வியாழன், 2 டிசம்பர், 2021

செஞ்சி: அன்பு நாய்க்கு ஆங்கிலேயர் எடுத்தக் கல்லறை

நாய் … நன்றியுள்ள பிராணி மட்டும் இல்லை நமக்கு உற்ற நண்பன் தோழனும் கூட. 

மனித சமூகம் வேட்டைச் சமூகமாக இருந்த போது அந்த வேட்டைக்கு மிகவும் துணை நின்றவை நாய்கள் தான். 

அதனால் தான் உலகிலுள்ள பெரும்பாலான தொல்பழங்காலப் பாறை ஓவியங்களில் நாய்கள் தவறாமல் இடம் பெற்றுள்ளன. 

நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களும் நாய்களை ஞமலி, ஞாளி கதநாய் எனும் பெயர்களில் அழைக்கின்றன.

தங்களுக்கு உதவியாக துணையாக நின்ற நாய்களுக்கு மனிதர்களும் விசுவாசமாக இருந்து இருக்காங்க அதுகள நன்றியோட நினைச்சு பாத்து இருக்காங்க. 

இதுக்கு எடுத்துக்காட்டா இருக்கிறது தான் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு க்குப் பக்கத்தில் இருக்கிற எடுத்தனூர் நடுகல்

மாடுகளைத் திருட வந்தக் கூட்டத்தோட சண்டை. இதுல மாடுகளின் உரிமையாளர் கருந்தேவ கத்தி. அவரோட நாய் கோவிலன் ரெண்டு பேரும் செத்துப் போறாங்க. இவங்களுக்காக எடுக்கப்பட்ட நடுகல் தான் இது. 

மகேந்திரவர்மப் பல்லவனோட 34 ஆட்சி ஆண்டுல அதாவது கிபி 624 ல இது நடந்திருக்கு. 

அப்புறம் தக்கோலப் போர். இது நம்ம எல்லோருக்கும் தெரிஞ்சது தான். ராஷ்டிரகூட மன்னன் கன்னரத் தேவனோட படைகள் சோழர் படைய தோற்கடிச்சாங்க. 

இந்த வெற்றியின் நினைவாக படைத்தளபதி மனரேல அப்படிங்கறவருக்குத் தன்னோட காளி என்கிற நாயை பரிசாக கொடுத்தாரு கன்னரத் தேவன். 

ஒரு நாள் வேட்டைக்குப் போகும் போது காட்டுப் பன்றி தாக்கினதுல காளி செத்துப் போச்சு. இதன் நினைவாக ஒரு நடுகல் எடுத்து இருக்காரு மனரேல. இது நடந்தது 949 ல. இப்போது இந்த நடுகல் பெங்களூர் அருங்காட்சியகத்தில் இருக்கு. 

அப்புறம் பல்லவர் காலத்தைச் சேர்ந்த ஐயனார் சிற்பங்களில் நாம பாக்கலாம் அவரது கால்களுக்குக் கீழ நாய் காட்டப்பட்டு இருக்கும். 

தஞ்சை பெரிய கோயிலில் சோழர் கால நாய் ஓவியம் ஒண்ணு கண்டறியப்பட்டு இருக்கு. 

அண்மையில் கூட திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பக்கத்தில் தா. வேளூர் அப்படிங்கற  இடத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாய் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டு இருக்கு. 

அப்புறம் பைரவரோட வாகனம் நாய்.. கங்காதர மூர்த்தி சிற்பங்களிலும் நாய் இடம்பெற்று இருப்பதும் நமக்குத் தெரிந்தது தான். 

இப்பவும் கூட கிராமப்புற தெய்வங்களோடு நாய் கம்பீரமாக நின்னுட்டு இருக்கு. 

இதெல்லாம் நாய்களுக்கு நாம செலுத்தற மரியாதை. 

இங்க நாமப் பாக்கப் போறது.. ஆங்கிலேயர் ஒருத்தர் தன் செல்லப் பிராணிக்கு செலுத்தின மரியாதை. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சங்கராபரணி ஆற்றங்கரையில் இருக்கு இந்த அழகான நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதி. 

இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1916 இல் கட்டப்பட்ட கட்டிடம். 

இந்த கட்டிடம் கட்டப்படறதுக்கு முன்னாடியே இங்க ஆங்கிலேய அதிகாரிகள் பொறுப்பில் இருந்து வந்தாங்க. 

அப்படி இருந்த ஒருத்தரோட பாசத்திற்குரிய நாய் பிரெண்டா ஒரு நாள் செத்துடுச்சு. அந்த பிரிவு துக்கம் அவரால தாங்க முடியல. 

தான் இருந்த இடத்திலேயே தனது பாசத்திற்குரிய நாய்க்கு அழகான கல்லறையையும் எழுப்பிட்டாரு. 

இதோ இதுதான் அந்த கல்லறை. 

BRENDA

A DEAR DOG

26 நவம்பர் 1914 

என இதில் எழுதப்பட்டு இருக்கு. 

நவம்பர் 26.107 வருஷங்களுக்கு முன்னாடி இதே நாள்ள தான் பிரெண்டா உயிர்நீத்து இருக்கு. 

நாயோட பெயர் இருக்கு. ஆனால் அதன் எஜமானர் பெயர் தெரியல. உண்மையான விசுவாசம் இதுதான். நாய்க்கு மரியாதை.. இல்லை இல்லை பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆன மரியாதை இது. 

இனிமேல் யாரையாவது திட்டினா நாயே ன்னு எல்லாம் சொல்லி திட்டாதிங்க. 

ஏன்னா அது அன்பின் விசுவாசத்தின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த வரலாற்றின் அடையாளம். 

இதைத்தான் இந்தக் கல்லறை நமக்கு உணர்த்துது. 

இதுபற்றிய அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனலின் பதிவுக்கு:

https://youtu.be/38yN_XSQP-A


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக