புதன், 28 ஜூன், 2017

வரலாற்றை மறைத்தக் கல்வித்துறை...

1940-50களில் தென்னார்க்காடு மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி,
மாவட்டப் பிரிவினைக்குப் பின்னர்
90களின் இறுதியில்
மாவட்டத் திட்ட அலுவலகம்,
அரசு இசைப் பயிற்சிப் பள்ளி,
மகளிர் மேனிலைப் பள்ளி,
அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி அலுவலகம்,
தற்போது, அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகம்.

இப்படியாக பல்துறைகளைச் சந்தித்த விழுப்புரத்தின் ஒரே கட்டடம் இதுவாகத்தான் இருக்கும்.

திரு.வி.க வீதியில் பெரியார் சிலைக்குப் பின்புறமாக அமைந்துள்ள இக்கட்டடத்தின் வயது 102.

ஆமாம், உண்மைதான். முன்சீப் நீதிமன்றம், பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை தொடங்கப்பட்ட போது, அதே வளாகத்தில் இந்தக் கட்டடமும் அமைக்கப்பட்டது.

தொடக்கத்தில் தென்னார்க்காடு மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் ஒரு பகுதி இயங்கிய இக்கட்டடம்தான் காலப்போக்கில் இத்தனை வடிவங்களையும் பெற்றது.

இந்தக் கட்டடத்தின் வயதைக் குறிக்கும் வகையில் இதன் முகப்பில் ‘1905 என்று தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது.


2010இல் கல்வித்துறையிடம் இந்த இடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. அப்போது முகப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதே வேகத்தில், முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த ஆண்டையும் மறைத்து, புதிய முகப்பு (போர்டிகோ) அமைக்கப்பட்டது.


மறைக்கப்பட்டது சில எண்கள்தானே என கல்வித்துறையினர் நினைத்தார்களோ என்னவோ?

மறைக்கப்பட்டது சில எண்கள் அல்ல, கட்டடத்தின் வரலாற்றைச் சொல்லும் ஒரு முக்கிய குறிப்பு!


உரியவர்கள் இதை உணரவில்லை என்பதுதான் நம்முடைய வேதனை..!

 

திங்கள், 26 ஜூன், 2017

டவுண் போலீஸ் லைன்.

டவுண் போலீஸ் லைன்.

விழுப்புரம் வாசிகள் ஏறக்குறைய இந்தப் பெயரையே மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

“உங்களுக்கு மட்டும் ஞாபகம் இருக்கிறதாக்கும்?“ என்னை நீங்கள் கேட்கலாம்.
நிச்சயமாக இருக்கிறது.

முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான நவாப்தோப்பு தொடக்கப் பள்ளியில், என் படிப்பை தொடர்வதற்கு மிகவும் உதவிய பகுதியாயிற்றே.

ஆமாம். முருங்கப்பாளையத் தெருவையும் நவாப் தோப்பையும் இணைத்ததுதான் இந்த போலீஸ் லைன்.

லைனின் தெற்குப் பகுதியின் நுழைவு வாயிலில், தற்போது டிஎஸ்பி அலுவலகம் இருக்கும் இடத்தில் பராமரிப்பில்லாத பூங்கா இருந்தது. அதற்கு எதிரே கிழக்கில் ஒரு பாழடைந்த வீடு.

அப்புறம் உள்ளே போக போக அடர்ந்தப் புதர்கள்.

வடக்குப் பகுதி நுழைவு வாயிலையொட்டி, விரல்விட்டு எண்ணத்தக்கக் காவலர் குடியிருப்புகள். “விட்டோபா போன்ற போலீசார் அதில் குடியிருந்ததாக நினைவு.

பள்ளிக்கு நல்ல பிள்ளையாக நடந்துச் சென்றது, செல்ல மறுத்தபோது புழுதி பறக்க தரதரவென இழுத்துச் செல்லப்பட்டது, நண்பர்களுடன் பட்டம் விட்டது, கோலி விளையாடியது என எத்தனையோ நினைவுகளைத் தந்தது இந்த போலீஸ் லைன்.

பின்னர் ஒருநாள் இவையெல்லாம் மாறிப்போனது. வடக்குப் பகுதியில் புதிய காவலர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. தெற்கில் காவல் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் உருவாயின.

இடையில் நவாப் தோப்புக்குச் செல்லும் வழி தடைபட்டது.

காலப்போக்கில் “போலீஸ் லைன்“ எனும் பெயரும்கூட மறக்கடிக்கப்பட்டது.

ஆனால், இன்றும் ஓரிடத்தில் அந்தப் பெயர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அதோ, நகராட்சி மைதானத்தையொட்டி செல்லும் தார் சாலைக்கு அருகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த அரச மரத்தின் கீழ், திறந்த வெளியில் இயங்கி வருகிறது “சர்வ சக்தி செல்ல முத்து மாரியம்மன் கோயில்“.

இதன் பெயர்ப் பலகையை அண்மையில் கவனித்தேன்.

அதில் இப்படி எழுதப்பட்டு இருக்கிறது,
“டவுண் போலீஸ் லைன்-விழுப்புரம்”.

ஆஹா... போலீஸ் லைன் எனும் பெயரானது இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..!

ஞாயிறு, 25 ஜூன், 2017

‘மதவெறி எதிர்ப்போம் - மனித நேயம் காப்போம் எனும் முழுக்கத்துடன் கூடிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.இராம மூர்த்தி (சிபிஎம்) அவர்கள் இன்று (25.06.2017) ஏற்பாடு செய்திருந்தார்.
விழுப்புரம் போதி அகாடமியில்தான் இந்தக் கூட்டம் நடந்தது. 30 பேருக்குக் குறையாமல் இதில் கலந்து கொண்டனர்.
பேசியவர்கள் பெரும்பாலோர் பாஜக, ஆர்எஸ்எஸ், மோடியின் காவி அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள்.
(கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த நூல் அறிமுகக் கூட்டம் ஒன்றில், நாட்டில் இயங்கும் கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சிம்மக் குரலில் கர்ஜித்த தோழர் ஒருவர், மறந்தும்கூட அதுபற்றி இங்குப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
நான் பேசும்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி அவர்களுக்கு உள்ளூர் அளவில் ஜனநாயக சக்திகளை திரட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம்.. அவரது முயற்சி வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தினேன்.


பிஜேபி, ஆர்எஸ்எஸ், மோடியின் மதவெறி அரசியலுக்கு எதிராக உள்ளூர் அளவில் அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என இதில் ஆலோசிக்கப்பட்டது.
ஆனால், அமைப்பின் பெயரில் ‘மதம் வார்த்தை வரக்கூடாது என்று சொல்லப்பட்டது.
பல தரப்பட்டவர்களையும் இந்த அமைப்பில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதற்கான ‘செயல்தந்திரம் என்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கிடையே, ‘பிற்போக்கு எதிர்ப்பு இயக்கம் எனும் பெயரை பேரா.த.பழமலய் முன்மொழிந்தார். அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஒருவழியாக ‘மதம் கலக்காத பெயர் ஒன்றைச் சூட்டினர்.
சரி, இந்தப் புதிய அமைப்பிற்குப் பின்னணியிலும் ஏதாவது அரசியல் இருக்கிறதா?
‘இருக்கிறது என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார், முன்னாள் எம்எல்ஏ அவர்கள்.
‘அது என்ன அரசியல்? நான் கேட்டேன்.
‘அதை இங்குச் சொல்ல முடியாது மீண்டும் அழுத்தமாகச் சொன்னார் அவர்.  

தோழர் குறிப்பிடுவது என்ன அரசியலாக இருக்கும்..? 

வியாழன், 22 ஜூன், 2017

நகரத்தின் இதயந்தான் இந்தப் பகுதி.

இங்க
நூற்றாண்டு கண்ட கட்டடமும் இருக்கு.
நவீன பிரம்மாண்ட கட்டடமும் இருக்கு.

பழசையும் புதுசையும் இணைக்க
சாலையின் குறுக்கே மேம்பாலம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அதிசயம்.

மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும்
படையெடுக்கும் மாணவிகள்.
அவர்களுக்குப் பாடம் நடத்த உரிய ஆசிரியர்கள்.

மகிழ்ச்சி.

ரெண்டு கட்டடத்துலயும்
கல்யாணம் முதல் கருமாதி வரை
போஸ்டர் ஒட்ட
காம்பவுண்டு சுவர்களும் இருக்கு.

எல்லாம்தான் இருக்கு.

ஆனா முகப்புல பெயர்ப் பலகையத்தான் காணோம்!

இதபத்தி யார்தான் கவலைப்படுவார்..?

இடம்: அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, திரு.வி.க. வீதி, விழுப்புரம்.

செவ்வாய், 20 ஜூன், 2017

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்...




இப்புகைப்படத்தில் உள்ள பழைய கட்டடத்தைப் பலரும் பார்த்திருக்கலாம். சிலருக்குப் பழக்கமும் இருந்திருக்கலாம். இன்னும் சிலர் இதில் பணியாற்றியவர்களாகவும் இருக்கலாம்.

எனக்கு?

இந்தக்  கட்டடத்துடனானப் பழக்கம், 20 ஆண்டுகளுக்கும் மேல்!

பத்திரிகையாளனாக… இரவு, பகல், கொளுத்தும் வெயில், நள்ளிரவு என பல வேளைகளில் இந்தக் கட்டடத்தைச் சுற்றி வந்திருக்கிறேன்.

எண்ணற்ற நினைவுகள். என்னை இப்போதும் வட்டமிடுகின்றன. இருக்கட்டும்.

விசயத்துக்கு வருவோம்.

இந்தக் கட்டடம் வந்ததன் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது.

1978 ஜுலையில் விழுப்புரத்தில் மிகப்பெரிய கலவரம். தாழ்த்தப்பட்டவர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த, தமிழக அரசு நீதிபதி சதாசிவம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது.

இவ்விசாரைணக் குழு சொன்ன பரிந்துரைகளில் ஒன்று, “பெரியகாலனி, பஸ் நிலையம் அமைந்துள்ளப் பகுதியில் காவல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும்“- என்பது.

நான்குமுனைச் சந்திப்புக்கு அருகில் சுகாதாரத்துறைக்குச் சொந்தமான இடம் காவல் நிலையம் கட்டுவதற்குத் தேர்வு செய்யப்பட்டது.

கட்டடம் கட்டப்பட்டு, 16.10.1981இல் “மேற்குக் காவல் நிலையம்திறக்கப்பட்டது.

திறந்து வைத்தவர், அன்றைய தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியர் திருமதி. சந்திரலேகா. (பின்னாளில் இவர் ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தார்)

திறக்கப்பட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகு மேற்குக் காவல் நிலையத்தின் ஒரு பகுதி மாற்றம் கண்டது.

அண்மையில் மேற்கு காவல் நிலையம் புதிய கட்டடத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டது.


ஆனாலும், பழைய கட்டடத்தின் பின்னணியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, பழைய மேற்கு காவல் நிலையம்!  

ஞாயிறு, 18 ஜூன், 2017

விக்கி பீடியா அறிமுகம்...


கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம்-விழுப்புரம், புதுச்சேரி அமைப்பின் சார்பில் ‘விக்கி பீடியா அறிமுகமும் பங்களிப்பும் குறித்தானக் கருத்தரங்கம் விழுப்புரத்தில் (18.06.2017) இன்று நடந்தது.
நண்பர்கள் இரவிகார்த்திகேயன், கார்க்கி உதயன் ஆகியோரின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.
வந்திருந்தவர்களின் பெரும்பாலானோர் புதிய முகங்கள். இளைஞர்கள்.
விழுப்புரத்தில் இருந்து மட்டுமல்ல கடலூர், புதுவைப் பகுதிகளில் இருந்தும் வந்திருந்தார்கள். மகிழ்ச்சி.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சுந்தர ராமசாமி நினைவு கணிமை விருது பெறும் த.சீனிவாசன் (சென்னை) அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்குபெற்றிருந்தார்.
விக்கி பீடியா குறித்தும், அதில் நம்முடைய பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் மிகவும் விளக்கமாகவே பேசினார்.
அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
மேலும், (நான் உள்ளிட்ட) வந்திருந்தவர்களின் சந்தேகங்களுக்கும் விடையளித்தார்.
என்னுடைய முறை வரும்போது நான் சொன்னேன்,
‘தமிழில் இல்லாத விவரங்களே இல்லை. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரைக்குமான அனைத்துக் கலைச் சொற்களும் தமிழில் விரவியுள்ளன.
நாம் அவற்றை விரிவாக வாசிக்க வேண்டும். குறிப்பாக, முக நூல் போன்றவற்றில் லைக், ஷேர் என்பனவற்றையும் தாண்டி எழுத வேண்டும்.
இளைஞர்கள் எழுதத் தொடங்கினால்தான், தமிழ் இணையத்தில் நாம் தேடும் அனைத்திற்கும் விடை கிடைக்கும் என்று குறிப்பிட்டேன்.

இளைய நண்பர்கள் இதை உள்வாங்கியிருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது!    


விழுப்புரம் ரயில்வே மேம்பாலப் பணியை துரிதப்படுத்தக் கோரி நடந்த தர்ணா போராட்டத்தைத் துவக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இப்போதல்ல, 27 ஆண்டுகளுக்கு முன்பு!
ஆம். விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடில் உள்ள ரயில்வே மேம்பாலமானது ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. முதன் முறையாக 1960இல் இதன் சீரமைப்புப் பணிகள் நடந்தன.
இதனைத் தொடர்ந்து 1990இல் இரண்டாவது முறையாகச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தாண்டு மே மாதவாக்கில் தொடங்கியப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்தன. மேலும், மாற்றுப் பாதைக்கான (பவர் அவுஸ் ரோடு-மருதூர்) திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
அப்போது விழுப்புரத்தில் இயங்கிவந்த பல்வேறு அமைப்பினரைக் கொண்ட நகரநலக் கூட்டு நடவடிக்கைக் குழுவானது, இதற்காகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக 4.9.1990இல் விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்தைத் துவக்கி வைக்கும் வாய்ப்பு, நெம்புகோல் அமைப்பைச் சேர்ந்த எனக்குக் கிடைத்தது.
அந்நேரத்தில் விழுப்புரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.பொன்முடி. அமைச்சர். “மாற்றுப் பாதைக்கு ஏற்பாடு செய்யுங்கள்அவரை நோக்கித்தான் கோரிக்கை வைத்தோம். உடனடியாக அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு மருதூர் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இப்போதும் அதே மாற்றுப் பாதையைத்தான் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி இருக்கிறார் திரு.க.பொன்முடி எம்.எல்.ஏ. அவர்கள்!