திங்கள், 10 அக்டோபர், 2016

விழுப்புரம் கவுன்சிராக இருந்த எஸ்.இராகவானந்தம்...

எம்.எல்.சி.யாகவும், அமைச்சராகவும் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர் எஸ்.இராக வானந்தம். அவரும் அவரது மனைவியும் விழுப்புரம் நகரமன்றத்தில் கவுன்சிலராக இருந்திருக்கின்றனர். இது பலரும் அறிந்திராதத் தகவலாகும்.
உண்மைதான்.
கடலூரில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றிக் கொண்டிருந்த எஸ்.இராக வானந்தம், 1956இல் விழுப்புரம் கேபின் ஸ்டேஷன் மாஸ்டராக மாறுதலாகி வந்தார். தொடக்கத்தில் விருப்புரம் ரயில்வே காலனியிலும் பின்னர், மருதூர் அக்ரகாரத்திலும் அவரதுக் குடும்பம் வசித்துவந்தது.
மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியான இராகவானந்தம் அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். அனந்தநம்பியார் போன்ற தலைவர்களுடன் நெருங்கியத் தொடர்பு வைத்திருந்தார். அகில இந்திய அளவில் நடந்த ரயில்வே வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற இவர், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து விடுதலையானவுடன் சில நாட்கள் பணியில் இருந்த அவர் பிறகு அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா அவர்களை சந்தித்த இராகவானந்தம் தனது மனைவி மங்கலம்மாளுடன் தி.மு.க.வில் இணைந்து தீவிரஅரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
1964இல் நடந்த விழுப்புரம் நகரமன்றத் தேர்தலில் இராகவானந்தமும் அவரது மனைவி மங்கலம்மாளும் போட்டியிட்டு வெற்றிபெற்று, கவுன்சிலராகப் பணியாற்றினர். இதனைத் தொடர்ந்து 1966இல் சென்னைக்குக் குடியேறிய இராகவானந்தம், முழுநேர அரசியலில் ஈடுபட்டதுடன், எம்.எல்.சி., தமிழக அமைச்சர் பொறுப்புகளை வகித்தது அனைவராலும் அறியப்பட்டத் தகவல்களே.
இராகவானந்தம் விழுப்புரத்தில் இருந்த 10 ஆண்டுகள், அவரது சொந்த வாழ்க்கையிலும் அரசியலிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தித்தந்தது.

அன்னாரது மகனார் இரா.விடுதலை சென்னைஉயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் களுள் ஒருவராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக