டவுண் போலீஸ் லைன்.
விழுப்புரம் வாசிகள் ஏறக்குறைய இந்தப் பெயரையே மறந்திருப்பார்கள்
என்று நினைக்கிறேன்.
“உங்களுக்கு மட்டும் ஞாபகம் இருக்கிறதாக்கும்?“ என்னை நீங்கள்
கேட்கலாம்.
நிச்சயமாக இருக்கிறது.
முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான நவாப்தோப்பு தொடக்கப்
பள்ளியில், என் படிப்பை தொடர்வதற்கு மிகவும் உதவிய பகுதியாயிற்றே.
ஆமாம். முருங்கப்பாளையத் தெருவையும் நவாப் தோப்பையும் இணைத்ததுதான்
இந்த போலீஸ் லைன்.
லைனின் தெற்குப் பகுதியின் நுழைவு வாயிலில், தற்போது டிஎஸ்பி
அலுவலகம் இருக்கும் இடத்தில் பராமரிப்பில்லாத பூங்கா இருந்தது. அதற்கு எதிரே
கிழக்கில் ஒரு பாழடைந்த வீடு.
அப்புறம் உள்ளே போக போக அடர்ந்தப் புதர்கள்.
வடக்குப் பகுதி நுழைவு வாயிலையொட்டி, விரல்விட்டு எண்ணத்தக்கக்
காவலர் குடியிருப்புகள். “விட்டோபா”
போன்ற போலீசார் அதில் குடியிருந்ததாக நினைவு.
பள்ளிக்கு நல்ல பிள்ளையாக நடந்துச் சென்றது, செல்ல மறுத்தபோது புழுதி
பறக்க தரதரவென இழுத்துச் செல்லப்பட்டது, நண்பர்களுடன் பட்டம் விட்டது, கோலி
விளையாடியது என எத்தனையோ நினைவுகளைத் தந்தது இந்த போலீஸ் லைன்.
பின்னர் ஒருநாள் இவையெல்லாம் மாறிப்போனது. வடக்குப் பகுதியில் புதிய
காவலர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. தெற்கில் காவல் அதிகாரிகளுக்கான
குடியிருப்புகள் உருவாயின.
இடையில் நவாப் தோப்புக்குச் செல்லும் வழி தடைபட்டது.
காலப்போக்கில் “போலீஸ் லைன்“ எனும் பெயரும்கூட மறக்கடிக்கப்பட்டது.
ஆனால், இன்றும் ஓரிடத்தில் அந்தப் பெயர் வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது.
அதோ, நகராட்சி மைதானத்தையொட்டி செல்லும் தார் சாலைக்கு அருகில் 40
ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த அரச மரத்தின் கீழ், திறந்த வெளியில் இயங்கி வருகிறது
“சர்வ சக்தி செல்ல முத்து மாரியம்மன் கோயில்“.
இதன் பெயர்ப் பலகையை அண்மையில் கவனித்தேன்.
அதில் இப்படி எழுதப்பட்டு இருக்கிறது,
“டவுண் போலீஸ் லைன்-விழுப்புரம்”.
ஆஹா...
போலீஸ் லைன் எனும் பெயரானது இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக