விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு மற்றும் ஆ.கூடலூர் கிராமங்களில் கண்டறியப்பட்ட கோப்பெருஞ்சிங்கன் சிற்பங்கள் குறித்தச் செய்தி... நாளிதழ்களில்..
தினத்தந்திவியாழன், 29 செப்டம்பர், 2022
ஆற்காடு - ஆ.கூடலூர் - கோப்பெருஞ்சிங்கன் சிற்பங்கள்
கல்வெட்டு ஆய்வாளர் வில்லியனூர் வேங்கடேசன்
இதோ, அடுத்த மாதம் வந்தால், வயது 83 ஆகப்போகிறது!
தெருமுனையிலேயே நமக்காகக் காத்து நிற்கிறார்.. அன்புடன் கைப் பிடித்து, வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்...
உபசரிப்பு... உரையாடல் தொடர்கிறது...
மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ஐயா. வில்லியனூர் ந.வேங்கடேசன் அவர்கள்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 535 கல்வெட்டுகளும் இவருக்கு அத்துப்படி!
வரலாற்றில் வில்லியனூர், பல்லவன் கண்ட பனைமலைக் கோயில் உள்ளிட்ட 28 நூல்களுக்குச் சொந்தக்காரர்! அடிப்படையில் தமிழாசிரியர்... ஆனால் கல்வெட்டு ஆய்வாளராகப் பரிணமித்து நிற்கிறார்!
இவ்வளவு உழைப்பு, அறிவு, ஆற்றலுக்கும் நான் உரியவன் எனும் கர்வம், கொஞ்சம் கூட இவரிடம் எட்டிப் பார்க்கவில்லை!
"ஐயா, உங்களுடன் ஒரு புகைப்படம்" என்று சொன்னது தான் தாமதம்; ஒரு குழந்தையைப் போல உடன் வந்து ஒட்டி நிற்கிறார்!
சுமார் ஒரு மணி நேர உரையாடலுக்குப் பிறகு, "புறப்படுகிறேன்" என்றேன். "உக்காருங்க போகலாம்" ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்கிறார்.
வில்லியனூர் புறவழிச்சாலை வந்தவர், பஸ் வரட்டும் என காத்து நிற்கிறார். பஸ் வந்தவுடன் நம்மை ஏற்றிவிட்டு, கையசைத்து விடை தருகிறார்...
அதிசயத்து நிற்கிறேன்... ஐயா. வில்லியனூர் வேங்கடேசன் அவர்களைப் பார்த்து....
ஞாயிறு, 11 செப்டம்பர், 2022
ஆற்காடு - சயனப் பெருமாள்!
எப்படியும் 10 அடிகள் இருக்கலாம்! ஒரு பிரம்மாண்டத்தை நோக்கி தான் நகர்ந்து இருக்கிறது இந்தப் பாறை! ஆனால் ஏனோ அந்தச் சிற்பியின் முயற்சி முற்றுபெறவில்லை!
வலதுகை மடித்து தலைக்குக் கீழேயும்.. இடதுகை நேராகவும் தொங்கவிடப்பட்டு இருக்கிறது.
கிடந்த நிலையில் காட்சி தருகிறார் விஷ்ணு... செஞ்சி அருகே தொண்டூரில் இருக்கும் விண்ணாம்பாறை நம் நினைவுக்கு வருகிறது.
அதுபோன்ற முயற்சி இங்கும் நடந்திருக்கிறது.
விஷ்ணு தலைக்கு அருகில், தனித்தச் சிற்பமாக மகாலட்சுமி காட்சி தருகிறார்!
இவர்கள் மலையர்குல காலம், அதாவது 13வது நூற்றாண்டு ஆகலாம் என்கிறார் திருமதி Mangai Ragavan அவர்கள்.
"சிவன் படுத்திருக்கிறார். அவர் தலைமாட்டுல பார்வதி வெசனத்தோடு உக்காந்து இருக்காங்க" அந்தப் பகுதியில் மாடுகளை ஓட்டிச் சென்ற ஒருவர் சொன்னது.
சிரிப்பு வந்தது!
பாறைகள் சூழ்ந்த இடம். சில அடிகளில் பாறைகள் உடைக்கப்பட்டு இருக்கின்றன. சிற்பங்கள் இருப்பதால் இந்த இடம் தப்பி இருக்கிறது.
இது எந்த இடம்?
இடைச்சி கல் அருகில், ஆற்காடு கிராமம். விழுப்புரம் - திருக்கோவலூர் சாலை.
உடன் வந்து உதவிய ஆசிரியர் மூர்த்தி அவர்களுக்கு நன்றி..!
சனி, 10 செப்டம்பர், 2022
பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்
பாரதி குறித்து அண்மையில் நான் வாசித்த, என்னை உலுக்கிய புத்தகம் “ பாரதி நினைவுகள்”. நூலாசிரியர்: யதுகிரி அம்மாள்.
பாரதியின் நெருங்கிய நண்பர் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாரின் மூத்த புதல்வி. பாரதியின் அபிமான புத்திரி.
பாரதி புதுவையில் இருந்த போது இருவரது குடும்பமும் மிகவும் நெருக்கமாக இருந்தது.
யதுகிரி அம்மாள் பாரதியின் மடியில் தவழ்ந்த குழந்தை. அவரது பாடல்களைக் கேட்டு வளர்ந்த சிறுமி. அவருடன் வாதிட்டு விளக்கம் பெற்ற பெண்மணி.
அந்த வகையில் பாரதி குறித்த இவரது எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்நுலைப் பதிப்பித்து வெளியிட்ட பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன், “பாரதியின் அன்புக்குப் பாத்திரமான சிறுமி என்ற கோணத்திலிருந்து பாரதியை ஒரு மனிதராக, குடும்பத் தலைவராக நம் முன் கொணர்ந்து நிறுத்துகிறார் யதுகிரி அம்மாள். இதில் அவர் கையாளும் ‘வீட்டு நடை’ அவரது நூலுக்கு ஒரு தனிச்சுவை அளிக்கிறது.”
உண்மை தான். 1912 முதல் 1918 வரையிலான அரிய விஷயங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் யதுகிரி அம்மாள்.
“பாரதியார் வாயால் பெண்கள் சுதந்திரம் பாடினாரே ஒழியச் செல்லம்மாவைத் தன் நோக்கத்தின் படியேதான் நடக்கும் படி செய்தார். செல்லம்மா தமதிஷ்டப்படி நடப்பது வெகு அபூர்வமே.”
“செல்லம்மா எவ்வளவு முறையிட்டும் பாரதியார் மௌன விரதத்தை மாதக்கணக்காக அனுஷ்டித்தார். ஒருதரம் நாற்பது நாள் விரதமிருந்து கவிதைகள் செய்தார்.”
“பாரதியார் முன்போல் இல்லை. அவர் போக்கு வேகமாய் மாறிக்கொண்டு வந்தது. யாரோ அவரை தப்பு வழிகளில் இழுக்கிறார்கள் என்று தோன்றிற்று. ஆனாலும் யாராலும் அவர் போக்கை மாற்ற முடியவில்லை. செல்லம்மாவின் வேண்டுகோள்களையும் தள்ளிவிட்டு அவர் முன்போகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
பாரதி: யதுகிரி நான் புதிய வழி தேடிக்கொண்டிருக்கிறேன்.
நான்: அது என்ன வழி?
பாரதி: சாகாமல் இருக்க வேண்டும். அதைக் கண்டுபிடிக்கப் போகிறேன்.
நான்: எல்லா அதிசயமும் செய்யலாம். ஆனால் சாகாமல் இருக்க முடியாது என்று எல்லோரும் சொல்கிறார்கள். நீர் அதைக் கண்டுபிடித்தால் மிகவும் அதிசயமே.
பாரதி: நான் பிரயத்தனப்படுகிறேன். அது கட்டாயமாக எட்டும் என்று தோன்றுகிறது.”
நான் அவரை உற்றுப் பார்த்தேன். வெறும் எலும்புக்கூடு! சிவப்பான கண்கள்! துர்ப்பலமான உடம்பு! பார்க்க சகிக்கவில்லை!
என் மனதில் இருப்பதை அறிந்து கொண்டவர் போல, “நான் புதிய வழியில் யோகசாதனம் செய்கிறேன். அதனால் உடம்பு இளைத்திருக்கிறது“ என்று அறிவித்தார்.
“சித்திரை மாதம் புறப்படுகிற தினம் காலையில் பாரதியார் வந்திருந்தார். ஷேமலாபங்களை விசாரித்து விட்டு எங்கள் வீட்டு வாசலிலே முக ஷவரம் செய்து கொண்டார். “இன்று ஷவரத்துக்கு நாள் நல்லாயில்லை என்று செல்லம்மா தடுத்தாள். அதற்காக இங்கே செய்து கொண்டேன் “ என்றார்.
புதன், 7 செப்டம்பர், 2022
கோப்பெருஞ்சிங்கன் - ஆ.கூடலூர்
கண்டேன்… கண்டேன்… கோப்பெருஞ்சிங்கனைக் கண்டேன்…
ஆ.கூடலூர் (ஆயந்தூர் கூடலூர்). விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் முகையூருக்கு முன்னதாகவே இருக்கும் கிராமம்.
இங்கிருக்கும் குளக்கரையில் புதிதாக எழுந்து நிற்கிறது: தையல் நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் ஆலயம்.
கிராமத்தில் பல்வேறு இடங்களில் கிடைத்திட்ட இறை சிற்பங்கள் பல, மேற்காணும் ஆலய வளாகத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன.
இதோ, விநாயகர் சன்னதியையொட்டி இரண்டு சிற்பங்கள் வெளியே நின்றிருக்கின்றன.
அதில் ஒருவர் கைகளை கூப்பி வணங்கிய நிலையில் நின்றிருக்கிறார். இவரை “ரிஷி” என வணங்கி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.
சுமார் மூன்று அடி உயரம் இருக்கும் இவரைச் சற்று உற்று நோக்குவோம்.
முகத்தில் முறுக்கிய மீசை. கழுத்திலும் கைகளிலும் அழகிய ஆபரணங்கள். நன்றாக சரிந்தத் தொந்தி. இடைகள், குறுவாள்களைத் தாங்கி நிற்கின்றன. இடையைச் சுற்றி அழகான ஆடை.
இந்த உருவம், வேறொருவரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறதே! ஆமாம். சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் நின்றிருப்பர் நம் நினைவில் வருகிறார்.
ஆம். அவரே தான் இவர்!
இவரே தான் அவர்!
அவர் வேறு யாருமல்ல; காடவராய மன்னன் கோப்பெருஞ்சிங்கன்.
கெடிலம் நதிக்கரையில் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தியவர். “சகலபுவன சக்கரவர்த்தி, அவணியாளப் பிறந்தான், பரதம்வல்ல பெருமான், தமிழ்நாடு காத்தான்” உள்ளிட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர்!
இவர் காலத்தில் ஏராளமான கோயில்களுக்கு எண்ணற்ற திருப்பணிகள். திருவெண்ணெய்நல்லூர் – திருவாமாத்தூர் – திருக்கோவிலூர் …
என இப்பகுதிக் கோயில்களின் பட்டியல் இன்னமும் நீளும்!
கோப்பெருஞ்சிங்கன் சிற்பம் தில்லை கிழக்கு கோபுரத்தில் இடம்பெற்றிருக்கிறது.
செஞ்சியை அடுத்த அண்ணமங்கலத்தில் பாறையில் புடைப்புச் சிற்பமாக இடம்பெற்று இருக்கிறார்.
அதற்கடுத்து, ஆ.கூடலூர் கிராமத்தில் தான், இதோ இங்கு தான் நமக்குத் தனிச் சிற்பமாகக் காட்சி தருகிறார் கோப்பெருஞ்சிங்கன்.
அந்த வகையில் வரலாற்றில் இடம்பெறுகிறது, ஆயந்தூர் கூடலூர்.
உடன் வந்து உதவிய உள்ளூர் நண்பர் ஆசிரியர் திரு. மூர்த்தி,
வழிகாட்டி உதவிய திருமதி. Mangai Ragavan
பயணத்தில் உதவிய Radhakrishnan Rajendran
ஆகியோருக்கு நம் நன்றிகள்..!
அன்புடன்,
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்