திங்கள், 30 ஏப்ரல், 2018

மே தின வாழ்த்துகள் ...

மே தின வாழ்த்துகள் ...

உழைப்பையே மூலதனமாகக் கொண்டு
வாழ்க்கையை நகர்த்தி வரும்
அனைவருக்கும்...

நூல்களை முடக்கிப்போட்ட இணையத்தளங்கள்


வாசிப்புத் தளத்தில் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. ‘இணையத்தளங்களின் அசுரத்தனமான வளர்ச்சி, நூல்களை முடக்கிப் போட்டு விட்டது. 

இதில் உண்மையும் இருக்கலாம். புத்தகக் கண்காட்சிகளை நடத்தினால் மட்டுமே, புத்தகங்களை விற்க முடியும் எனும் நிலை ஏற்பட்டுவிட்டது.

எப்படிப் பார்த்தாலும் புத்தகங்களின் விற்பனை அப்படியொன்றும் பிரம்மாண்டமாக இல்லை என்பதுதான் எதார்த்தம்.

எத்தனை நூல்கள் அச்சிடப்பெறுகின்றன? அதில் எத்தனை விற்பனையாகின்றன? எனும் விவரங்களை பதிப்பகத்தார் வெளியிட்டால், உண்மை நிலவரம் தெரியவரும்.

தனிப்பட்ட முறையில் நூல்களை அவ்வப்போது வெளியிட்டுவரும் என்னைப் போன்றோரும் இதன் பாதிப்பினை நன்கு உணர்ந்திருக்கிறோம்.

அரசு நூலகத்தில் உள்ள இலட்சக்கணக்கான நூல்களை எத்தனைப் பேர் எடுத்துப் படிக்கின்றனர் என்பதையும் கணக்கிட்டால், இன்னும்கூட இதில் தெளிவு வரலாம்.

நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, புத்தகங்களைப் புரட்டிப்போட்டுவிட்டது என்பது உண்மைதான்.

ஆனால், எழுத்தாளன் எழுதவேண்டும். அவன் படைப்புகள் வெளிவந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.


பல்லக்கில் பவனிவந்த சாமியார்களே உயர் ரக கார்களில் சுற்றிவரும்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினை எழுத்தாளன் ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?

நான் இன்னமும் புத்தகங்களாகவேதான் வெளியிடுவேன், அதை நீங்கள் வாங்க வேண்டும் என அடம்பிடிப்பது எந்த வகையில் நியாயம்?

நூல்களை மின்நூலாக்கம் செய்வது, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது போன்றவை, இன்றையச் சூழலில், இளைய தலைமுறையினை, பரந்துபட்ட வாசகர்களை சென்றடைவதற்கு வழிவகுக்கும் என நினைக்கிறேன்.

இப்படியான உத்தியில், என்னை நான் மாற்றிக்கொள்வதுபற்றியும் யோசித்து வருகிறேன்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

பனையபுரம் நடராசன்


பனையபுரம் நடராசன். 30 ஆண்டுகாலம் தொடரும் தோழமை.

1993இல், விழுப்புரம் காந்திசிலை தகர்ப்பு வழக்கில், புனையப்பட்டு கைது செய்யப் பட்டவர், பின்பு விடுதலையானார்.

சாராய சாம்ராஜ்யத்தை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதற்காக, விழுப்புரம் சாராய வியாபாரிகளால் கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டவர்.

புரட்சியின் மீதும், புரட்சிகர இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துத் தொடர்ந்துத் தன்னை ஈடுபடுத்தி வருபவர்.  

எனக்கெல்லாம், இவற்றின்மீது வறட்சி ஏற்பட்டு, ஒருகட்டத்தில் ஒதுங்கிக் கொண்டேன்.

ஆனாலும், நடராசன் இப்போதும் சொல்கிறார்: ‘புரட்சி வெல்லும்.

வர்க்க அரசியல் பேசியவர்களில் பலர்
சுயசாதிப் பிடியில் தீவிரமாகச் சிக்கிக் கொண்டனர்.
வெகுசிலரோ, கோடிகளுக்கும் அதிபதிகளாகி விட்டனர்.

இவர்களும் இன்று, புரட்சிகர அரசியலைப் பேசிவருகிறார்கள் என்பதுதான் வேடிக்கை!



இத்தகையப் போலிகளுக்கு மத்தியில்,
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு,
பாட்டாளியாய் இன்றும் தன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டு.

‘புரட்சி வெல்லும் எனும் நம்பிக்கையோடு
களத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பனையபுரம் நடராசன், நிஜமானவர்தான்!   

புதன், 18 ஏப்ரல், 2018

விழுப்புரம் முக்தி...







விழுப்புரத்துல ரோட்டரி சங்கம் செஞ்ச நல்ல காரியத்துல ஒண்ணு, ‘முக்திய சொல்லலாம்.

சுடுகாடு மாதிரின்னு இல்லாம ஒரு தோட்டம் போலப் பராமரிக்கறது, பாராட்டப்பட வேண்டியதுதான்.

நாலு வருசத்துக்கு முன்னாடி, என் தாயாரின் சடலத்த எரிக்கப் போனப்பதான், வெளியில இருந்து வந்த நபர்கள், எதற்கெடுத்தாலும் காசுப் பிடுங்கி, கோவத்த ஏற்படுத்துனாங்க.

அப்புறம், எரிச்ச சர்டிபிகேட் வாங்கும்போதுதான் கவனிச்சேன், அதுல சீரியல் நம்பர் எதுவும் கிடையாது.

அப்புறம், மயானத்துல இருந்து வண்டி அனுப்பறதுல இருந்து, இறுதிச் சடங்கு முடிக்கிற வரைக்கும் கும்பல் ஒன்னு, ரேட் பிக்ஸ் பண்ணிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தது.

இதெல்லாம் ரோட்டரி பாத்துக்கும்னு விட்டுட்டோம். நாம என்ன அடிக்கடியாக அங்கப் போறோம்?

ஆனா, இப்ப, எல்லாம், ஒரு கட்டுக்குள்ள வந்துகிட்டு இருக்கிறதா ஒரு தகவல்.

ரோட்டரி நிர்வாகிங்க இதுல முழு கவனம் செலுத்துறலாங்கலாம். மகிழ்ச்சி.

அட, மயானத்துக்குள்ள இருக்கிற, பூங்காவப் பாருங்க, சீரமைப்புகள் நல்லாத்தான் இருக்கு. மயானம்ங்கற ஒரு நினைப்பே நமக்கு வரல!

இன்னும் சி.சி.டிவி கேமரா எல்லாம் பொருத்தி, எந்த முறைகேட்டுக்கும் வழி இல்லாம செய்யப் போறாங்களாம். சந்தோசம்தான்.

விழுப்புரத்துக்கு நல்ல வரவு, இந்த முக்தி.
இத நல்லா கொண்டுப் போனா, எல்லாருக்குமே நல்லதுதான?

ரோட்டரியின் முயற்சிகளைப் பாராட்டலாம்ங்க..!  

திங்கள், 9 ஏப்ரல், 2018

அருங்காட்சியகம் நூல் வெளியீட்டு விழா


உங்களின் வாழ்த்துக்களுடன் இனிதே நடந்தது ‘அருங்காட்சியகம் அவசியமும் அவரமும்' நூல் வெளியீட்டு விழா...

திருவாளர் இரா.இராமமூர்த்தி (நிறுவுநர்: பாரதி சிந்தனைப் புலம்) அவர்கள் தலைமை யேற்றார். முல்லை புத்தக அங்காடியின் நிறுவுநர் தோழர்.தே.ஏழுமலை வரவேற்றார். கல்வெட்டாய்வாளர் திரு.சி.வீரராகவன், பாபு அச்சகத்தார் கோ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரா.த.பழமலய், புதுச்சேரி தோழர்.சுகுமாரன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.

புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். முனைவர்.நா.இளங்கோ அவர்கள் நூலினை வெளியிட, புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் திரு.வீர.பாலகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், ‘வரலாறு எப்படியெல்லாம் எழுதப்படுகிறது என்பது குறித்து விளக்கினார். ‘வரலாறு விளிம்புநிலை மக்களிடமிருந்துத் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தொண்டை மண்டலத்தின் தொன்மைக் குறித்தும் விரிவாகவே பேசினார்.

புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் அவர்கள், ‘விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க நான் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் எனும் வேண்டுகோளை முன் வைத்தார்.    

முடிவில், இல்லந்தோறும் நூலக இயக்கத்தின் தலைவர் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில், நண்பர்களும் தோழர்களும் திரளாகப் பங்கேற்றது மனநிறைவைத் தந்தது.

விழுப்புரம் மாவட்டத்துக்கு அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் எனும் விதை அனைவர் மனத்திலும் விதைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது, விருட்சமாகும் எனும் நம்பிக்கை இருக்கிறது.

இதற்கான ஆவணப்பதிவாக எனது நூலும், இதற்கானத் தொடக்கமாக நூல்  வெளியீட்டு விழாவும் நடந்தேறியுள்ளது.

முகநூல் வழியாக என் அழைப்பினை ஏற்று விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றி... நன்றி...