கோப்பெருஞ்சிங்கன்... கெடில நதிக்கரையில் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன்...
மூன்றாம் ராஜராஜனை சிறைபிடித்துத் தன் தலைநகரில் சிறை வைத்தவன்.. ஆதலினாலே வரலாற்றில் இன்றளவும் பேசப்படுபவன்!
கோப்பெருஞ்சிங்கனுக்கும் செஞ்சி பகுதிக்கும் மிகுந்தத் தொடர்பு இருக்கிறது.
குறிப்பாக, அன்னமங்கலம் கிராமம். இங்குள்ள ஆனைக்குன்று. குன்றின் மீது இருக்கும்.. சிங்கம் ஒன்று யானையை வீழ்த்தும் அழகிய சிற்பம்!
இந்தச் சிங்கத்தின் புருவத்தில் அமைந்துள்ள “சொக்கப் பல்லவன் வாய் சொல்லும் வன்னிய மணாளன்” கல்லெழுத்தும் இன்னும் சிறப்பு வாய்ந்தது.
அந்த வகையில், அதே அன்னமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள இந்தப் பாறை சிற்பமும் சிறப்பிடம் பெறுகிறது.
முன்னங்கால்களைத் தூக்கிப் பாய்கிறது குதிரை.. அதன் முதுகில் அமர்ந்திருக்கும் வீரன்.. அவன் வலது கையில் குத்தீட்டி… இடது கையில் கேடயம்..
இவன் வீரன் தான் சந்தேகமே இல்லை.. ஆனால் குதிரையின் பின்னால் பாருங்களேன்.. ஒருவன் நீண்ட குடை பிடித்திருக்கிறான். அது கொற்றக் குடையாக இருக்கலாம்!
இதனால், குதிரை மீது செல்பவன் வீரன் அல்ல.. வீர மரபினைக் கொண்ட மன்னன்!
முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் குதிரை, சேந்தமங்கலத்தில் உள்ள இசைக்கும் கற்குதிரையை நினைவுபடுத்துகிறது.
குதிரையின் மீது இருப்பவரின் சற்றே சரிந்தத் தொந்தி.. குறுந்தாடி!
சிதம்பரம் ஆலயத்தின் கிழக்கு வாயிலில் இருக்கும் கோப்பெருஞ்சிங்கனை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது!
அந்த வகையில் இந்தப் பாறைச் சிற்பத்தின் இருப்பது.. கோப்பெருஞ்சிங்கன் ஆகலாம்..!
அன்னமங்கலம் அழைத்துச் சென்று காண்பித்த நண்பர் தேவகுமார் முருகன் அவர்களுக்கு மிகவும் நன்றி..!
(அன்னம் சென்று பார்த்து வந்தது 27.02.2022 ஞாயிறு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக