அருங்காட்சியகத்தைப் பற்றி நாம் பேசும்போது,
திரு.கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நிச்சயம் நினைவுக்கு வராமல் போகமாட்டார்.
அடடா... வரலாற்றின்மீது, இந்த மண்ணின் வரலாற்றை
ஆவணப்படுத்த வேண்டும் என்பதிலும் அவருக்கு எவ்வளவுதான் அலாதி..?
தேன்குணம் பாறை ஓவியங்களைப் பார்க்க, அந்தப்
பாறைகளின் மீது அவர் தாவி ஏறிச்சென்றதை என்னால் மறக்க முடியாத காட்சி!
சேந்தமங்கலம் இசைக்கும் கற்குதிரைகளையும், கல்யாணம்பூண்டி
கல்தூண்களையும் ஒரே மூச்சில் சென்று பார்த்தாரே! இவற்றையெல்லாம் விழுப்புரம்
கொண்டு வந்து வைத்தால் என்ன? என யோசனையும் செய்தாரே!
“விழுப்புரத்துக்கு அருங்காட்சியகம் வேணும்சார்” - அரசாங்க விழா மேடையிலேயே,
அமைச்சரிடம் வெளிப்படையாகக் கோரிக்கை வைக்க, அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியால் மட்டுமே
முடியும்.
எப்படியும் அருங்காட்சியகத்தைக் கொண்டுவந்துவிட
வேண்டும், நம்மைவிடத் தீவிரமாக யோசித்தவர்.
திடீரென ஒருநாள் கேட்டார், “காலியாக இருக்கும்
அந்தக் கட்டடத்துல தற்காலிக அருங்காட்சியகம்னு போர்டு மாட்டிட்டா என்ன?”
என்னைதான் நான் நொந்துக் கொள்ள வேண்டும். ஒருசில மாதங்களுக்கு முன்பு
இந்தக் கோரிக்கையை அவர்முன் எடுத்துச் சென்றிருந்தால் இப்போது புத்தகம் போடும்
அவசியமே வந்திருக்காது.
பின்னே பாருங்களேன். அருங்காட்சியக விவகாரத்தைக் கையில் எடுத்த சில
மாதங்களுக்கு எல்லாம் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட, தேர்தலும் நடந்து முடிக்க,
ஆட்சியும் மாறியது, ஆட்சியரும் மாறினார். காட்சிகளும் மாறின.
திருவாளர் கா.பாலச்சந்திரன் போல், வரலாற்று விவகாரங்களில்
ஆர்வம்காட்டும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அதற்கு முன்பும் அதற்குப் பின்பும்
விழுப்புரம் மாவட்டத்துக்கு வாய்க்கவில்லை என்பது எனதுத் தனிப்பட்டக் கருத்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக