ஞாயிறு, 29 ஜூலை, 2018

விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் ஓவியம்

' சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' நாம் அடிக்கடி சொல்வதுண்டு.

விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் பாருங்கள், சுவர் முழுக்கத் சித்திரங்கள்!

இந்தத் தூரிகைகளுக்குச் சொந்தக்காரர்கள், ' நம்ம விழுப்புரம்' குழுவில் உள்ள இளைஞர்கள் தாம்.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு மேல் இந்த ஓவியம் தீட்டும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். வாழ்த்துகள் நண்பர்களே!

விழுப்புரம் நகராட்சிப் பூங்காவின் வயது 67. இந்நகரத்தின் தனித்த அடையாளமாக இருப்பது.

இந்த அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளுள் ஒன்றுதான், நம்ம விழுப்புரம்’ குழுவில் நண்பர்களின் வண்ணந் தீட்டுதல்.

இப்பணிகள் ஓரளவுக்கு நிறைவுற்ற நிலையில், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் இனிய நிகழ்வு இன்று (29.07.2018) காலை நடந்தது.
விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், நகராட்சி ஆணையர் ( பொறுப்பு) டாக்டர் எம்.டி.ராஜா ஆகியோருடன், பங்கேற்கும் வாய்ப்பு எனக்கும் வழங்கப்பட்டது.

வழக்கம் போல் பூங்காவின் வரலாற்றினைத் தொட்டுக் காட்டினேன். நண்பர்களுக்கு மகிழ்ச்சி. நமக்கு மன நிறைவு!

சமூகப் பணியில் தங்களை ஈடுபடுத்தி பணியாற்றி வரும் நம்ம விழுப்புரம் குழு நண்பர்களின் பணித் தொடர வாழ்த்துகள்..!






செவ்வாய், 24 ஜூலை, 2018

டாக்டர் ஐயாவுக்கு இன்று பிறந்தநாள்

1990 களின் தொடக்கம். தினப்புரட்சி நாளேட்டிற்கு, நான் விழுப்புரம் மாவட்ட நிருபர்.

ஆனால், மதிப்பிற்குரிய இந்தத் தலைவரை நான் நேரடியாக அப்போது சந்தித்தது கிடையாது.

பிறகு, பல்வேறு பத்திரிகைகளில் நமதுப் பயணம் தொடர்ந்தது.ஏராளமான பத்திரிகையாளர் சந்திப்புகளில் சந்தித்து இருக்கிறேன்.

90களின் இறுதியில் விழுப்புரம் மாவட்ட சன் டிவி நிருபராக இருந்தபோது, மதிப்பிற்குரிய தலைவருக்கு மிக அருகிலேயே, மைக் பிடிக்க வேண்டும் அல்லவா, அமர்ந்து பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிட்டியது.

ஒவ்வொரு புத்தாண்டின் போதும், முன்பு, திண்டிவனத்திலும், பிறகு தைலாபுரத்திலும், புத்தாண்டு வாழ்த்துகளுடன் சந்திப்போம்.

திண்டிவனம் இல்லம் முன்பு, இவரது பேட்டிக்காக அதிகாலை நேரத்திலேயே தவம் கிடந்த நாள்களும் உண்டு.

அம்பேத்கர் சிலை அவமதிப்பு சம்பவத்தில் நீதிக் கேட்டு, இந்த அரசியல் ஆளுமை, சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருந்த போது,  பதட்டம் மிகுந்த அந்தத் தருணத்தில், கவலையுடன் அந்தப் பந்தலில் இருந்த பத்திரிகையாளர்களின் இந்த, விழுப்புரம் செங்குட்டுவனும் ஒருவன்.

அப்புறம், தைலாபுரம் தோட்ட இல்லத்தில்… வாரந்தோறும் சந்திப்பு. மறக்க இயலா தருணங்கள் அவை. நிறைய எழுதலாம்!

எத்தனை விதமானக் கேள்விகள். யோசிப்பதில்லை. பூசி மெழுகும் போக்கும் கிடையாது. ஆடம்பர, அலங்கார வார்த்தைகள் இல்லை.

எதார்த்தமான பதில்.

இந்த எதார்த்தம் அண்மைய அரசியலுக்கு சரிப்பட்டு வருமா? பல நேரங்களில் நான் யோசித்தது உண்டு.

11.1.2008.  பொங்கல் நேரம். தைலாபுரம் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களுக்கு டைரி வழங்கினார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் டைரி அது.

மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட நான், ‘'ஐயா இதில் எழுதிக் கொடுங்கள்' டைரியை அவரிடம் நீட்டினேன்.

அதில் அவர் எழுதிய வாசகம்:

“தாய் வளர்த்து
நாம் வளர்ந்தோம்
தமிழ் வளர்த்து
நாம் வாழ்வோம்”



 நன்றிகளும், வாழ்த்துகளும் ஐயா…

அன்புடன்,
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்.
மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.


திங்கள், 23 ஜூலை, 2018

விழுப்புரம்: விடிந்தும் எரியும் தெரு விளக்குகள்

நம்ம மக்கள்
தெரு விளக்குகள் எரியலைன்னாலும் கவலைப்பட மாட்டாங்க
விடிய விடிய எரிஞ்சாலும் கவலைப்பட மாட்டார்கள்!

அவ்வளவு உத்தமர்களாக நாம மாறிட்டோம்.

இணைப்பில் உள்ள படங்கள் இன்று (24.07.2018) காலை சற்று நேரத்துக்கு முன்பு ( மணி 8.45) எடுக்கப்பட்டவை.

விழுப்புரம் கன்னியாகுளம் சாலையில் உள்ள சிவராமன் லே அவுட், வில்லியம் லே அவுட் 1,2,3 மற்றும் குறுக்குத் தெரு ஆகிய 5 தெருக்களில் காலை எட்டரை மணியைக் கடந்தும் தெரு விளக்குகள் எரிந்து கொண்டு இருக்கின்றன.

இன்று மட்டும் அல்ல. தினமும் இப்படித்தான்.

இத்தனைக்கும், வில்லியம் லே அவுட் முதல் தெருவில் உள்ள கம்பத்தில் தான் இதற்கான சுவிட்ச் பெட்டியும் இருக்கிறது.

இதை முறையாகச் செய்ய வேண்டியது நகராட்சி நிர்வாகம் தான். மறுக்கவில்லை.

இப்படியாக வீணாகிப் போகும் மின்சாரத்துக்கானக் கட்டணம், நம்ம வரிப்பணத்தில் இருந்து தான் போகிறது எனும் உணர்வு அந்தப் பகுதி மக்களிடம் இருக்க வேண்டாம்?

எல்லா விசயத்திலுமா' யார் வீட்டு எழவோ பாய் போட்டு அழவோ என்று இருப்பது?

இவ்வளவு சொல்றீங்களே, நீங்க என்ன செய்யறீங்க? நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

எதிர் தெருவில் வசிக்கும் நான்,
தினமும் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், காலம் கடந்து எரிந்து கிடக்கும் மின்

விளக்குகளை நிறுத்தும் திருப்பணியைச் செய்து வருகிறேன்.

ஞாயிறு, 22 ஜூலை, 2018

விழுப்புரம் எம்.ஜி.ரோடு

எப்படியும் 1994ஆம் ஆண்டில் இந்தப் படத்தை எடுத்திருப்பேன்!

உபயம்: யாஷிகா கேமரா.

மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகம் இருக்கிறது.
உம். அப்புறம்
 டீலக்ஸ் துணிக்கடை,
ஏ.ரத்தினசாமி நாடார் மளிகைக் கடை தெரிகின்றன.

‘நெரிசலுடன் காட்சி அளிக்கும் விழுப்புரம் எம்.ஜி.ரோடு’
எனும் செய்திக்காக நான் எடுத்தப் புகைப்படம் இது…

கருப்பு வெள்ளை நினைவுகளுக்காக..
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்.

வெள்ளி, 20 ஜூலை, 2018

இதுவும் ஒரு கல்வெட்டு தான்

விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் இன்றைய நண்பகல் பொழுது கழிந்தது.

பன்னிரண்டாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்காக மகளுடன் சென்றிருந்தேன்.

தங்களுக்கும் தங்கள் பள்ளிக்கும், ஏன் இந்த மாவட்டத்திற்கே பெருமை சேர்த்தத், தங்களின் முன்னாள் மாணவியை ஆசிரியப் பெருமக்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்தனர்.

அந்த பெருமைக்கு உரிய மகளின் தந்தையாய், ஓரத்தில் நின்று பார்த்து மகிழ்ந்தேன்.

இன்னும், பயாலஜி மற்றும் காமர்ஸ் வகுப்புகளில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றக் கூடிய வாய்ப்பும் என் மகளுக்குக் கிடைத்தது.

' நல்ல மதிப்பெண் எடுத்து மெரிட்டில் பாஸ் செய்தால் நாம் நினைத்தக் கல்வியைப் பெறலாம். மேலும், மெரிட் மூலமாக இட ஒதுக்கீட்டில்  பெற்றோருக்கானக் கல்விச் செலவு சுமையை நம்மால் குறைக்க முடியும்' என்பது இம்மாணவியின் அனுபவ உரையில் இருந்தது.

வெளியில் வரும்போது தான் பார்த்தோம். அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் ஆண்டு தோறும் முதலிடம் பெறும் மாணவர்களின் பெயர் பட்டியல்.

அதன் இறுதியில் இந்தாண்டு முதலிடம்: punithavathi s 1176.

இந்தப் பலகையும் ஒருவகையில் கல்வெட்டு தான்..!



சனி, 14 ஜூலை, 2018

தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி அவர்களுடன் சந்திப்பு

இவரது பல நூல்களை நான் படித்து வியந்து இருக்கிறேன்.

இவரது அயராத ஆய்வுப் பணி எனக்குள் மலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நான் சந்திக்க ஆவல் கொண்டச் சிறந்த மனிதர்.

இவர் தான், தொல்லியல் அறிஞர் திரு.மா.சந்திரமூர்த்தி அவர்கள்.

தமிழக அரசின் தொல்லியல் துறையில் நாற்பது ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஐயா அவர்களுடன் தொலைப்பேசியில் அடிக்கடி பேசியதுண்டு. ஆனால் நேரில் தான் சந்தித்தது கிடையாது.

இன்று (14.07.2018) மாலை அந்தக் குறை தீர்ந்தது.

விழுப்புரம்  வந்திருந்த ஐயா அவர்களைச் சந்தித்து உரையாடினேன்.
 உரையாடல் நீண்டது.

தொண்டை மண்டலத்தின் தொன்மை, சிறப்புகள் குறித்து விரிவாகவே பேசினோம்.

ஏராளமான நூல்களைப் படைத்துள்ள ஐயா சந்திரமூர்த்தி அவர்கள்,
தற்போது மேல்மருவத்தூர் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிவாலயங்கள் குறித்த நூல் ஒன்றை தற்போது தயாரித்து இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நூலாக்கத்தின் போது மேல்மருவத்தூர் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏராளமான தொன்மை வரலாற்றுச் சான்றுகளை கண்டறிந்திருப்பதாகத் தெரிவித்தார்.

பேச்சின் ஊடாக,
பாறை ஓவியங்கள் என்ன, கல்வெட்டுகள் என்ன, சிற்பங்கள் என்ன


தொண்டை மண்டலம் குறித்துவியந்து விதந்துப் பேசுகிறோம்.

புதன், 11 ஜூலை, 2018

விழுப்புரம்: போலீஸ் பலகையில் பிழை

விழுப்புரத்தின்
பிரிஸ்டாக் ரோடு, வ.உ.சி. தெரு, காந்தி சிலை
ஆகிய இடங்களில் புதிதாக கைகாட்டிப் பலகைகள்!

சிவப்பு நிறத்தில் ஆன அந்தப் பலகைகளில் வெள்ளை நிற எழுத்துக்கள் பளிச்சிடுகின்றன.

அவசியம் தான். குறிப்பிட்ட இடத்தை அடைய கைகாட்டி பலகைகள் அவசியம் தான்.

ஆனால் இதில் உள்ள விசயம்…

' மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்'.

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில்
' உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்’
என்றே இருக்க வேண்டும் என கருதுகிறேன்.

எப்படியோ, மூன்றாவது வரியில், ' விழுப்புரம் உட்கோட்டம்' என்று போட்டுச் சமன் செய்து விட்டார்கள்.

ஆனாலும் கூட என்ன அவசரமோ தெரியவில்லை?

'கண்காணிப்பாளர்' என்பது ' கண்பாணிப்பாளர்' என பிழையுடன் எழுதப்பட்டுள்ளது.

பிழை நிரந்தரமன்று.
திருத்திக் கொள்ளலாம்.
திருத்தப்படும் என்றும் நம்புகிறோம்..!


திங்கள், 2 ஜூலை, 2018

விழுப்புரம்: போக்குவரத்து நெரிசல்

எல்லாம் சிவமயம் என்பது சைவர்களின் நம்பிக்கை.
எல்லாம் கயிறு மயம் என்பது விழுப்புரம் போக்குவரத்து போலீசாரின் நம்பிக்கை!

பாருங்களேன், நகரத்தில் எங்கும் பார்த்தாலும் கூம்புகளும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளுமாகத்தான் காட்சியளிக்கின்றன.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. மகிழ்ச்சி.

ஆனால் பலன்?

நேற்று கூட நேரு வீதியில், கூம்புகளுடன்இணைக்கப்பட்டக் கயிறை போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் திடீரென அரை ஆள் உயரத்துக்கு இழுத்துக் கட்ட, கடைகளுக்கு உள்ளே  சென்றவர்கள் குறிப்பாகப் பெண்கள் கயிறைத் தாண்ட முடியாத நிலை.

இதனால் கயிறை இழுத்துக் கட்டிய போலீஸ் அதிகாரிக்கும், நண்பர் பாபு அச்சகத்தார் பாபுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம்.இறுதியில் கயிறு தளர்ந்தது!

இந்த நெரிசல் விவகாரம் பூதாகரமாக இருப்பது பழைய பஸ் நிலையம் – காந்தி சிலை பகுதிதான்.

என்ன செய்யலாம்?

சாலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாகச் சொல்கிறார்கள்.செய்தால் நல்லதுதான். ஆனால் அது நீண்ட காலத் திட்டம்.

அது நடைமுறைக்கு வரும் வரை ஏதாவது செய்ய வேண்டுமே?

இதற்கு, போக்குவரத்து போலீசார் மட்டுமல்ல சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வணிகர்கள்

அனைவரும் இணைத்துத் திட்டமிடல் அவசியம்.

இப்படியான எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இப்படி எல்லாம் ஒருங்கிணைவு இல்லாமல்
' நான் கட்டுவதைத் கட்டுவேன். நீ எப்படியாவது தாண்டித்தான் போக வேண்டும்' என்று சொல்வதெல்லாம்…

- விழுப்புரத்தார்.