1990... ஒரு முக்கியமான ஆண்டு. கலை இலக்கிய அமைப்பான நெம்புகோல், அரசியல் அமைப்பான மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஆகியவற்றில் தீவிர செயலாற்றத் தொடங்கினேன்... என் வாழ்க்கையைப் போராட்டக் களமாக்கினேன்...
போராட்டங்கள், கருத்தரங்கு, பொதுக்கூட்டம் என அந்த ஆண்டில் விழுப்புரத்தில் நிறைய நிகழ்வுகள். அத்தனையிலும் பங்கெடுத்தேன்.
விழுப்புரம் ரயில்வே மேம்பாலப் பணியைத் துரிதப்படுத்தச் சொன்ன போராட்டம், நியாயவிலைக் கடை பணியாளர்களின் தொடர் போராட்டம், பள்ளிகளில் நடக்கும் கட்டாய நன்கொடை எதிர்ப்புப் போராட்டம், பாவேந்தர் நூற்றாண்டு விழா, ஐயா ஆனைமுத்து பங்கேற்ற இட ஒதுக்கீடு ஆதரவு கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளைச் சொல்லலாம்.
குறிப்பாக, ரயில்வே மேம்பாலம் தொடர்பாக அனைத்து அமைப்புகள் பங்கேற்ற தர்ணா போராட்டத்தைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு நெம்புகோல் சார்பில் எனக்கு வழங்கப்பட்டது.
மஜஇக சார்பில் விழுப்புரம், பனையபுரம், நெல்லிக்குப்பம் பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று உரை நிகழ்த்தினேன். போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக விழுப்புரம் நகரில் தொடர்ந்து பல நாட்கள் நிதி திரட்டியதையும் மறக்க முடியாது!
இந்த 90இல் தான் புதுச்சேரி சன்டே மார்க்கெட்டில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டது, விழுப்புரத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வாட்ச்மேன் உத்தியோகம் பார்த்தது போன்ற நிகழ்வுகளும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் அரங்கேறின...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக