வெள்ளி, 30 மார்ச், 2018

சங்க இலக்கியப் பொதும்பரின் பாராட்டு


விழுப்புரம் சங்க இலக்கியப் பொதும்பரின் 32ஆம் ஆய்வரங்கம் நேற்று (வெள்ளிக் கிழமை) மாலை, முனைவர் மா.சற்குணம் அவர்களின் தலைமையில் சிறப்பாகவே நடந்தேறியது.

ஆய்வாளர்களின் உரையின் ஊடாகப், பாராட்டு விழாவும் இனிதே நடந்தது.

அண்மையில், தேசிய அளவிலான விருதுப் பெற்ற, மதிப்பிற்குரிய அம்மையார் கவிஞர் முனைவர்.இரா.தமிழரசி அவர்களுக்குப் பாராட்டுப் பட்டயம் வழங்கி கௌரவித்தனர்.

கூடவே, ‘பத்திரிகைத் துறையில் பணியாற்றியப் பட்டறிவைப் பதிப்புத்துறையில் பயன்படுத்தி வருவதாகச் சொல்லி, எனக்கும் பாராட்டுப் பட்டயம் வழங்கினர். மகிழ்ச்சி.

என் மனைவி, மக்கள் மகிழ்ந்தத் தருணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்!  

பேரா.த.பழமலய், ஆசிரிய மாமணி தெ.வே.சஞ்சீவிராயன் ஆகியோரும் விருதாளர் களைப் பாராட்டினர்.

இந்நிகழ்வினை முன்னின்று நடத்திய, சங்க இலக்கியப் பொதும்பர் அமைப்பின் தலைவர் புலவர் ச.தமிழரசு, புலவர் க.கதிர்வேலு, கவிஞர்கள் சீ.விக்கிரமன், தி.க.நாகராசன் உள்ளிட்ட நிர்வாகிகள், உண்மையில்  பாராட்டிற்குரியவர்கள்.

மற்றவர்களைப் பாராட்டுவதற்கு மனசு வேணுமே..!




வெள்ளி, 23 மார்ச், 2018

புதுவை கோ.சுகுமாரன்


1980களின் இறுதி. தமிழீழ விவகாரம் தமிழக இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நேரம் அது. தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் அமைப்புகளும் தீவிரமாகக் களப்பணியாற்றிக் கொண்டிருந்தன.

அப்போது நான், மார்க்சிய லெனினிய அமைப்பில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், தமிழின விடுதலைக்காகப் போராடும் அமைப்பினரிடமும் தொடர்பில் இருந்தேன்.

தமிழ்நாடு இளைஞர் மற்றும் மாணவர் பேரவை இங்குக் குறிப்பிடத்தகுந்தது. இந்த அமைப்பினைச் சேர்ந்தத் தோழர்கள் பலரும் அவ்வப்போது என்னைப் போன்றவர் களை விழுப்புரத்தில் சந்தித்துப் பேசி வந்தனர். பெரும்பாலும் இவை, இரகசிய சந்திப்புகளாகவே இருக்கும்.

அப்படி அறிமுகமானத் தோழர்களில் ஒருவர்தான், புதுவை கோ.சுகுமாரன். எத்தனை நாள், எத்தனைமுறை சந்தித்திருப்போம் என்றெல்லாம் தெரியாது. பல்வேறு இடங்களில் நடந்தப் பொதுநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறோம்.

தோழர் சுகுமாரன் போன்றவர்களின் தோழமையின் விளைவாக, தமிழ்நாடு விடுதலைக் குறித்தானச் சிந்தனையும் என்னுள் எழுந்தது.

காலங்கள் உருண்டோடின. என் கவனம் பத்திரிகைத்துறையின் மீது சென்றது. முழு நேரப் பத்திரிகையாளனாகவும் ஆனேன். தோழர் சுகுமாரன், மனித உரிமை ஆர்வலராக தமிழகம் முழுதும் அறியப்பட்டார். எங்களுக்கு இடையிலான சந்திப்பு எப்போதாவதுதான்.

இந்த நிலையில்தான், கடந்த வாரம் நடந்த வரலாற்றுப் பயணத்தில், ஆண்டுகள் பல கடந்த நிலையில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். கீழ்வாலையில், கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்.

இனிய சந்திப்பு. அப்போதெல்லாம் துடிப்புமிக்க இளைஞர்கள். இப்போதும் எங்களது சிந்தனை இளமையாக இருப்பதாக ஒரு நினைப்பு!

இதனை, உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோசம்தான், நண்பர்களே!   

செவ்வாய், 20 மார்ச், 2018

வரலாறு முக்கியம் பட்டாச்சர்யரே...


புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரி மாணவர்களுடன் அண்மையில், தொல்லியல் பயணம் மேற்கொண்டோம் அல்லவா? காலையில் கீழ்வாலையில் தொடங்கியப் பயணம், மாலை, செஞ்சி அருகே உள்ள சிங்கவரத்தில் நிறைவுற்றது.

பள்ளிகொண்டுள்ள அரங்கநாதரை தரிசிக்க, மலைமீது ஏறிச்சென்றோம். பூசையில் ஈடுபட்டிருந்த பட்டாச்சார்யார், இளையவர். தமிழிலேயே அருச்சனை செய்தார். வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி!

அடுத்துத் தல வரலாறு சொன்னார். அப்போது, ‘சிங்கவரம் அரங்கநாதர் ஆண்டுக்கு ஒருமுறை அருகிலுள்ள மேலச்சேரிக்கு எழுந்தருளுகிறார். அங்கு அமைந்துள்ள ராஜா தேசிங்கின் ஜீவ சமாதிக்குச் சென்று வருகிறார் என்றார்.

ராஜா தேசிங்குக்கு ஜீவ சமாதியா? நான் புருவத்தை உயர்த்தினேன்.

பூசை எல்லாம் முடிந்த பிறகு, பட்டாச்சார்யரை நெருங்கினேன்.

‘தல வரலாற்றில் நீங்கள் சொன்னது சரிதான். ஆனால், ராஜாதேசிங்கு இறந்தது, வளத்தி சாலையில் அமைந்துள்ள கடலி என்ற இடத்தில். அவர் உடல் தகனம் செய்யப்பட்டது, செஞ்சிக் கோட்டைக்குள். இதில், எங்கிருந்து வந்தது அவர் ஜீவ சமாதி? அதுவும் மேலச்சேரியில்? என்று பட்டாச்சார்யரைக் கேட்டேன்.

அந்த இளைஞரோ, ‘சார் நான் இந்தக் கோயிலுக்கு வந்து நான்கைந்து மாதங்கள்தான் ஆகிறது. நாமக்கல் பகுதியில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு இந்தப் பகுதியைப் பத்தி அவ்வளவா தெரியாது, எனக்கு முன்பு இருந்தவர்கள் என்னிடம் சொல்லி விட்டுப் போனதைத்தான் நான், வருகிறவர்களிடம் சொல்கிறேன். நீங்கள் சொல்லும் விவரங்கள் குறித்து மேற்கொண்டு நானும் தெரிந்து கொள்கிறேன் சார் என்றார்.

பரவாயில்லை. உண்மையை ஒத்துக்கொண்டார். எனக்கு மகிழ்ச்சிதான்.

சரி, பிறகு எதற்கு சிங்கவர அரங்கநாதர் மேலச்சேரி சென்று வருகிறார்?

சிங்கவரத்துக்கு அடுத்துள்ள இந்தக் கிராமத்தில் பல்லவர் காலக் குடைவரை (சிகாரி பல்லவேசுரம்) அமைந்துள்ளது. இக்குடைவரைக்கு அருகில் சாவடி மண்டபம் என்றழைக்கப்படும் கல் மண்டபம் ஒன்று இருக்கிறது. 18ஆம் நூற்றாண்டில், சிங்கபுரத்து அரங்கநாருக்காக கட்டப்பட்ட தீர்த்தக்கரை மண்டபம் என்கிறது இங்குள்ள கல்வெட்டு.

இதன்படி, சிங்கவரக் கோயில் உற்சவர், தை அமாவாசையில் மேலச்சேரிக்கு எழுந்தருள்வதாகத் தெரிவிக்கிறார்கள், ஆய்வாளர் இரா.கலைக்கோவன், மு.நளினி.

வெள்ளி, 16 மார்ச், 2018

கோலியனூர் கால்வாயில் சீரமைப்புப் பணி...


‘இன்னும் கொஞ்ச நாள்லப் பாருங்க, ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டால், இந்தத் தண்ணீரில் தெளிவாத் தெரியும்’.

1996இல் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், விழுப்புரத்தில் கோலியனூரான் கால்வாய்ச் சீரமைப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசியது இன்னமும் நினைவில் நிற்கிறது.

பணிகள் முடிந்தப் பிறகு, யாராவது ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டிவிட்டார்களா? அது தெளிவாகத் தெரிந்ததா? எனும் விவரங்கள் நமக்குத் தெரியவில்லை.

ஆனாலும்கூட, கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, முழு அளவில் சீரமைப்புப் பணிகள் நடந்தன என்பது உண்மைதான்.

கோலியனூரான் கால்வாயின் கரைகள், மாட்டு வண்டிகள் செல்லுமளவுக்கு அகலமாக இருக்குமாம். என் தந்தையார் சொல்ல, நான் கேட்டது.

விழுப்புரம் பூந்தோட்டம், சாலாமேடு, மருதூர் உள்ளிட்ட 6 ஏரிகளுக்குத் தென்பெண்ணையாற்றின் தண்ணீரை முகர்ந்துச் சென்ற, கோலியனூரான் கால்வாய் அப்போது, ஊருக்கு அழகாய்த்தான் இருந்திருக்கும்.

காலங்கள் மாறின. ஆக்கிரமிப்புகள் தலைதூக்கின. கரைகள் சுருங்கின. கால்வாய் கழிவுநீர் சாக்கடையாய்ப் போனது. விழுப்புரத்தின் கூவமாய் ஆனது, கோலியனூரான் கால்வாய்.

இந்த நிலையில்தான், 1996 திமுக ஆட்சியில் இதன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வரவேற்கப்பட்ட, பாராட்ட நடவடிக்கைதான்..!

கால்வாய், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் பராமரிப்பை விழுப்புரம் நகராட்சி மேற்கொள்கிறது.
 
கட்டுப்பாடும் இல்லை... பராமரிப்பும் இல்லை... மீண்டும் ஆக்கிரமிப்புகள். பழைய நிலைமைக்கேச் சென்றது, கோலியனூரான் கால்வாய்.



ஏறக்குறைய, பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கால்வாய்க்கு இப்போது மீண்டும் விமோசனம் பிறந்துள்ளது. தனலட்சுமி கார்டன் துவங்கி, சீரமைப்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

கோலியனூரான் கால்வாய் இப்போது அகலமாகவும், ஆழமாகவும் காட்சியளிக்கிறது. மகிழ்ச்சிதான். வரவேற்போம்... பாராட்டுவோம்...

மீண்டும் மீண்டும் நம் நினைவுக்கு வருவது கட்டுப்பாடும், பராமரிப்பும்தான். அது, இல்லாவிட்டால், இந்தப் பணிகள் அனைத்தும் வீண்தான்.

தொடர்புடைய அரசுத் துறைகளும், ஆட்சியாளர்களும் இதனை கவனத்தில் கொள்வார்கள் என நம்புகிறோம்..!  

(இணைப்பில் இருக்கும் பழைய படங்கள் (தனலட்சுமி கார்டன் பகுதி) 2016ஆம் ஆண்டின் இறுதியிலும், புதிய படங்கள் (அதே பகுதியில்) கடந்த சில நாள்களுக்கு முன்பும் எடுக்கப்பட்டவை)

திங்கள், 5 மார்ச், 2018

கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.


அருங்காட்சியகத்தைப் பற்றி நாம் பேசும்போது, திரு.கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நிச்சயம் நினைவுக்கு வராமல் போகமாட்டார்.

அடடா... வரலாற்றின்மீது, இந்த மண்ணின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பதிலும் அவருக்கு எவ்வளவுதான் அலாதி..?

தேன்குணம் பாறை ஓவியங்களைப் பார்க்க, அந்தப் பாறைகளின் மீது அவர் தாவி ஏறிச்சென்றதை என்னால் மறக்க முடியாத காட்சி!

சேந்தமங்கலம் இசைக்கும் கற்குதிரைகளையும், கல்யாணம்பூண்டி கல்தூண்களையும் ஒரே மூச்சில் சென்று பார்த்தாரே! இவற்றையெல்லாம் விழுப்புரம் கொண்டு வந்து வைத்தால் என்ன? என யோசனையும் செய்தாரே!

“விழுப்புரத்துக்கு அருங்காட்சியகம் வேணும்சார்- அரசாங்க விழா மேடையிலேயே, அமைச்சரிடம் வெளிப்படையாகக் கோரிக்கை வைக்க, அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியால் மட்டுமே முடியும்.

எப்படியும் அருங்காட்சியகத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும், நம்மைவிடத் தீவிரமாக யோசித்தவர்.

திடீரென ஒருநாள் கேட்டார், “காலியாக இருக்கும் அந்தக் கட்டடத்துல தற்காலிக அருங்காட்சியகம்னு போர்டு மாட்டிட்டா என்ன?

என்னைதான் நான் நொந்துக் கொள்ள வேண்டும். ஒருசில மாதங்களுக்கு முன்பு இந்தக் கோரிக்கையை அவர்முன் எடுத்துச் சென்றிருந்தால் இப்போது புத்தகம் போடும் அவசியமே வந்திருக்காது. 

பின்னே பாருங்களேன். அருங்காட்சியக விவகாரத்தைக் கையில் எடுத்த சில மாதங்களுக்கு எல்லாம் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட, தேர்தலும் நடந்து முடிக்க, ஆட்சியும் மாறியது, ஆட்சியரும் மாறினார். காட்சிகளும் மாறின.

திருவாளர் கா.பாலச்சந்திரன் போல், வரலாற்று விவகாரங்களில் ஆர்வம்காட்டும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் விழுப்புரம் மாவட்டத்துக்கு வாய்க்கவில்லை என்பது எனதுத் தனிப்பட்டக் கருத்து!