விழுப்புரம், கன்னியாகுளம் சாலையில், காலை எட்டு, எட்டரை மணி
வாக்கில், கையில் பெட்டியுடன் விறுவிறுவென நடந்துச் செல்லும் இந்த முதியவரைப்
பார்க்காதவர்கள் இருக்க முடியாது.
கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரியும் அவர் கையில் இருப்பது
பெட்டியல்ல, கிளிக்கூண்டு என்பது. உள்ளே, இரண்டு கிளிகள் குறுக்கும் நெடுக்குமாக
உலவிக் கொண்டிருக்கும்.
வேகவேகமாக நேரு சாலையைக் கடக்கும் இவர், திரு.வி.க. சாலைக்குள்
நுழைகிறார். அதோ, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி அருகே, அந்த இடத்தைத்
தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்துவிட்டுக் கீழே அமர்கிறார். தொடங்கிவிட்டது அவரது,
கிளி ஜோசியம்..!
இவரை வருடக்கணக்கில் பார்த்து வருகிறேன். வெயில், மழை, கடுங்குளிர்
என தனதுப் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறார். திரு.வி.க. வீதியில் தினசரி ஆயிரக்
கணக்காணவர்கள் இவரைப் பார்த்தும், பார்க்காமலும் கடந்து சென்று கொண்டிருக் கின்றனர்.
ஆனால், இவர் ஒவ்வொருவரையும் பார்க்கிறார்.
இவரை இன்று நான் பார்த்தேன்.
பெயர்: சேகர். வயது: 73. படித்தது: எட்டாம் வகுப்பு. சொந்த ஊர்:
சேலம் ஜில்லா. கிளி ஜோசியத்துக்குக் கட்டணம்: ரூ.20. சோழிகளை உருட்டிப் போட்டும் பார்த்துச்
சொல்கிறார்.
வாழ்க்கையில் பல்வேறுப் பணிகளைப் பார்த்த இவர், கடைசியாகத் தேர்ந்தெடுத்தது
கிளி ஜோசியத்தைத்தான். இதற்காக இவர் யாரிடமும் பாடம் கற்கவில்லை. எல்லாம், அனுபவ
அறிவுதான்.
‘நம்மிடம் பொய் இருக்காது. அபசகுணமான வார்த்தைகள் இருக்காது. பரிகாரம்
செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். உண்மை என்னவோ அதை மட்டுமே சொல்லுவேன்’ என்கிறார் சேகர்.
‘தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. கம்யூட்டர் ஜோசியம் எல்லாம்
வந்துவிட்டது. இன்னமும் கிளியை வைத்து ஜோசியமா?’ நான் கேட்டேன்.
‘கம்யூட்டர் ஜோசியம் எல்லாம் முழுமைகிடையாது. நாங்கள் ஆளைப்
பார்த்து, அவரது நடவடிக்கைகளைப் பார்த்து சொல்லுவோம். இதில் முழுமை இருக்கும்’ எனும் நீண்ட விளக்கம் அவரிடமிருந்து.
‘இந்த வீதியில் எவ்வளவோ பேர் போகிறார்கள், வருகிறார்கள். இவர்கள்
உங்களைப் பார்க்கவில்லையே என்ற வருத்தம் உங்களுக்குக் கிடையாதா?’
கேட்டவுடன்,
பட்டென்று சொல்கிறார் ‘கிடையாது. என் தேவையை உணர்ந்தவர்கள் நிச்சயம் என்னிடம்
வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது’.
பெட்டியில் பாரதியார் படம்
ஒட்டப்பட்டிருக்கிறது. ‘பாரதி பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதுதான்’ என்று
சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.
இதோ, ஜோசியம் பார்க்க ஒருவர் வருகிறார்.
‘கணேசா, வா. ஐயாவுக்கு ஒரு நல்ல சீட்டா எடுத்துக்குடு’ கூண்டைத்
திறந்தவுடன் இரண்டுக் கிளிகளில் ஒன்று வேகமாக வெளியே ஓடிவருகிறது.
உம். இவரது இரண்டுக் கிளிகளின் பெயரைச்
சொல்ல மறந்துவிட்டேன். ஒருவர் பெயர்: கணேசன். மற்றொருவர்: தண்டபாணி. அண்ணன்
தம்பியர்!
கூண்டுக்குள் செல்வதற்குமுன், காலைத்
தூக்கி அழகாக சலாம் போடவும் இந்தக் கிளிகள் கற்றுக் கொண்டிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக