செவ்வாய், 15 ஏப்ரல், 2025

அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்/ ASHOK VARTHAN SHETTY IAS

 கே.அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ் (ஓய்வு) ... 


செப்டம்பர் 30, 1993 அன்று விழுப்புரம் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவான போது, அன்றைய தினம் மாலையே முதல் மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்றார் அசோக் வர்தன் ஷெட்டி ஐஏஎஸ் அவர்கள். 


இளம் வயது. தமிழைக் கடித்து கடித்துப் பேசினார். பணிகளில் கறாராக இருந்தார். ஆய்வுக் கூட்டங்கள் மணிக்கணக்கில் நடக்கும். ஆர்டிஓ நிலையிலான அதிகாரிகள் மயக்கம் போட்டு விழுந்ததுண்டு.


இவரைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்தச் செய்தியை பத்திரிகைகள் பிரசுரிக்கக் கூடாது என்பது ஏபிஆர்ஓ வின் அன்புக் கட்டளை. அதையும் மீறி அந்தச் செய்தியைப் பிரசுரம் செய்த பத்திரிகை தினகரன் மட்டுமே. அதன் செய்தியாளர் அடியேன்.


சக பத்திரிகையாளர் அசோக்குமார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தபோது, மாவட்ட ஆட்சியர் ஷெட்டியைச் சந்தித்தோம். 


அப்போது அவர் சொன்னது: “தலித் வாய்ஸ் எடிட்டர் விடிஆர் (வி.டி.ராஜசேகர்) என் உறவினர்தான். கை விலங்கு போட்டு அவரை அழைத்துச்சென்று இருக்கின்றனர். பத்திரிகையாளர் என்றால் இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும்.”


மாவட்ட ஆட்சியராகி ஓராண்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் சேலம், சோகோ பாக்டரியின் தனிஅலுவலராக ‘டம்மிப்’ பதவியில் நியமிக்கப்பட்டார்.


இதற்கிடையே 2006இல் திமுக ஆட்சி அமைந்தபோது  உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பேற்றிருந்த ஸ்டாலின் அவர்களுக்கு நிர்வாக ரீதியான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கும் முக்கிய பொறுப்பில், உள்ளாட்சித்துறை செயலாளர் பொறுப்பில் இருந்தார் ஷெட்டி அவர்கள்.


அடுத்த ஆட்சிமாற்றத்தின் போது முந்தைய ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குத் தொடுக்கும் பணியில் அதிமுக அரசு ஈடுபட்டது. இதற்கிடையே தனக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் பணிக்காலம் இருந்தாலும் விருப்ப ஓய்வு (நீதிமன்றம் சென்று) பெற்றுக்கொண்டார் ஷெட்டி அவர்கள்.


கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திமுக அரசு அமைந்த போதே,  அரசு ஆலோசகராக ஷெட்டி அவர்கள் வரப்போகிறார் என பலமாகப் பேசப்பட்டது. ஆனால் அப்படி அப்போது எதுவும் நடக்கவில்லை.


ஷெட்டி அவர்கள் மிகுந்த வாசிப்பு வழக்கம் கொண்டவர். ஆவணக் காப்பகத்தின் ஆணையராக இருந்தபோது அவரை சந்தித்தேன். “குலக் கல்வித் திட்டம் தொடர்பான ஆவணங்கள் உடனடியாகக் கொண்டு வாருங்கள்” என ஊழியர்களை அப்போது அவர் விரட்டிக் கொண்டிருந்தார். 


கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பொதுவெளியில், ஷெட்டி அவர்களைப் பரவலாகப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, கல்வி, இட ஒதுக்கீடு தொடர்பான உரையாடல்களில், அண்மையில்கூட அவரதுக் குரலைக் கேட்க முடிந்தது.


முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் வரிசையில் மீண்டும் ஏதோ நடக்கப் போகிறது என யூகித்தேன். நடந்துவிட்டது...


மாநிலங்களின் உரிமைகள்  தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (15.4.25) அமைத்துள்ள உயர்மட்டக் குழுவில் கே.அசோக் வர்தன் ஷெட்டி அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்! 


ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் முதன்மைச் செயலாளராக (2009) இருந்த போது கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அசோக் வர்தன் ஷெட்டி ஐஏஎஸ் அவர்கள் தனது உரையை சாணக்கியரின் மேற்கோளுடன் இவ்வாறு முடித்திருந்தார்:


"உங்கள் நடவடிக்கைகளில் மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள், ஏனென்றால் காட்டிற்குச் செல்வதன் மூலம் நேரான மரங்கள் வெட்டப்படுகின்றன, வளைந்தவை நிற்கின்றன என்பதை நீங்கள் காண்பீர்கள்".




திங்கள், 3 மார்ச், 2025

மயிலம் தமிழ் கலை அறிவியல் கல்லூரி நிகழ்வில் எழுத்தாளர் செங்குட்டுவன் பேச்சு!

தேடல்... உங்கள் வாழ்க்கயை வளப்படுத்தட்டும்!

எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், விழுப்புரம்.‌

(02.03.25 – செண்டூர்: நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம். இரண்டாம் நாள் நிகழ்வில் ஆற்றிய உரை)

 மயிலம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டத்தின் சிறப்பு முகாமின் இரண்டாவது நாள் நிகழ்வில் பங்கேற்று உங்களை எல்லாம் சந்திக்கவும், உங்களிடையே உரையாற்றவும் வாய்ப்பு கிடைத்தது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இத்தகைய வாய்ப்பினை வழங்கிய மதிப்பிற்குரிய கல்லூரி முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்!

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்லூரியில் பயிலும் வாய்ப்பு உங்களுக்கு எல்லாம் கிடைத்திருப்பதற்கு உள்ளபடியே நீங்கள் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைய வேண்டும்! 85 ஆண்டுகளைக் கடந்து தனது தமிழ்ச் சேவையை கல்விச்சேவையை நமது கல்லூரி தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எண்ணற்ற ஆன்றோர் சான்றோர் பெருமக்களை உருவாக்கிக் கொடுத்தப் பெருமை நம் கல்லூரிக்கு இருக்கிறது!

செண்டூர் கிராமத்தில் உங்கள் முகாமை நீங்கள் துவக்கி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இந்த ஊருக்கானப் பெயர்க் காரணம் ஏதேனும் தெரியுமா உங்களுக்கு?

மகாபாரதத்திலே ஒரு காட்சி. திரௌபதியை துச்சாதனன் அரசவைக்கு அழைத்து வருகிறான். “கைச் செண்டால் அவள் பைங்குழல் பற்றி“ அவளை அழைத்து வந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் செண்டு என்பது யாது? இதுபற்றி தமிழ்த் தாத்தா உவேசா அவர்கள் மிகவும் ஆய்வு செய்தார். செண்டு என்பது பொதுவாகப் பூச்செண்டினைக் குறிக்கும். துச்சாதனன் கையில் எப்படி பூச்செண்டு இருக்கும்? செண்டு என்பது பந்து என்றும் பொருள்படும் பந்திற்கு இங்கு என்ன வேலை?

இந்த விஷயங்கள் எல்லாம் உவேசாவின் மூளையைக் குடைந்து கொண்டிருந்தன. இந்த நிலையில்தான் மாயவரம் அருகிலுள்ள ஆறுபாதி எனும் ஊருக்குச் சென்றிருந்தார் உவேசா அவர்கள். அங்கிருந்தப் பெருமாளை தரிசித்தபோது, அவரதுக் கரத்தில் பிரம்பு போல் ஒன்று இருந்தது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. பெருமாள் கையில் ஏந்தி நிற்கும் இதன் பெயர் என்ன என்று உவேசா கேட்டார். அங்கிருந்த அர்ச்சகர் சொன்னார்: ‘இதன் பெயர் செண்டு’. இது ஒரு வகையான ஆயுதம். இதைத்தான் பெருமாள் ஏந்தி நிற்கிறார். இப்படியான செண்டினைத்தான் ஐயனார் உள்ளிட்ட சில தெய்வங்களும் ஏந்தி நிற்கின்றன.

கைச் செண்டால் அவள் பைங்குழல் பற்றி“ எனும் பாரதத்தின் வார்த்தைக்கு உவேசா அவர்களுக்கு இப்போது பொருள் கிடைத்தது! அப்படியான செண்டினைத் தாங்கிய தெய்வம் இந்த ஊரில் இருக்கலாம். செண்டு இடம்பெற்ற ஊர், செண்டூராகி இருக்கலாம். அன்பிற்கினிய மாணவர்கள். இதுபற்றிய மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளலாம்!

இந்த நேரத்தில் டாக்டர் உவேசா அவர்கள் குறித்தான ஒரு சில விவரங்களை உங்களிடையே பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன். அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்தெல்லாம் கண்டிப்பாக நீங்கள் படித்து இருப்பீர்கள். படித்துக் கொண்டும் இருப்பீர்கள் .‌குறிப்பாக, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு உள்ளிட்ட இலக்கியங்களை எல்லாம் ஓலைச் சுவடிகளில் இருந்தவற்றை எல்லாம் அச்சு நூலாக அவர் பதிப்பித்துக் கொண்டு வந்த வரலாறுகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள் என்றே கருதுகிறேன்.

இந்தச் சுவடிகளை எல்லாம் தேடித்தேடி அலைந்து திரிந்து அவர் மேற்கொண்ட பயணங்கள், ஆராய்ச்சிகள், கடுப்பு உழைப்பு... அப்பப்பா... அவரது வரலாற்றைப் படிக்கும் போது நமக்கு மலைப்பு ஏற்படுகிறது. எந்த நேரத்திலும் அவர் மனம் தளரவில்லை. சோர்வு அடையவில்லை. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இப்படியான தேடலில் முழுநேரத் தேடலில் அவர் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்.

அதனால் தான் அவரை இன்று தமிழ்த் தாத்தா என்று நாம் உச்சிமுகர்ந்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அவரதுத் தேடல், உழைப்பு மட்டும் இல்லாவிட்டால், நமக்கெல்லாம் புறநானூறு, ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி எல்லாம் எப்படி கிடைத்திருக்கும்?

அன்பிற்கு உரிய மாணவர்களே, இந்த நேரத்தில் உவேசா அவர்களின் தேடல் குறித்தான இரண்டு விஷயங்களை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிலப்பதிகார ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவர், அதன் ஏடுகளைத் தேடி, கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் கோயிலுக்குச் சென்றார். அங்குச் சுவடிகள் இருப்பதாக அறிந்து. குறிப்பாக வரகுண பாண்டியன் என்பவரால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த சுவடிகள் அவை. ஆனால் இவர் சென்றபோது அந்தச் சுவடிகள் எதுவும் அங்கில்லை. விசாரித்தபோது, ஆகம சாஸ்திரங்களில் சொல்லியபடி செய்துவிட்டோம் என்று சொல்லி இருக்கின்றனர். ஆமாம். குப்பைக் கூலங்களாக இருந்தச் சுவடிகளை எல்லாம் குழிவெட்டி, அக்னி வளர்த்து நெய்யில் தோய்த்து அக்னி பகவானுக்கு இரையாக்கி விட்டார்கள். தீயில் போட்டு எரித்துவிட்டார்கள். இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா என்று மனம் நொந்தார் உவேசா அவர்கள்.

களக்காடு என்ற ஊருக்குச் சென்றபோது, ஒருவரது வீட்டில் வண்டிக் கணக்கில் சேகரித்து வைத்திருந்த சுவடிகளை எல்லாம், இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கிறது என்று சொல்லி, ஆடி பதினெட்டு அன்று ஆற்றில் தூக்கிப் போட்டு இருக்கிறார்கள். ஒரு இடத்தில் நெருப்புக்கு, இன்னொரு இடத்தில் நீருக்கு! சுவடிகளைத் தேடி அலைந்த உவேசாவின் உள்ளம் எப்படி எல்லாம் துடிதுடித்துப் போயிருக்கும்?

நண்பர்களே! இதனால் எல்லாம் அவர் சோர்ந்து விடவில்லை. மனம் தளர்வடையவில்லை. தனதுத் தேடலை, தேடல் யாத்திரைகளைத் தொடர்ந்தார். தனது வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தார்.

நான் முன்பே குறிபிட்டதுபோல் இந்த அயராத உழைப்பு தான், இந்த கடுமையான தேடல் தான் இந்த நேரத்திலும் அவர் குறித்து நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

இத்தனைக்கும் தமிழை மட்டுமே நன்கு அறிந்தவர் அவர். ஆனால் அவர் குறித்து உலகமே இன்று அறிந்து வைத்துள்ளது. பாரிஸ் நகரத்தில் வாழ்ந்த வின்சுலோ, உவேசாவின் தமிழ்ப்பணியைப் பாராட்டி இருக்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தமிழாசிரியர், திருக்குறளையும் புறநானூற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் ஆன ஜி.யு.போப் அவர்கள் உவேசா அவர்களை உச்சிமுகர்ந்து இருக்கிறார்.

சென்னையில் உள்ள உவேசாவின் இல்லத்திற்கு பெருங்கவி ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார். திலகர் வந்திருக்கிறார். ஏராளமான தலைவர்கள் அறிஞர்கள் வந்து சென்று இருக்கின்றனர். அவர் காந்தியைச் சந்தித்து இருக்கிறார். மகாகவி பாரதியுடன் உரையாடி இருக்கிறார். பாண்டித்துரைத் தேவர் போன்ற வள்ளல் பெருமக்கள் அவரைப் பொன்னேபோல் போற்றிப் புகழ்ந்துள்ளனர். புரவலர்களாக இருந்துள்ளனர்.

இத்தனைக்கும் உவேசா அவர்கள், தமிழாசிரியர், கல்லூரிக் கல்வித் தமிழாசிரியர். நான் முன்பே குறிப்பிட்டபடி தமிழில் மட்டும் பாண்டித்தியம் உள்ள பெரியவர்.‌ ஆங்கிலம் உள்ளிட்ட இன்னபிற மொழிகளையும் மற்றவர்கள் துணைக்கொண்டு அறிந்தவர். இன்று நாநிலமும் போற்றப்படுகிறார். காரணம், தமிழின் மீது, தமிழ் இலக்கியங்களின் மீது அவருக்கு இருந்த தணியாத ஆர்வம், ஈடுபாடு, இதுதொடர்பான அவரதுத் தேடல்கள், உழைப்பு, அவரது ஆய்வுகள் இவை எல்லாம் அவரை உயர்த்தி இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்!

தமிழின் மீதான அந்தத் தேடல், ஆர்வம், உழைப்பு உங்களிடமும் ஏற்பட வேண்டும். கண்டிப்பாக நீங்கள் வாழ்க்கையில் இந்தச் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்! அதற்கான விதை, இதோ இந்த செண்டூரில் ஊன்றப்படட்டும்! விருட்சமாக வளர எனது வாழ்த்துகள்! நன்றி! வணக்கம்!

திங்கள், 24 பிப்ரவரி, 2025

பரிவட்டமாகவே இருக்கட்டும்: இதுகூட உங்களுக்குப் பொறுக்கவில்லையா மிஸ்டர் மனுஷ்ய புத்திரன்?

(23.2.25 இந்து தமிழ் திசை நாளிதழில் பிரசுரமான மனுஷ்ய புத்திரன் கட்டுரையை முன்வைத்து)


உள்ளூரில் பரிவட்டம்:

இதுகூட உங்களுக்குப் பொறுக்கவில்லையா?

2023 மார்ச் மாத இறுதியில் விழுப்புரத்தில் முதல் புத்தகத் திருவிழா நடந்தது. முதல் வாரத்திலேயே மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம்: தினசரி நிகழ்வுகளில் உள்ளூர் படைப்பாளர்களுக்கு முக்கியத்துவம், உள்ளூர் படைப்பாளர்களுக்கு என கட்டணமில்லா தனி அரங்கு (ஸ்டால்).

புத்தகத் திருவிழா தொடங்கும் முதல் நாள் வரை இதுபற்றி மாவட்ட நிர்வாகம் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. புத்தகத் திருவிழாவை உள்ளூர் படைப்பாளர்கள் புறக்கணிப்பது என முடிவு செய்தோம். இதனை விளக்கி தயாரிக்கப்பட்ட துண்டறிக்கையை, புத்தகத் திருவிழா தொடக்க விழாவிற்கு வரும் விஐபிக்களின் முன்னிலையில் வீசுவது என முடிவெடுத்தோம்.

பதற்றமடைந்த மாவட்ட நிர்வாகம், விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

பிரதான அழைப்பிதழில் ஸ்டார் பேச்சாளர்களுடன் உள்ளூர் படைப்பாளர்களின் பெயர்களும் இடம்பெற வேண்டும். இது எங்கள் உள் கோரிக்கையாக இருந்தது. புதிதாக அழைப்பிதழ் அச்சிட போதிய அவகாசம் இல்லாததால், தினசரி பங்கேற்கும் உள்ளூர் படைப்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்ற தனித்தனி பேனர்கள் நாள்தோறும் வைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பிரதான அழைப்பிதழில் நாள் ஒன்றுக்கு 10 உள்ளூர் படைப்பாளர்களின் பெயர்கள் (இவர்கள் அனைவருக்குமான நேரம் ஒரு மணி நேரம்) இடம்பெற்றன.

மனுஷ்ய புத்திரன் கருத்துப்படி இது உள்ளூர் படைப்பாளர்களுக்கான பரிவட்டமாகவே இருக்கட்டும். இதில் உங்களுக்கென பிரச்சினை? உங்களைப் போன்றவர்களுக்குத்தான், புத்தகத் திருவிழா உள்ளிட்ட பெயர்களில் மாவட்டங்கள் தோறும் அரசாங்கமே பரிவட்டம் கட்டி, ஆஸ்தான வித்வான்களாக அனுப்பி வைக்கிறதே!

சாமானிய படைப்பாளனுக்கு உள்ளூரில்கூட பரிவட்டம் இல்லையானால், அவன் வேறெங்கு போவான்?

ஒவ்வொரு மாவட்டத்திலும் உங்கள் பரிவட்டத்தின் மதிப்பு ரூ.50,000 இல் இருந்து ஒரு இலட்சம் வரை. அதுவும் உடனடித் தொகையாக. ஆனால், உள்ளூர் படைப்பாளிக்குக் கிடைக்கும் பரிவட்டமோ அந்த ஊரில் அந்த நேரத்தில் ரூ.50ல் இருந்து 100 வரை. துண்டு அல்லது சால்வையாக! அடடா, இதுகூட உங்களுக்குப் பொறுக்கவில்லையா மிஸ்டர் மனுஷ்ய புத்திரன்?

இங்குத் துண்டோ சால்வையோ பிரச்சினை அல்ல: அங்கீகாரம். உள்ளூர் படைப்பாளனுக்கு அவன் சொந்த மண்ணில் அவனுக்கான ஒரு அங்கீகாரம்! மனுஷ்ய புத்திரன்களிடம் இதை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை! அரசாங்கத்திடம் கூட பணிந்து கேட்கவில்லை! நாங்களாகவே எடுத்துக் கொள்கிறோம். இதுதான் விழுப்புரத்தில் நடந்தது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கப் போவது!

மாவட்டங்களில் நடக்கும் புத்தகத் திருவிழாக்களுக்கு எதன் அடிப்படையில் ஸ்டார் பேச்சாளர்கள் அனுப்பப்படுகிறார்கள்? அவர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது? இதுபற்றி எல்லாம் தமிழ்நாடு அரசும் பபாசியும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!

எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், விழுப்புரம்.

Writer.senguttuvan@gmail.com



தினத்தந்தி 3.3.2023

                     தினமணி 6.3.2023


சனி, 18 ஜனவரி, 2025

வளவனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் முதலாம் இராஜாதி ராஜன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!



விழுப்புரம் அருகே வளவனூர் நகரில் அமைந்துள்ளது இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். இக்கோயிலின் கருவறை பின்பக்கச் சுவற்றில் மூன்று வரிகளில் அமைந்த துண்டு கல்வெட்டு ஒன்று தலைகீழாகப் பதிக்கப்பட்டுள்ளது. 

இதனை வாசித்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.இராஜகோபால், “இதன் முதல் வரியில், புரவியொடும் பிடித்து தன்னடை ஜெயம்கொண்டு எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. இது திங்கீர் திருடன் தொங்கல் எனத் தொடங்கும் முதலாம் இராஜாதி ராஜனின் (கி.பி.1018-1054) மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதியாகும். இரண்டாவது வரியில் பிரம்மதேசத்து திரிபுவன மஹாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும், மூன்றாவது வரி, ஸ்ரீ மாகேஸ்வர ரக்ஷை என்றும் முடிகிறது. இது சிவனடியார்கள் பாதுகாப்பு எனும் பொருள் தரும். இக்கல்வெட்டு சிவன் கோயிலுக்கு உரியதாக இருக்கலாம்” என்று விளக்கமளித்துள்ளார்.

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலின் கட்டுமானப் பணிகளின் போது இந்தத் துண்டுக் கல்வெட்டு சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள திரிபுவன மஹாதேவி சதுர்வேதி மங்கலம் குறித்த மேலதிக ஆய்வுகள் தேவை. 

                      தினகரன் 19.01.25

நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேயமாக இப்பகுதி இருந்துள்ளதையும் 970 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. 

                    தினத்தந்தி 19.01.25

மேற்காணும் கல்வெட்டில் குறிப்பிடப்படும் இராஜாதிராஜன் சோழப் பேரரசர் இராஜராஜ சோழனின் பேரனும் இராஜேந்திர சோழனின் மகனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலைச் சாளுக்கியருடன் நடந்த கொப்பத்துப் போரில் இம்மன்னர் உயிர் துறந்தார். 

வளவனூரில் உள்ள ஜகந்நாத ஈஸ்வரர் கோயிலில் இராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழனின் முற்று பெறாத கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தற்போது பெருமாள் கோயிலில் இராஜாதிராஜன் கல்வெட்டு கண்டறியப்பட்டதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் பெரிய அளவில் சிவாலயம் சிதைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. 

வளவனூர் பகுதியில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் சோழர் கால தடயங்கள் மேலும் கிடைக்கலாம்.

                     தினமணி 19.01.25

இது தொடர்பான செய்தி இன்றைய (19.01.25) தினகரன், தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில்... பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி!

கல்வெட்டினை வாசித்து உதவிய மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ஐயா ராஜகோபால் சுப்பையா அவர்களுக்கு 

மிக்க நன்றி!

அன்புடன் 

விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

19.01.25