செவ்வாய், 29 ஜனவரி, 2019

காவலர் பயிற்சிப் பள்ளியில் உரை...

கொல்லியங்குணம். விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே இருக்கிறது.
இங்குதான் தமிழ்நாடு காவல்துறையின் காவலர் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் பயிற்றுனர்களாக இருக்கக்கூடிய ஆய்வாளர் திருமதி பிரபாவதி, உதவி ஆய்வாளர் நண்பர் திரு.அரிதாசு ஆகியோரின் அன்பு அழைப்பு. நேற்று மாலை நானும் நண்பர் பத்திரிகையாளர் சுரேஷும் சென்றிருந்தோம்.

காவல் துறை – பத்திரிகையாளர் இடையேயான அணுகுமுறை குறித்து விளக்க உரை.


கடந்த காலங்களில் இரு துறையினரிடமும் நிலவிய நட்பு, உரசல் போன்ற விசயங்களை பட்டியலிட்டேன்.



ஒரு வகையில் இது, என்னைப் புதுப்பித்துக் கொள்வதாக இருந்தது. மகிழ்ச்சி.


அப்புறம், இங்குப் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் காவலர்கள் கடலூர் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அறிந்தேன்.

“ கடலூருக்கும் வேலூருக்கும் வரலாற்று ரீதியில் தொடர்பு இருக்கிறது” என்று பேச்சின் ஊடாகக் குறிப்பிட்ட நான்,

 “வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கோட்டை கட்டி அமர்ந்தது கடலூர். அவர்களைஅவர்களை விரட்டி அடிக்க முதலலில் புரட்சி ஏற்பட்ட இடம் வேலூர்” என்பதையும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் இருந்து நீங்கள் வந்து இருக்கிறீர்கள் என்று சொன்னபோது காவல் மாணவர்களிடம் உற்சாகம் கரைபுரண்டது.

காவல் துறையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் இந்த இளைஞர்கள் இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ. சந்திக்க வேண்டியவை, சாதிக்க வேண்டியவை நிறைய…

இவர்களுக்கு நம் வாழ்த்துகள்…

புகைப்படங்கள்: ப.ரே.ம. கிருஷ்ணமூர்த்தி

ஒரிசா பாலு அவர்களுடன் சந்திப்பு

இன்று (29.01.19) மாலை விழுப்புரம் வந்த சூழலியல் ஆய்வாளர் ஐயா ஒரிசா பாலு அவர்களுடன் ஓர் இனிய சந்திப்பு.


நண்பர்கள் பாபு, அகிலன், தினகர், கிருஷ்ணா, கோபி, தமிழ், விஷ்ணு ஆகியோருடன் பாலு அவர்கள் நீண்ட நேரம் உரையாடினார்.

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டிய, தமிழர் நிலங்களை மீட்டெடுக்க வேண்டிய அவசியங்கள், அவர் உரையாடலின் ஊடாக வெளிப்பட்டது.

மேலும், விழுப்புரத்துடனான தனது நெருக்கம் குறித்துச் சிலாகித்த பாலு அவர்கள், நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

மகிழ்ச்சி. அவருக்கும் எங்களுக்கும்!

நமது அருங்காட்சியகம் தொடர்பான பணிகளுக்கு தமது இதய பூர்வமான வாழ்த்தினையும் ஆதரவையும் தெரிவித்தார்.

நன்றிங்க ஐயா...

அப்புறம், எனது "திணிக்கப்பட்டதா திராவிடம்?" நூலினை ஐயா பாலு அவர்களிடம் வழங்கியதில் எனக்கும் மகிழ்ச்சியே...

வெள்ளி, 25 ஜனவரி, 2019

செ.கொத்தமங்கலம் - தொல்லியல் அலுவலர் நியமனம்

விழுப்புரம் அருகே உள்ள செ.கொத்தமங்கலம் கிராமம்.

இரண்டாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியான, வரலாறு கொண்ட சிறப்பு வாய்ந்த கிராமம். 


முதுமக்கள் தாழிகள் முதற்கொண்டு பல்லவர் சோழர் நாயக்கர் காலச் சிற்பங்கள் வரை ஏராளமான வரலாற்றுப் புதையல்களைக் கொண்டுள்ளது கொத்தமங்கலம் கிராமம்.
இந்தக் கிராமத்தையும் இங்குள்ள வரலாற்றுத் தடயங்களை நாம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்வையிட்டோம்.


பார்வையிட்டோம், பத்திரிகைகளில் ஆவணப்படுத்தினோம். நம் கடமை அத்துடன் முடிந்து விட்டதா?

இல்லை, தொடர்ந்தது. கொத்தமங்கலம் கிராமத்தில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்குக் கடிதங்கள் அனுப்பினோம்.


கூடவே, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் இது தொடர்பான புகாரினை அனுப்பி வைத்தோம்.

இதன் தொடர்ச்சியாக, முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து இன்று நமக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

அதில், “ கொத்தமங்கலம் பகுதியில் அகழ்வாய்வு மேற் பரப்பினை ஆய்வு செய்திடவும், மூத்த தேவி சிற்பம் உள்ளிட்ட வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்து அறிக்கை உடன் சமர்ப்பிக்குமாறு தொல்லியல் அலுவலர் (பொறுப்பு) பொ.பாஸ்கர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக இருக்கிறது.

கொத்தமங்கலத்தில் உள்ள வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது…

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

திணிக்கப்பட்டதா திராவிடம்?



இது, எனதுப் பத்தாவதுப் படைப்பு என்பதில் மகிழ்ச்சி!

இதுவரை, வரலாறுப், பண்பாட்டுத் தளங்களில் பயணித்துக் கொண்டிருந்த நான், முதன் முறையாக அரசியல் தளத்தில் இறங்கியிருக்கிறேன்! 

“திராவிடம்”
கடந்த ஒன்னரை நூற்றாண்டுகளாகத் தமிழகத்தைக் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு விசயம்.

இதுபற்றி கடந்த அரை நூற்றாண்டுகளில் ஏராளமான ஆய்வுகள், வெளியீடுகள் வந்துள்ளன. விவாதங்களும் நடந்துகொண்டு இருக்கின்றன.

அந்த வரிசையில் இணைந்திருக்கிறது, “திணிக்கப்பட்டதா திராவிடம்?”

“திராவிடம்” எனும் சொல் தமிழக அரசியல் தளத்தில் ஏற்படுத்தியுள்ளத் தாக்கத்தை வரலாற்று ரீதியில் அணுக இந்நூலில் முயற்சி செய்திருக்கிறேன்.

குறிப்பாக, “திராவிட நாடு திராவிடருக்கே” முழக்கம் குறித்தும்...

11.09.1938 - சென்னை கடற்கரைக் கூட்டத்தில், “தமிழ்நாடு தமிழருக்கே” என பெரியார் முழக்கமிடுகிறார்.

23.10.1938 - குடி அரசு இதழில், “உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சைக் குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடுகளில் தமிழ்நாடு தமிழருக்கே எனும் வாசகத்தை எழுதிப் பதியுங்கள்!” என தலையங்கம் தீட்டப்படுகிறது.

17.12.1939 - குடி அரசு இதழில், “திராவிடநாடு திராவிடருக்கே” என முதன் முறையாகத் தலையங்கம் தீட்டுகிறார் பெரியார்.

ஏறக்குறைய ஓராண்டு இடைவெளியில், பெரியாரின் முழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. எதனால்?

இதற்கு இதுவரை பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டு விட்டன.

ஆனாலும், பெரியாரின் பார்வையில், முழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கானக் காரணத்தை இந்நூல் ஆய்வு செய்கிறது.

இதுபற்றிய விமரிசனங்கள் வரலாம். வரும். விவாதிப்போம் நண்பர்களே..!

இத்தருணத்தில் இந்நூல் வெளிவருவதற்குத் துணையாக நின்ற திருவாளர்கள்,

பரமக்குடி குறிஞ்சிக்குமரன்,
சென்னை அண்ணாதுரை சீத்தாராமன்,
விழுப்புரம் கோ.பாபு ஆகியோருக்கு எனது பணிவார்ந்த நன்றிகள்..! 




வியாழன், 10 ஜனவரி, 2019

ஆற்றுத் திருவிழா - உள்ளூர் விடுமுறை...

ஆற்றுத் திருவிழா...

நடுநாட்டின் பண்பாட்டுத் திருவிழா...

விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளம்.

பல்வேறு மாவட்டங்களில் மண் சார்ந்த நிகழ்வுகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், ஆற்றுத் திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அனுப்பி இருக்கிறேன்.

இந்தச் செய்தி இன்றைய (11.01.2019)  தமிழ் இந்து மற்றும் தினமணி நாளேடுகளில்...


நன்றி:
செய்தியாளர்கள்
எஸ்.நீலவண்ணன், இல.அன்பரசு.

செவ்வாய், 1 ஜனவரி, 2019

கலகலக்குது கருஞ்சட்டைகள்

பனை மலைக் கோயிலில் ழுவோ துப்ராயல்

இன்றைக்குச் சரியாக 103 ஆண்டுகளுக்கு முன்பு…

1915 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வருகிறார், பிரெஞ்சுப் பேராசிரியர் வரலாற்று ஆய்வாளர் ழுவோ துப்ராய் அவர்கள்,

அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார்.

இதோ இந்தச் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக்கிறதே!

ஏற்கனவே 1890இல் பனைமலைக் கோயிலின் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார்.

இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜசிம்மன்தான், பனமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான்.

பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலைக் கோயிலையும், அங்குள்ளக் கல்வெட்டுத் தகவல்களையும் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது.

வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தது பனைமலை…