வெள்ளி, 29 நவம்பர், 2024

விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம்

 பெரியவர் ஏ.கோவிந்தசாமி அவர்கள்...


15.06.1928இல் புதுச்சேரி தேங்காய்த்திட்டு பட்டாளத்தார் ஆனையப்ப நாயகர் – மீனாட்சியம்மாள் இணையருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார்.

கடலூர் நகராட்சித் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றார். 

1940இல் தென்னார்க்காடு மாவட்ட மார்க்கெட் கமிட்டியில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். 

1945இல் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாருடன் இணைந்து "தென்னார்க்காடு மாவட்ட வன்னியர் சங்கம்" எனும் அமைப்பினை ஏற்படுத்தினார். இதுவே 1951இல் “தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி” ஆக உருவெடுத்தது. கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சி. பொதுச்செயலாளர்கள்:  ஏ.கோவிந்தசாமி, மரப்பட்டறை பி.ஜி.நாராயணசாமி. 

1952இல் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பாராளுமன்ற மற்றும் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி.

திண்டிவனம் பாராளுமன்றத் தொகுதியில் பலம் வாய்ந்த பத்திரிகை அதிபரும் காங்கிரஸ் வேட்பாளருமான ‘எக்ஸ்பிரஸ்’ கோயங்காவை எதிர்த்து திருக்குறளார் வீ.முனிசாமியும், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் செல்வாக்குப் பெற்ற பஸ் அதிபர் பாஷ்யம் ரெட்டியாரை எதிர்த்து ஏ.கோவிந்தசாமியும் உழைப்பாளர் கட்சி வேட்பாளர்களாகக் களத்தில் நின்றனர்.

தேர்தல் முடிவில் 19 சட்டமன்றத் தொகுதிகளிலும், 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் உழைப்பாளர் கட்சி அபார வெற்றி பெற்றது. திருக்குறளார் இந்திய நாடாளுமன்றத்துக்குள்ளும், ஏ.ஜி. சென்னை மாகாண சட்டமன்றத்திற்குள்ளும் அடியெடுத்து வைத்தனர். 

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றார் எஸ்.எஸ்.ஆர். இதனால் “உழவர் கட்சி” எனும் புதிய கட்சியைத் தொடங்கினார் ஏ.ஜி. 

1954இல் நடந்த காணை கஞ்சனூர் ஜில்லா போர்டு தேர்தலில் உழவர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஏ.ஜி. அப்போது அவரதுச் சின்னம் ‘உதய சூரியன்’. பின்னாளில் இது திமுகவின் அதிகாரபூர்வ சின்னமானது.

உழவர் கட்சியை நடத்திக் கொண்டிருந்த அதே காலத்தில் திமுகவின் தலைமை நிலைய பொறுப்பாளராக ஏ.ஜி.யை நியமித்தார் அண்ணா. 

1957 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டது திமுக. வளவனூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார் ஏ.ஜி. 

வெற்றி பெற்று அண்ணாவுடன் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த 15 பேர்களில் இவரும் ஒருவராவார்.

1967இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக, அண்ணா தலைமையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. முகையூர் சட்டமன்ற உறுப்பினரான ஏ.ஜி. அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். அண்ணா மறைவினைத் தொடர்ந்து கலைஞர் தலைமையிலான அமைச்சரவையிலும் ஏ.ஜி. இடம்பெற்றார்.

புதுவை உள்ளடக்கிய தென்னாற்காடு மாவட்ட திமுக செயலாளர், தொமுச செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் திமுகவில் ஏற்றிருந்தார்.  கட்சி நடத்திய குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்டப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று சிறை சென்றார் ஏ.ஜி.

திராவிட நாடு, இந்தி மற்றும் குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு குறித்த இவரது சட்டமன்ற உரைகள் குறிப்பிடத்தகுந்தன.

இவர் அமைச்சராக இருந்தபோது தான் ‘நந்தன் கால்வாய்த் திட்டம்’ கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1969 மே 18ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி. 

இறக்கும் தருவாயில் அவர் உச்சரித்த வார்த்தை: “ஏழையாகப் பிறந்தேன். ஏழையாகவே சாகிறேன். நான் யாரிடமும் லஞ்சம் வாங்கியது கிடையாது.”

தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும் விசுவாசமாகவும் கடைசி வரை வாழ்ந்தவர் ஏ.ஜி. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பெரியவர் ஏ.கோவிந்தசாமி அவர்கள். 

அன்னாரின் நினைவைப் போற்றும் வகையில், விழுப்புரம் வழுதரெட்டிப் பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவரங்கம் எழுப்பப்பட்டுள்ளது.



விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

ஞாயிறு, 10 நவம்பர், 2024

தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த கடலூர் முதுநகர் இல்லத்தில் ...

நேற்றைய (10.11.24) பொழுது இனிய பொழுதாக கழிந்தது கடலூரில்...

விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் மகன் (ஜெயில் வீரன்) வழிப் பெயர்த்திகளான மஞ்சக்குப்பம் ஜான்சிராணி திருநாராயணன், குறிஞ்சிப்பாடி தாரா சூரியமூர்த்தி, விழுப்புரம் சந்திரா முரளி, தீர்த்தான் பாளையம் ஆறுமுகம் ஆகியோர், கடலூர் முதுநகர், சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள தங்களது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தனர்.

ஆமாம்; இந்த வீட்டில் தான் அஞ்சலை அம்மாள் அவர்கள் பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார்!

ஏராளமான வரலாற்று நினைவுகளைச் சுமந்து நிற்கிறது, சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள இந்த வீடு.

வீரஞ்செறிந்த பெண்மணியை ஈன்றெடுத்த புகழ் மண்ணில், அவர்தம் நேரடி வாரிசுகளுடன் நெருக்கமாக அமர்ந்து உரையாடியது, மனதிற்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

சுண்ணாம்புக்கார தெருவின் பின்புறத்தில் தான் காந்தி பூங்கா அமைந்துள்ளது. பூங்காவின் முகப்பில் அஞ்சலை அம்மாள் அவர்களின் முழு உருவச்சிலை, தமிழ்நாடு அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது.

சிலைதான், ஆனாலும் கம்பீரம் குறையாமல் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நல்வாய்ப்பினையும் அவர்தம் குடும்பத்தினர் எனக்கு வழங்கினர். அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்!

விழுப்புரத்தில் இருந்து இவ்வளவு தூரம் என்னை அழைத்துச் சென்று வரலாறு நிகழ்வினை ஏற்படுத்தித் தந்திருக்கும் மகாத்மா காந்தி பாடசாலை நிர்வாகி இரவீந்திரன் சாருக்கு நெஞ்சார்ந்த நன்றி!

சனி, 2 நவம்பர், 2024

அந்தணர் வரலாற்றைச் சொல்லும் கரந்தைச் செப்பேடு!

 

ஒரே அரசாணையில்

51 ஊர்கள் 16,000 ஏக்கர் நிலங்கள்!

1080 அந்தணர்களுக்குத் தானமாகக் கொடுத்த இராஜேந்திர சோழன்!!

கரந்தைச் செப்பேடுகள் சொல்லும் வரலாறு.


சோழ மாமன்னர் இராஜேந்திர சோழன் தனது 8ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1020) வியாக்ர அக்ரஹாரம், பெரும்பற்றப்புலியூர் எனப்படும் சிதம்பரத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவரது தலைமை அமைச்சராக இருந்த ஸ்ரீசகநாதன் என்பவர், 1080 அந்தணர்களுக்குத் தானம் வேண்டி விண்ணப்பித்தார். இதனை ஏற்றுக்கொண்ட மன்னர், 51 ஊர்களை இணைத்து ஓர் ஊராக்கித் தனது தாயின் பெயரில் “திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலம்” எனும் பிரம்மதேயம் அமைத்து உத்தரவிட்டார். இந்த ஆணையைச் சொல்லும் ஆவணம்தான் “கரந்தைச் செப்பேடு” ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவில் புத்தூர் எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டது. இந்தச் செப்பேட்டில் 57 இதழ்கள் (114 பக்கங்கள்) உள்ளன. இவற்றின் மொத்த எடை சுமார் 90 கிலோ ஆகும். திருவாலங்காடு. அன்பில், ஆனைமங்கலம், சிறிய லெய்டன் ஆகிய செப்பேடுகளைவிட இச்செப்பேடு எண்ணிக்கையிலும், எடையிலும் மாபெரும் தொகுதியாகவும், இந்தியாவில் கிடைத்திட்ட செப்பேடுகளில் தனித்திறம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது, கரந்தைச் செப்பேடு. சோழர்கள் வரலாற்றை எழுதிய கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி “இச்செப்பேடு தமிழக வரலாற்றிற்கு மிகவும் இன்றியமையாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கரந்தைச் செப்பேட்டில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் வடமொழியால் அமைந்த பிரசஸ்தி எனப்படும் மன்னர் மரபுப் புகழ்ச்சியுரை இடம்பெற்றுள்ளது. இதில் 78 செய்யுள்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவதுப் பகுதியில் தானமாக வழங்கப்பட்ட ஊர்கள், அவற்றின் எல்லைகள் உள்ளிட்ட விவரங்களைக் கொண்டுள்ளன. மூன்றாவது பகுதி தானத்தைப் பெற்ற அந்தணர்கள் தொடர்பான விவரங்களைக் கொண்டுள்ளது. பின்வரும் 51 ஊர்களை இணைத்து புதிய நகரம் (அக்கிகாரம்) உருவாக்கப்பட்டுள்ளது:

1.செம்பங்குடி 2.குளப்பாடு 3.துளார் 4.நல்லம்பர் 5.திரிபுவன மகாதேவி நல்லூர் 6.விச்சூரான சிக்கர் 7.முஞ்ஞாவல் 8.கூத்தனுர் 9.கமுகன்சேந்தன்குடி 10. வைகுந்த நல்லூர் 11.மயிமாலய நல்லூர் 12.கீழ்மாந்தூர் 13.பரகேசரி நல்லூர் 14.பெண்ணாகடம் 15.உறத்தூர் 16.சிறையூர் 17.கீழ்சோற்றுத்துறை 18.நெடுவாயில் 19.ஏறுபாடி 20.புளிகைக்குடி 21.பெருங்குடி 22.முண்டனூர் 23.தாமோதரநல்லூர் 24.அரசூர் 25.வாளுவநல்லூர் 26.குணசீல நல்லூர் 27.செய்யா நல்லூர் 28.சிற்றாலி நல்லூர் 29.நித்தவினோதநல்லூர் 30.வெங்கூர் 31.நியாயநடைநல்லூர் 32.சேந்தமங்கலம் 33.இகழாநிலை நல்லூர் 34.வீர நாராயண மங்கலம் 35.கருவூர் 36.கோவிந்தநல்லூர் 37.வீரசோழநல்லூர் 38.கொஞ்ஞாப்பூர் 39.மணிமங்கலம் 40.துறையாநல்லூர் 41.வாமனநல்லூர் 42.ஆதநல்லூர் 43.சிறுமுன்னியூர் 44.மேட்டு மேற்குடி 45.பூதமங்கலத்துப் பால்காடன் காரிகுறிச்சி 46.தேவதானக்குடி 47.விளங்குடி 48.நெடுங்கணக்குடி 49.பூதமங்கலத்து அயலூட்டிக்காணி 50. சிரீகரண மங்கலமாகிய கொட்டாரக்குடிப் பள்ளி 51.புறக்குடி.

மேற்காணும் ஒவ்வொரு ஊரின் நான்கு எல்லைகளும் தனித்தனியே அளக்கப்பட்டு கணக்கிடப்பட்டன. தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் அளவு 3135 வேலி மற்றும் சொச்ச நிலமாகும். அதாவது 20 ஆயிரத்து 305 ஏக்கர்களாகும். இவற்றில் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள், நத்தம் மற்றும் கோயில் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட 619 வேலி நிலங்களுக்கு (4ஆயிரத்து 107 ஏக்கர்) விலக்களிக்கப்பட்டது. இவை தவிர்த்த 16 ஆயிரத்து 698 ஏக்கர்கள் நிலம் 1084 அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டது.

தானம் பெற்றவர்கள் கௌதம, பார்கவ, வசிட்ட, ஆத்ரேய, காசியப, பாரத்வாஜ, ஆங்கிரச, கபில உள்ளிட்ட 75 வகையான கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் இவர்களது தந்தையின் பெயர், சூத்திரம், ஊர், நாடு போன்ற விவரங்களும் செப்பேட்டில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

அந்தணர்களுக்கு மட்டுமின்றி கோயில் கணக்கர், நாவிதர், நச்சுக்கடிகளுக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர், உவச்சர், கொல்லர், அம்பலம் மெழுகுவோர், தண்ணீராட்டுவோர் ஆகியோருக்கும், வேதப்பள்ளிகளுக்கும் நிலதானம் வழங்கப்பட்டுள்ளது.

அரிய வரலாற்றுத் தகவல்களைச் சொல்லும் கரந்தைச் செப்பேடு, சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


விழுப்புரம் கோ.செங்குட்டுவன்,

வரலாற்று ஆய்வாளர்‌ - எழுத்தாளர்.

தொடர்புக்கு 9944622046

Writer.senguttuvan@gmail.com


உதவிய நூல்கள்:

1. கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி. சி.கோவிந்தராசன், சி.கோ.தெய்வநாயகம். பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், 1984.

2. சோழர் செப்பேடுகள். பதிப்பாசிரியர் புலவர் வே.மகாதேவன். தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 2013.