செவ்வாய், 20 ஜூன், 2017

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்...




இப்புகைப்படத்தில் உள்ள பழைய கட்டடத்தைப் பலரும் பார்த்திருக்கலாம். சிலருக்குப் பழக்கமும் இருந்திருக்கலாம். இன்னும் சிலர் இதில் பணியாற்றியவர்களாகவும் இருக்கலாம்.

எனக்கு?

இந்தக்  கட்டடத்துடனானப் பழக்கம், 20 ஆண்டுகளுக்கும் மேல்!

பத்திரிகையாளனாக… இரவு, பகல், கொளுத்தும் வெயில், நள்ளிரவு என பல வேளைகளில் இந்தக் கட்டடத்தைச் சுற்றி வந்திருக்கிறேன்.

எண்ணற்ற நினைவுகள். என்னை இப்போதும் வட்டமிடுகின்றன. இருக்கட்டும்.

விசயத்துக்கு வருவோம்.

இந்தக் கட்டடம் வந்ததன் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது.

1978 ஜுலையில் விழுப்புரத்தில் மிகப்பெரிய கலவரம். தாழ்த்தப்பட்டவர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த, தமிழக அரசு நீதிபதி சதாசிவம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது.

இவ்விசாரைணக் குழு சொன்ன பரிந்துரைகளில் ஒன்று, “பெரியகாலனி, பஸ் நிலையம் அமைந்துள்ளப் பகுதியில் காவல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும்“- என்பது.

நான்குமுனைச் சந்திப்புக்கு அருகில் சுகாதாரத்துறைக்குச் சொந்தமான இடம் காவல் நிலையம் கட்டுவதற்குத் தேர்வு செய்யப்பட்டது.

கட்டடம் கட்டப்பட்டு, 16.10.1981இல் “மேற்குக் காவல் நிலையம்திறக்கப்பட்டது.

திறந்து வைத்தவர், அன்றைய தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியர் திருமதி. சந்திரலேகா. (பின்னாளில் இவர் ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தார்)

திறக்கப்பட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகு மேற்குக் காவல் நிலையத்தின் ஒரு பகுதி மாற்றம் கண்டது.

அண்மையில் மேற்கு காவல் நிலையம் புதிய கட்டடத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டது.


ஆனாலும், பழைய கட்டடத்தின் பின்னணியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, பழைய மேற்கு காவல் நிலையம்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக