திங்கள், 22 ஜனவரி, 2018

“தமிழ் எழுத்தாளர்களுக்கு முதுகெலும்பில்லை”

சென்னையின் 41ஆவது புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. எப்படியும் பங்கேற்றுவிட வேண்டும் என வைகையைப் பிடித்துப் போய்ச்சேர்ந்தேன்.

பச்சையப்பன் கல்லூரி வாசலிலேயே, சாலையைக் கடக்க என்னுடன் கைகோர்த்தார், தோழர் மு.ஞானசூரியன் (திருக்குறளாரின் மகனார்). நேரே கிழக்கு பதிப்பக அரங்குக்குச் சென்றோம். கூவம் அடையாறு பக்கிங்காம் நூலினைத் தேடிப்பிடித்து எடுத்த ஞானசூரியன், அதில் கையெழுத்திட்டுக் கொடுக்கச் சொன்னார். கூச்சத்துடன் கையெழுத்திட்டேன்.

அரங்கத்தில் இருந்த எழுத்தாளர்கள் மருதன், ஹரன்பிரசன்னா ஆகியோருடன் கலகலப்பான ஒரு சந்திப்பு. புத்தகக் கண்காட்சிகள், பதிப்பாளர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் குறித்தான விசயங்கள், கும்பகோணம் டிகிரி காப்பியின் ஊடாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

அரங்கங்களைச் சுற்றிவந்தபோது, அந்த ஆளுமையை, எழுத்தாளர்-கவிஞர்-ஓவியர்-விமர்சகர் எனும் பன்முகத் தன்மைக்கொண்ட, இந்திரன் அவர்களைச் சந்தித்தேன். ஒருவகையில் அவர் விழுப்புரம்வாசிதான். 1980களின் இறுதியில் விழுப்புரம் வங்கியில் பணியாற்றியபோது, இங்குள்ள முற்போக்குச் சக்திகளுக்கு நன்கு அறிமுகமானவர்.

அரங்கத்தில் சந்தித்தபோது என்னுடைய பழைய பேப்பர் நூலினை அவரிடம் கொடுத்தேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட இந்திரன், “இதே பெயரில் எழுத்தாளர் ஞானியும் ஒரு புத்தகம் எழுதியிருக்கார்என்றார். புதிய தகவல்.

எழுத்து, ஓவியம், சிற்பம், அருங்காட்சியகம், தலித் எழுத்தாளர்கள் என இந்திரன் அவர்களுடனானக் கலந்துரையாடல் நீண்டுக்கொண்டேச் சென்றது.

அப்போதுதான் நான் கேட்டேன், “தமிழ் எழுத்தாளர்களுக்குப் பதிப்பகத்தார் கொடுப்பதாகச் சொல்லும் ராயல்டி என்பது பெரிய பிரச்சனை. ஆனால், பெரும்பாலான எழுத்தாளர்கள் இதை பிரச்சனையாகவே நினைப்பதில்லையே?

இதற்கு இந்திரனிடம் இருந்துப் பட்டென்று பதில் வந்தது. “தமிழ் எழுத்தாளர்களுக்கு முதுகெலும்பில்லை. நான் உழைத்திருக்கிறேன். எனக்கானப் பணத்தைக் கொடு எனப் பதிப்பகத்தாரிடம் போராட இவர்கள் தயாராக இல்லை. பதிப்பாளர்கள் காரில் போவதும், எழுத்தாளர்கள் பஸ்சில் போவதுமான அவலம் இங்கதாங்க இருக்குஎன்றார் வேதனையுடன்.


இந்திரனின் இந்த பதில் குறித்து நான் மட்டுமல்ல, எழுத்தை மூலதனமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் அனைவருமே யோசிக்க வேண்டும்! 



 

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

இலக்கிய உலகில் புறக்கணிக்கப்படும் நடுநாடு..!

“அஸ்வகோஷ்“ என அனைவராலும் அறியப்பட்டவர், எழுத்தாளர் இராசேந்திர சோழன் (மயிலம்).

தமிழகத்தின் ஆகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவரான இவர், கால்நூற்றாண்டுகளுக்கு முன்பு, “நெம்புகோல்“ மூலமாக, புரட்சிகரச் சிந்தனை யாளராக என்னைப் போன்றவர்களுக்கு அறிமுகமானவர்.

தோழர்.பெ.மணியரசன் அவர்களுடன் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்துப் பணியாற்றியவர். தமிழர் கண்ணோட்டம், மண் மொழி மக்கள் ஆகிய இதழ்களை நடத்தியவர்.

விழுப்புரத்தில் நேற்று நடந்த மருதம் விழாவில் தோழர்.இராசேந்திரசோழன் அவர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். நானும் அவரை நேரில் பாராட்டி மகிழ்தேன்.

இவ்விழாவில் பேசிய இராசேந்திரசோழன் அவர்கள், “சென்னைப் புத்தகக் கண்காட்சியையொட்டி நடத்தப்படும் நிகழ்வுகளில் எழுத்தாளர் பலரும் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள். இவர்களில் ஒருவர்கூட நடுநாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களாக இல்லை. இலக்கிய உலகில் பழைய தென்னார்க்காடு மாவட்டம் புறக்கணிக்கப் படுகிறது“ என வேதனையுடன் பதிவு செய்தார்.

கடந்த ஆண்டு நடந்த இதேவிழாவில் பங்கேற்ற எழுத்தாளர் இரவிக்குமார் அவர்களும், “இலக்கியத்தில் மதுரை, நெல்லை போன்றவை தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகின்றன. வடமாவட்டப் படைப்பாளர்கள், அவர்தம் படைப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன“ என்று பேசியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

உண்மைதான்.

மதுரை, நெல்லை, நாஞ்சில்நாடு இலக்கிய ஆளுமைகளை நாமும் மதிக்கிறோம். தமிழிலக்கியத்தில் அவர்களுடைய பங்களிப்பு அளப்பரியதுதான்.

அதேநேரம், வடமாவட்டப் படைப்பாளர்களும் அவர்களுடையப் படைப்புகளும் இவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தது கிடையாதே! மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகள் இங்கும் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள் என்பதும் உண்மைதானே!

விருதுகள் வழங்குவதிலும், எழுத்துக்களை அங்கீகரிப்பதிலும் நடுநாட்டை அல்லது வடமாவட்டங்களை நவீன இலக்கிய உலகம் புறக்கணிப்பது ஏன்....?  

சனி, 13 ஜனவரி, 2018

கோலங்கள்... கோலங்கள்... அழகானக் கோலங்கள்...

இந்திய ஓவியக்கலை மரபு, தென்னிந்திய ஓவியக்கலை மரபு, தமிழக ஓவியக்கலை மரபு... என்பது பற்றியெல்லாம் நாம் தொடர்ந்துப் பேசி வருகிறோம்.

இத்தகைய ஓவியக்கலை மரபு(கள்) இன்றும் நம்மிடையே வாழ்வதற்கானத், தொடர்வதற்கான முக்கியக் காரணியாக நான் கருதுவது, நம் வீட்டுப் பெண்மணிகள் வாசலில் போடுகிறார்களே இந்தக் கோலங்களைத்தான்.

அதுவும், மார்கழி மாதக் கோலங்களுக்கு அப்படி ஒரு சிறப்பு நம்ம மண்ணில்.

இதோ, மார்கழி விடைபெற்றுவிட்டது. தைப் பிறந்துவிட்டது.

இந்தத் தை மகளை வரவேற்கத்தான் வீட்டுக்கு வீடு எத்தனையெத்தனைப் போட்டி.

விழுப்புரத்தின் வீதிகளில் அடியெடுத்து வைத்து நடக்க இடமில்லை. அழகியக் கோலங்களின் மீது கால்வைக்கவும் மனமில்லை.

இன்று அதிகாலை எப்படியோ இவற்றையெல்லாம் கடந்து வீட்டுக்கு வந்தாகிவிட்டது. என் வீட்டு வாசலில்கூட சின்னதாய் ஒரு கோலம். அதைத் தாண்டி வீட்டுக்குள் மெல்ல அடியெடுத்து வைத்தேன்.

நம் ஓவியக்கலை மரபைக் காப்பாற்றிவரும் மங்கையரைப் போற்றுவோம்.

பொங்கலோ பொங்கல் எனப் பாடுவோம்..!

(விழுப்புரம் மருதூர் சந்தானகோபாலபுரம், முத்தியால் தெரு, மாந்தோப்புத் தெரு மற்றும் கந்தசாமி லேஅவுட் பகுதிகளில் வரையப்பட்டக் கோலங்களில் சில நண்பர்களின் பார்வைக்கு..)




வெள்ளி, 5 ஜனவரி, 2018

கோ.செங்குட்டுவன் பதிவு எதிரொலி..

கோ.செங்குட்டுவன் பதிவு எதிரொலி... என்று எழுதலாமா?

எழுதலாம். உண்மை அதுவாகவும் இருக்கலாம்.


பாருங்களேன், விழுப்புரம் இரயில் நிலையத்தின் 5ஆவது பிளாட்பாரத்தில், குழாய் உடைந்துத் தண்ணீர் கொட்டிக் கொண்டிருப்பதை, நேற்று முன்தினம் (4ஆம் தேதி) முக நூலில் புகைப்படத்துடன் பதிவுசெய்திருந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

என்ன அதிசயம்? இன்று காலை, இரயில் நிலையத்துக்குப் போயிருந்தபோது கவனித்தேன், உடைந்தக் குழாய் சீர் செய்யப்பட்டிருந்தது. தண்ணீர் வீணாக வழிந்தோடவில்லை.

நேற்று காலை பார்க்கும்போது ஒன்றும் மாற்றமில்லை. பிறகுதான் வேலை நடந்திருக்கிறது.

மகிழ்ச்சி. உடனடி நடவடிக்கைக்கு இரயில் நிலைய நிர்வாகத்துக்கு நன்றி சொல்லத் தான் வேண்டும். சொல்வோம்.

விழுப்புரம் இரயில் நிலையத்தில் இன்னும் பல இடங்களில் கை கழுவும் இடங்களில் இருந்துத் தண்ணீர் பிளாட்பாரங்களில் வழிந்து கொண்டிருப்பதையும் நிர்வாகம் சரி செய்தால் நன்றாக இருக்கும்..!

முன்பும் பின்புமான இரண்டுப் புகைப்படங்களும் உங்கள் பார்வைக்கு...

கிளி ஜோசியம்... கிளி ஜோசியம்...

விழுப்புரம், கன்னியாகுளம் சாலையில், காலை எட்டு, எட்டரை மணி வாக்கில், கையில் பெட்டியுடன் விறுவிறுவென நடந்துச் செல்லும் இந்த முதியவரைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது.

கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரியும் அவர் கையில் இருப்பது பெட்டியல்ல, கிளிக்கூண்டு என்பது. உள்ளே, இரண்டு கிளிகள் குறுக்கும் நெடுக்குமாக உலவிக் கொண்டிருக்கும்.

வேகவேகமாக நேரு சாலையைக் கடக்கும் இவர், திரு.வி.க. சாலைக்குள் நுழைகிறார். அதோ, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி அருகே, அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்துவிட்டுக் கீழே அமர்கிறார். தொடங்கிவிட்டது அவரது, கிளி ஜோசியம்..!

இவரை வருடக்கணக்கில் பார்த்து வருகிறேன். வெயில், மழை, கடுங்குளிர் என தனதுப் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறார். திரு.வி.க. வீதியில் தினசரி ஆயிரக் கணக்காணவர்கள் இவரைப் பார்த்தும், பார்க்காமலும் கடந்து சென்று கொண்டிருக் கின்றனர். ஆனால், இவர் ஒவ்வொருவரையும் பார்க்கிறார்.

இவரை இன்று நான் பார்த்தேன்.

பெயர்: சேகர். வயது: 73. படித்தது: எட்டாம் வகுப்பு. சொந்த ஊர்: சேலம் ஜில்லா. கிளி ஜோசியத்துக்குக் கட்டணம்: ரூ.20. சோழிகளை உருட்டிப் போட்டும் பார்த்துச் சொல்கிறார்.

வாழ்க்கையில் பல்வேறுப் பணிகளைப் பார்த்த இவர், கடைசியாகத் தேர்ந்தெடுத்தது கிளி ஜோசியத்தைத்தான். இதற்காக இவர் யாரிடமும் பாடம் கற்கவில்லை. எல்லாம், அனுபவ அறிவுதான்.

‘நம்மிடம் பொய் இருக்காது. அபசகுணமான வார்த்தைகள் இருக்காது. பரிகாரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். உண்மை என்னவோ அதை மட்டுமே சொல்லுவேன் என்கிறார் சேகர்.

‘தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. கம்யூட்டர் ஜோசியம் எல்லாம் வந்துவிட்டது. இன்னமும் கிளியை வைத்து ஜோசியமா? நான் கேட்டேன்.

‘கம்யூட்டர் ஜோசியம் எல்லாம் முழுமைகிடையாது. நாங்கள் ஆளைப் பார்த்து, அவரது நடவடிக்கைகளைப் பார்த்து சொல்லுவோம். இதில் முழுமை இருக்கும் எனும் நீண்ட விளக்கம் அவரிடமிருந்து.

‘இந்த வீதியில் எவ்வளவோ பேர் போகிறார்கள், வருகிறார்கள். இவர்கள் உங்களைப் பார்க்கவில்லையே என்ற வருத்தம் உங்களுக்குக் கிடையாதா?கேட்டவுடன், பட்டென்று சொல்கிறார் ‘கிடையாது. என் தேவையை உணர்ந்தவர்கள் நிச்சயம் என்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

பெட்டியில் பாரதியார் படம் ஒட்டப்பட்டிருக்கிறது. ‘பாரதி பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதுதான் என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.

இதோ, ஜோசியம் பார்க்க ஒருவர் வருகிறார். ‘கணேசா, வா. ஐயாவுக்கு ஒரு நல்ல சீட்டா எடுத்துக்குடு கூண்டைத் திறந்தவுடன் இரண்டுக் கிளிகளில் ஒன்று வேகமாக வெளியே ஓடிவருகிறது.

உம். இவரது இரண்டுக் கிளிகளின் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேன். ஒருவர் பெயர்: கணேசன். மற்றொருவர்: தண்டபாணி. அண்ணன் தம்பியர்!

கூண்டுக்குள் செல்வதற்குமுன், காலைத் தூக்கி அழகாக சலாம் போடவும் இந்தக் கிளிகள் கற்றுக் கொண்டிருக்கின்றன.