பெரியவர் ஏ.கோவிந்தசாமி அவர்கள்...
15.06.1928இல் புதுச்சேரி தேங்காய்த்திட்டு பட்டாளத்தார் ஆனையப்ப நாயகர் – மீனாட்சியம்மாள் இணையருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார்.
கடலூர் நகராட்சித் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றார்.
1940இல் தென்னார்க்காடு மாவட்ட மார்க்கெட் கமிட்டியில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.
1945இல் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாருடன் இணைந்து "தென்னார்க்காடு மாவட்ட வன்னியர் சங்கம்" எனும் அமைப்பினை ஏற்படுத்தினார். இதுவே 1951இல் “தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி” ஆக உருவெடுத்தது. கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சி. பொதுச்செயலாளர்கள்: ஏ.கோவிந்தசாமி, மரப்பட்டறை பி.ஜி.நாராயணசாமி.
1952இல் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பாராளுமன்ற மற்றும் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி.
திண்டிவனம் பாராளுமன்றத் தொகுதியில் பலம் வாய்ந்த பத்திரிகை அதிபரும் காங்கிரஸ் வேட்பாளருமான ‘எக்ஸ்பிரஸ்’ கோயங்காவை எதிர்த்து திருக்குறளார் வீ.முனிசாமியும், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் செல்வாக்குப் பெற்ற பஸ் அதிபர் பாஷ்யம் ரெட்டியாரை எதிர்த்து ஏ.கோவிந்தசாமியும் உழைப்பாளர் கட்சி வேட்பாளர்களாகக் களத்தில் நின்றனர்.
தேர்தல் முடிவில் 19 சட்டமன்றத் தொகுதிகளிலும், 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் உழைப்பாளர் கட்சி அபார வெற்றி பெற்றது. திருக்குறளார் இந்திய நாடாளுமன்றத்துக்குள்ளும், ஏ.ஜி. சென்னை மாகாண சட்டமன்றத்திற்குள்ளும் அடியெடுத்து வைத்தனர்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றார் எஸ்.எஸ்.ஆர். இதனால் “உழவர் கட்சி” எனும் புதிய கட்சியைத் தொடங்கினார் ஏ.ஜி.
1954இல் நடந்த காணை கஞ்சனூர் ஜில்லா போர்டு தேர்தலில் உழவர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஏ.ஜி. அப்போது அவரதுச் சின்னம் ‘உதய சூரியன்’. பின்னாளில் இது திமுகவின் அதிகாரபூர்வ சின்னமானது.
உழவர் கட்சியை நடத்திக் கொண்டிருந்த அதே காலத்தில் திமுகவின் தலைமை நிலைய பொறுப்பாளராக ஏ.ஜி.யை நியமித்தார் அண்ணா.
1957 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டது திமுக. வளவனூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார் ஏ.ஜி.
வெற்றி பெற்று அண்ணாவுடன் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த 15 பேர்களில் இவரும் ஒருவராவார்.
1967இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக, அண்ணா தலைமையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. முகையூர் சட்டமன்ற உறுப்பினரான ஏ.ஜி. அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். அண்ணா மறைவினைத் தொடர்ந்து கலைஞர் தலைமையிலான அமைச்சரவையிலும் ஏ.ஜி. இடம்பெற்றார்.
புதுவை உள்ளடக்கிய தென்னாற்காடு மாவட்ட திமுக செயலாளர், தொமுச செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் திமுகவில் ஏற்றிருந்தார். கட்சி நடத்திய குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்டப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று சிறை சென்றார் ஏ.ஜி.
திராவிட நாடு, இந்தி மற்றும் குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு குறித்த இவரது சட்டமன்ற உரைகள் குறிப்பிடத்தகுந்தன.
இவர் அமைச்சராக இருந்தபோது தான் ‘நந்தன் கால்வாய்த் திட்டம்’ கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1969 மே 18ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி.
இறக்கும் தருவாயில் அவர் உச்சரித்த வார்த்தை: “ஏழையாகப் பிறந்தேன். ஏழையாகவே சாகிறேன். நான் யாரிடமும் லஞ்சம் வாங்கியது கிடையாது.”
தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும் விசுவாசமாகவும் கடைசி வரை வாழ்ந்தவர் ஏ.ஜி. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பெரியவர் ஏ.கோவிந்தசாமி அவர்கள்.
அன்னாரின் நினைவைப் போற்றும் வகையில், விழுப்புரம் வழுதரெட்டிப் பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவரங்கம் எழுப்பப்பட்டுள்ளது.
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக