திங்கள், 27 ஜனவரி, 2020

ஐயா கோ.விஜய வேணுகோபால் அவர்களுடன்

"எழுதறதுக்கு முன்னாடி, நீங்க யாருக்காக எழுதறீங்க? அப்டிங்கறத உள்வாங்கிக்கிட்டு எழுதுங்க"


புதுச்சேரியில் இன்று27.01.2020, மூத்தத் தொல்லியல் ஆய்வாளர் ஐயா கோ.விஜய வேணுகோபால் அவர்களை சந்தித்த போது, அவர் சொன்னது.


நிகழ்ச்சிகளில் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். அவ்வளவாகப் பரிச்சயமில்லை.

இப்போது தான் முதன் முறையாக ஐயா அவர்களை நேரில் சந்திக்கிறேன். பேசுகிறேன்.


நேரமில்லை. கலந்துரையாடல் ஒன்றிற்கு அவர் போக வேண்டும். இப்போதும் பிரெஞ்சுக்காரர் ஒருவர் சைவ சித்தாந்தம் குறித்து, ஐயாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

ஆனாலும் இடைப்பட்ட நேரத்தில் ஐயா அவர்கள் நம்மிடம் நிறைய பேசினார். தொல்லியல், அரசியல் உள்ளிட்ட விசயங்களைப் பேசினோம்.


இன்னும் நிறைய பேச வேண்டும். இவரிடமிருந்து தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.

விரைவில் மீண்டும் சந்திக்கிறோம்.


இப்போதைக்கு விடைபெற்றோம்..!

புதுவைக்கு அழைத்துச் சென்ற, இந்த சந்திப்புக்கு துணைநின்ற தம்பி விஷ்ணு Vishnu Stark வுக்கு நன்றி..!

புதன், 15 ஜனவரி, 2020

ஏழுசெம்பொன் சிவாலயம்

ஏழுசெம்பொன்...

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமம், “தம் அடித்தால் தர்ம அடி” என சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் பரபரப்பாக அடிபட்ட ஊர் இது. புகைப்பதற்கு எதிரான ஊர்க்கட்டுப்பாடு அந்தளவுக்கு!

கல்வெட்டுகள் இந்த ஊரை ஏழிசைமோகன் எனக் குறிப்பிடுகின்றன. காடவராய கோப்பெருஞ்சிங்கனின் பட்டப்பெயர்களில் ஒன்றுதான் ஏழிசை மோகன் என்பது.

இவரது ஆட்சிக் காலத்தில் இங்குள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களும் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம்.

சிவாலயம், திருக்காளத்தி உடைய நாயனார் கோயில் எனவும் வைணவ ஆலயம் தென்திருவேங்கட பெருமாய் கோயில் எனவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒரிசா மன்னன் குமாரஹம்வீரர் என்பவரின் தமிழகப் படையெடுப்பின் போது (கி.பி.1463) இக்கோயில்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. பின்னர் விஜயநகரர் ஆட்சியில் சீரமைக்கப்பட்டன.

ஆனாலும் பிற்காலத்தில் சிவன் கோயில் மிகவும் சிதலமடைந்தது. நூற்றாண்டுகளைக் கடந்து அப்படியே காட்சியளித்து வந்தது.

கடந்த மாதம் போயிருந்தோம். மழைப் பெய்த பிற்பகல் வேளையில், கோயிலின் பழைய அமைப்பை நாங்கள் தரிசித்தது அதுதான் கடைசிக் காட்சி!


இந்த நிலையில் இக்கோயிலை சீரமைப்பது எனும் முடிவு செய்த ஊர்ப்பொது மக்கள் தற்போது அதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளனர்.




கடந்த வாரம் தொடங்கியப் பணியில், கோயில் முழுக்கப் பிரிக்கப்பட்டுவிட்டது.

ஓரிரு தினங்களில் புதிய கோயிலுக்கானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.



“கோயிலின் பழமை மாறாமல் அதே பாணியில் கட்டப்படும்” என உறுதியாகத் தெரிவிக்கிறார், இப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள திரு.ரமேஷ்.

கோயில் திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புபவர்கள் இவரை, 7708463779 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புகைப்படங்கள்:
கண சரவணகுமார் திருவாமாத்தூர்

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

வீரப்பாண்டி கிராமத்தில்

திருக்கோவலூர் அருகே உள்ள வீரப்பாண்டி, தொல்லியல் தடயங்கள் நிறைந்தக் கிராமம்.

இப்பகுதியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சிலம்பரசன், தொல்லியலில் மிகுந்த ஆர்வம் உடையவர். தொடர்ந்துத் தேடலில் இருப்பவர்.

தொல்லியல் பொருள்கள் பலவற்றைத் தன் சேகரிப்பில் வைத்திருக்கிறார்.

நேற்று12.01.2020 ஞாயிறு, திருக்கோவலூர் வந்த ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு, பேராசிரியர் செல்லபெருமாள் ஆகியோருடன் என்னையும் தமது சொந்தக் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்.

ஊரின் புறத்தே பரந்து விரிந்து காணப்படுகிறது பெரிய ஏரி.

ஏரிக்குள் அங்கும் இங்கும் ஆக பெரியதும் சிறியதுமாக பாறைக் குன்றுகள் முளைத்துக் காணப்படுகின்றன.


அதில் ஒன்றை அடையாளப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் சிலம்பரசன்.

குன்றின் மீது ஏறினோம். இடையில் அழகான குகைத் தளம். கீழ்வாலையில் பார்க்கிறோமே, அந்த மாதிரி!


அருகில் உள்ள ஓரு பாறை. வழவழப்பானது. சிரமப்பட்டு தான் ஏறினோம்.


இதில் தான் அந்தத் தொல்லியல் அடையாளங்கள் நிறைத்துள்ளன.


இன்னும் ஆவணப்படுத்தப் படாதவை என்றே கருதுகிறோம்.
விரைவில் ஆவணப்படுத்துவோம்.

ஆசிரியர் சிலம்பரசன் அவர்களுக்கு நம் நன்றி!

வெள்ளி, 3 ஜனவரி, 2020

குறளார்...

திருக்குறளார் வீ.முனிசாமி...

சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் எக்ஸ்பிரஸ் அதிபர் கோயங்காவை வென்று திண்டிவனம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினாரார் என்பது அனைவரும் அறிந்ததே!

“மக்களை நான் மூன்றுமணி நேரம்தான் சிரிக்க வைப்பேன். ஐயா, குறளார் மூன்று நாள் சிரிக்க வைப்பார்” நடிகவேள் எம்.ஆர்.ராதா சொன்னது.

ஐயாவின் “குறள்” தொண்டினை முழுவதும் அறிந்த அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், தமிழ்நாடு அரசின் சார்பில், “தமிழ்ப் பழங்கலை பண்பாட்டு இயக்ககம்” மற்றும் “திருக்குறள் நெறிபரப்பும் மையம்” ஆகியவற்றை ஏற்படுத்தி அவற்றின் இயக்குநராகக், குறளாரை நியமித்தார்.

ஏறக்குறைய நான்கு ஆண்டுகாலம் இப்பணிகளில் இருந்தார் குறளார். இக்காலக்கட்டத்தில்தான் அரசுப் பேருந்துகளில் குறள் எழுதும் நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

1981இல் மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், குறளுக்காக ஒருநாளை ஒதுக்கித் தந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அந்த ஒரு நாள் நிகழ்ச்சியை, குறளாரைத் தலைமைத் தாங்கி நடத்தச் செய்தார்.

1994ஆம் ஆண்டு ஜனவரியில் குறளாருக்கு தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விருதினைப் பெறுமுன்னரே மறைந்தார், திருக்குறளார்!


குறளுக்காக, குறளாகவே வாழ்ந்தத் திருக்குறளார் வீ.முனிசாமி அவர்களின் நினைவுதினம் இன்று...