ஒரே அரசாணையில்
51 ஊர்கள் 16,000 ஏக்கர் நிலங்கள்!
1080 அந்தணர்களுக்குத் தானமாகக் கொடுத்த இராஜேந்திர சோழன்!!
கரந்தைச் செப்பேடுகள் சொல்லும் வரலாறு.
சோழ மாமன்னர் இராஜேந்திர சோழன் தனது 8ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1020) வியாக்ர அக்ரஹாரம், பெரும்பற்றப்புலியூர் எனப்படும் சிதம்பரத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவரது தலைமை அமைச்சராக இருந்த ஸ்ரீசகநாதன் என்பவர், 1080 அந்தணர்களுக்குத் தானம் வேண்டி விண்ணப்பித்தார். இதனை ஏற்றுக்கொண்ட மன்னர், 51 ஊர்களை இணைத்து ஓர் ஊராக்கித் தனது தாயின் பெயரில் “திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலம்” எனும் பிரம்மதேயம் அமைத்து உத்தரவிட்டார். இந்த ஆணையைச் சொல்லும் ஆவணம்தான் “கரந்தைச் செப்பேடு” ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவில் புத்தூர் எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டது. இந்தச் செப்பேட்டில் 57 இதழ்கள் (114 பக்கங்கள்) உள்ளன. இவற்றின் மொத்த எடை சுமார் 90 கிலோ ஆகும். திருவாலங்காடு. அன்பில், ஆனைமங்கலம், சிறிய லெய்டன் ஆகிய செப்பேடுகளைவிட இச்செப்பேடு எண்ணிக்கையிலும், எடையிலும் மாபெரும் தொகுதியாகவும், இந்தியாவில் கிடைத்திட்ட செப்பேடுகளில் தனித்திறம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது, கரந்தைச் செப்பேடு. சோழர்கள் வரலாற்றை எழுதிய கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி “இச்செப்பேடு தமிழக வரலாற்றிற்கு மிகவும் இன்றியமையாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கரந்தைச் செப்பேட்டில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் வடமொழியால் அமைந்த பிரசஸ்தி எனப்படும் மன்னர் மரபுப் புகழ்ச்சியுரை இடம்பெற்றுள்ளது. இதில் 78 செய்யுள்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவதுப் பகுதியில் தானமாக வழங்கப்பட்ட ஊர்கள், அவற்றின் எல்லைகள் உள்ளிட்ட விவரங்களைக் கொண்டுள்ளன. மூன்றாவது பகுதி தானத்தைப் பெற்ற அந்தணர்கள் தொடர்பான விவரங்களைக் கொண்டுள்ளது. பின்வரும் 51 ஊர்களை இணைத்து புதிய நகரம் (அக்கிகாரம்) உருவாக்கப்பட்டுள்ளது:
1.செம்பங்குடி 2.குளப்பாடு 3.துளார் 4.நல்லம்பர் 5.திரிபுவன மகாதேவி நல்லூர் 6.விச்சூரான சிக்கர் 7.முஞ்ஞாவல் 8.கூத்தனுர் 9.கமுகன்சேந்தன்குடி 10. வைகுந்த நல்லூர் 11.மயிமாலய நல்லூர் 12.கீழ்மாந்தூர் 13.பரகேசரி நல்லூர் 14.பெண்ணாகடம் 15.உறத்தூர் 16.சிறையூர் 17.கீழ்சோற்றுத்துறை 18.நெடுவாயில் 19.ஏறுபாடி 20.புளிகைக்குடி 21.பெருங்குடி 22.முண்டனூர் 23.தாமோதரநல்லூர் 24.அரசூர் 25.வாளுவநல்லூர் 26.குணசீல நல்லூர் 27.செய்யா நல்லூர் 28.சிற்றாலி நல்லூர் 29.நித்தவினோதநல்லூர் 30.வெங்கூர் 31.நியாயநடைநல்லூர் 32.சேந்தமங்கலம் 33.இகழாநிலை நல்லூர் 34.வீர நாராயண மங்கலம் 35.கருவூர் 36.கோவிந்தநல்லூர் 37.வீரசோழநல்லூர் 38.கொஞ்ஞாப்பூர் 39.மணிமங்கலம் 40.துறையாநல்லூர் 41.வாமனநல்லூர் 42.ஆதநல்லூர் 43.சிறுமுன்னியூர் 44.மேட்டு மேற்குடி 45.பூதமங்கலத்துப் பால்காடன் காரிகுறிச்சி 46.தேவதானக்குடி 47.விளங்குடி 48.நெடுங்கணக்குடி 49.பூதமங்கலத்து அயலூட்டிக்காணி 50. சிரீகரண மங்கலமாகிய கொட்டாரக்குடிப் பள்ளி 51.புறக்குடி.
மேற்காணும் ஒவ்வொரு ஊரின் நான்கு எல்லைகளும் தனித்தனியே அளக்கப்பட்டு கணக்கிடப்பட்டன. தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் அளவு 3135 வேலி மற்றும் சொச்ச நிலமாகும். அதாவது 20 ஆயிரத்து 305 ஏக்கர்களாகும். இவற்றில் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள், நத்தம் மற்றும் கோயில் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட 619 வேலி நிலங்களுக்கு (4ஆயிரத்து 107 ஏக்கர்) விலக்களிக்கப்பட்டது. இவை தவிர்த்த 16 ஆயிரத்து 698 ஏக்கர்கள் நிலம் 1084 அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டது.
தானம் பெற்றவர்கள் கௌதம, பார்கவ, வசிட்ட, ஆத்ரேய, காசியப, பாரத்வாஜ, ஆங்கிரச, கபில உள்ளிட்ட 75 வகையான கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் இவர்களது தந்தையின் பெயர், சூத்திரம், ஊர், நாடு போன்ற விவரங்களும் செப்பேட்டில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
அந்தணர்களுக்கு மட்டுமின்றி கோயில் கணக்கர், நாவிதர், நச்சுக்கடிகளுக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர், உவச்சர், கொல்லர், அம்பலம் மெழுகுவோர், தண்ணீராட்டுவோர் ஆகியோருக்கும், வேதப்பள்ளிகளுக்கும் நிலதானம் வழங்கப்பட்டுள்ளது.
அரிய வரலாற்றுத் தகவல்களைச் சொல்லும் கரந்தைச் செப்பேடு, சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்,
வரலாற்று ஆய்வாளர் - எழுத்தாளர்.
தொடர்புக்கு 9944622046
Writer.senguttuvan@gmail.com
உதவிய நூல்கள்:
1. கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி. சி.கோவிந்தராசன், சி.கோ.தெய்வநாயகம். பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், 1984.
2. சோழர் செப்பேடுகள். பதிப்பாசிரியர் புலவர் வே.மகாதேவன். தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக