாசிக்கக் கொடுத்தார். புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் அவ்வப்போது நடைபெறும் அறைக்கூட்டங்களுக்கும் அழைப்பு வரும். நானும் பங்கேற்று வந்தேன்!

 

இதற்கிடையில் என் வீட்டு பக்கத்து வீட்டில் வசித்து வந்த டான்சி போர்மேன் வைத்திலிங்கம், திக காரர். அவரிடம் நான் நிறைய அரசியல் பேசுவேன்.

 

எப்படியும் இந்தப் பையனை பிடித்துப்போட வேண்டும்என முடிவுசெய்தார். அதில் வெற்றியும் பெற்றார். திக-வில் அரங்க.பார்த்தீபன் போன்ற நண்பர்கள் அறிமுகமானார்கள். நண்பர் வி.ஆர்.ரவிச்சந்திரன், சுயமரியாதை பிரச்சார வெளியீடுகளை தொடர்ந்து என்னிடம் கொடுத்து வாசிக்கச் செய்தார்.

 

மண்டல் அறிக்கை விவகாரம் அரசியல் களத்தில் சூடுபிடித்திருந்த நேரம். ரயில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திக பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து ஆட்டோகிராப் வாங்கினேன்.

 

தொடர்ந்து, மண்டல் அறிக்கைக்கு ஆதரவாக 1.8.1989 அன்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன். வைத்திலிங்கம், அவரது கருப்புச் சட்டையை எனக்குக் கொடுத்தார். தொளதொள வென்று இருந்தது. அணிந்து கொண்டேன். தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். “வயதில்லைஎனும் காரணமாக என் மீது மட்டும் வழக்கு இல்லை. ஆனாலும் தோழர்களுடன் நாள் முழுவதும் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் இருந்தேன்.

 

கல்லூரிக்குச் சென்றிருக்க வேண்டும். கனாக்கால அனுபவங்களை இரசித்திருக்க வேண்டும். ஆனால் காவல் நிலையம் நோக்கி சென்றேன்.

 

என் வாழ்க்கையின் திசை மாற்றத்தின் தொடக்கம் இது...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக