அரச
மரம்...
பௌத்தத்துடனும்
சைவத்துடனும் மிகுந்தத் தொடர்புடையது.
அரசாணிக்கால்
நடுதல்-திருமணத்தின் முக்கியச் சடங்குகளில் ஒன்று.
இதன் பூ,
வேர், இலை, பட்டை ஆகியவை மிகுந்த மருத்துவக் குணம் உடையது.
அரச
மரத்தைச் சுற்றிவந்து அடிவயிற்றைத் தொட்டுப்பார்-வழக்கத்தில் இருந்துவரும் சொலவடை.
இதுகுறித்து
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நிறைய இருக்குது.
திருவாளர்
பண்ருட்டி இரா.பஞ்சவர்ணம் கூட, ‘அரச மரம்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து தனி நூலே வெளியிட்டு இருக்கிறார்.
வாழ்த்துக்கள்.
நான்
இங்குச் சொல்ல வந்தது, நம்ம விழுப்புரம் தெற்கு ஐயனார் குளத்தெருவில் இருக்கும்
இரண்டு அரச மரங்களைப் பற்றி.
சிலஅடி
தூர இடைவெளியில். நீண்டு உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. எப்படியும் இவற்றின் வயது
50க்கு மேலிருக்கலாம். எப்போதும் சலசலத்துப் பேசிக்கொண்டே இருக்கின்றன. காற்று
இவற்றைத் தாலாட்டுவதால்.
இந்த
மரங்களின் மகிழ்ச்சிக்குக் காரணம், கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இவை,
ஆற்றங்கரையில் இருந்தவை. ஐயனார் குளம்தானே இருக்கிறது. ஆறு எங்கே? நீங்கள் கேட்பது
புரிகிறது. அவரசப்பட வேண்டாம்.
தென்பெண்ணையாற்றில்
பெருக்கெடுக்கும் மழைநீரானது, கோலியனூரான் கால்வாய் வழியாக விழுப்புரத்துக்குள்
வழிந்தோடி வரும்.
அப்படி
வரும் நீரின் ஒரு பகுதி, சிறிய வாய்க்கால் மூலம் நான்குமுனைச் சந்திப்பு, பாகர்ஷா
வீதி, மகாத்மா காந்தி வீதி, ஜோதி திடல் வழியாக ஐயனார் குளத்தைச் சென்றடையும்.
குறிப்பாக
தெப்பத் திருவிழாவின் போது ‘தப தப’வெனக் கொட்டும் நீரின் சத்தத்தைக் கேட்டு மகிழ்ந்தவர்களில் நானும்
ஒருவன்.
தென்பெண்ணையாற்றின்
நீரைச்சுமந்து வருகிறதே அந்தக் கால்வாயின் கரைகளில் தான் இந்த அரச மரங்கள்
நின்றிருந்தன.
இப்போது
கால்வாய்கள் இல்லை. இந்தக் காரணத்தால் தென்பெண்ணை ஆற்று நீரும் இங்கு வருதவற்கு
வாய்ப்பில்லை. ஆனாலும் அந்த சந்தோசத்தில் இந்த மரங்கள் நின்றிருக்கின்றன.
ஒரு மரம்
டாஸ்மாக் கடையின் வாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இன்னொரு
மரம் தனித்தன்மையுடன் நின்றுகொண்டுள்ளது.
இந்த
மரம் நன்றாக வேர் விட்டுள்ளது. இங்கு தினமும் தண்ணீர் தெளித்துக் கோலம்
போடப்படுகிறது. இதைச் செய்பவர்கள் அங்குள்ள ரிகஷா தொழிலாளக் குடும்பத்தினர்.
பருத்த
அந்த மரத்தண்டுக்குக் கீழே, குட்டியானப் பிள்ளையார் சிலை ஒன்றும்
வைக்கப்பட்டுள்ளது. தினமும் பூ, பொட்டு வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
இதற்குப்
பிண்ணனியில் பெரிய அரசியல் எதுவும் இருக்கவில்லை.
அரச
மரத்தை வழிபடுகிறார்கள். கூடவே, வழக்கமாக அதன் அடியில் அமர்ந்திருக்கும்
பிள்ளையாரையும் வைத்துவிட்டார்கள். அவ்வளவுதான்.
இவர்கள் தங்கள்
வேரினை மறக்காதவர்கள்!